ஞாயிறு, 6 அக்டோபர், 2024

குகையில் இருந்து மீட்கப்பட்ட சாதுவுக்கு வயது 188? 110 ? அதிரும் நெட்டிசன்கள்!

மின்னம்பலம் -Kumaresan M  :  சமீபத்தில் பெங்களூரு அருகே ஒரு குகையில் இருந்து ஒரு மனிதர் மீட்கப்பட்டார். காவி உடையில் உடல் நலிந்து போய் அவர் காணப்பட்டார். நடக்கவே முடியாத நிலையில், இருவர் அவரை கைத்ததாங்கலாக அழைத்து வந்தனர். இவர் மீட்கப்பட்ட  வீடியோவும் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவை மட்டும் 29 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த நிலையில், மீட்கப்பட்ட  சந்தியாசி பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவரின் பெயர் சாய்ராம் பாபா என்பது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்திலுள்ள பாத்யன் ஆசிரமத்தில் வசித்து வந்துள்ளார். சிறந்த ராம பக்தரான இவர் ராமாயணத்தை போதிப்பதையே முதல் பணியாக செய்து வந்தார். ராமாயணம் உள்ளிட்ட நூல்களை கண்ணாடியின் உதவி இல்லாமல்தான் இந்த வயதிலும் படித்து வந்துள்ளார்.

ஒற்றை காலில் நீண்ட நேரமாக தவம் செய்யும் வலிமை கொண்டவர். அதுவும், 10 ஆண்டுகளாக ஒற்றை காலில் நின்றபடி தவம் செய்துள்ளாராம். தவமும் தியானமும் மட்டுமே இவரின் வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. எளிமையான சாய்ராம் பாபாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அவர்கள் ஆசிரமத்துக்கு சென்று பாபாவிடத்தில் ஆசி பெறுவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

திடீரென ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய சாய்ராம் பாபா நடந்தே வந்து பெங்களூரு அருகேயுள்ள குகையில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே,  அவருக்கு வயது 188 ஆவதாகவும் சிலர் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் 120 வயது இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், போலி செய்திகளை ஆய்வு செய்யும் டி இன்டன்ட் தளம் இந்த தகவலை மறுத்துள்ளது. இந்தியாவின் அதிக வயது கொண்டவர் சாய்ராம் பாபாதான் என்றும் அவரின் வயது 110 என்றும் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

–எம்.குமரேசன்

கருத்துகள் இல்லை: