ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

இலங்கை - 15 பயணிகளை பலிவாங்கிய பேருந்து விபத்து: ஓட்டுனரின் இரத்த மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்கு பகுப்பாய்வுக்கு

ஹிருனியுஸ் : இலங்கை ராவண எல்ல வனப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் நாளை (7) மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்காலை நகரசபையின் ஊழியர்கள் குழுவொன்று நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் தங்காலைக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தொன்று, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 15 ஆவது மைல்கல் பகுதியில் சொகுசு வாகனமொன்றுடன் மோதி பின்னர் வீதியின் அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ராவண எல்ல பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 15 பேர் பலியானதுடன், 18 பேர் காயமடைந்தனர்.



சுற்றுலாப் பேருந்தின் சாரதியான தங்காலை, ஹெனகடுவவைச் சேர்ந்த சிரத் திமந்த (25) என்ற இளைஞரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

குறித்த பேருந்தை செலுத்தும் போது அதன் சாரதி போதைப்பொருள் அல்லது மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய, அவரது இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எல்ல காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எல்ல-வெல்லவாய வீதியில் 1,000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து இன்று அதிகாலை பெரும் முயற்சியின் மூலம் மீட்கப்பட்டது.
பேருந்தின் சிதைவுற்ற பாகங்கள் இன்று காலை எல்ல காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனிடையே பேருந்தின் பாகங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட உள்ளன.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் அரோஷ வித்யாபூஷண உள்ளிட்ட குழுவினர் விபத்து நடந்த இடம் மற்றும் பேருந்தின் பாகனங்களை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்து 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதிவிலிருந்து நீக்கப்பட்ட பேருந்து என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கூறுகிறார்.

அதன்படி, இந்த பேருந்து பயணிகள் போக்குவரத்து தொடர்பாக சரியான ஒழுங்குமுறைக்கு உட்பட்டதல்ல என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தேசிய போக்குவரத்து ஆணையக்குழுவில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் தரநிலைகள் சரிபார்க்கப்பட்டாலும், பொழுதுபோக்கு பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்த எந்த சட்டங்களும் இல்லை என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
 

கருத்துகள் இல்லை: