வியாழன், 14 மார்ச், 2024

குடியுரிமை விவகாரம்; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் : இலங்கை தமிழர் விபரங்கள் ஏன்தாக்கல் செய்யப்படவில்லை?

 nakkheeran.in : சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த சுமார் 94 ஆயிரத்து பேரில் 59 ஆயிரத்து 500 பேர் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.
இந்த முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை பெற இயலாத சூழல் நிலவி வருகிறது.
அதே சமயம் அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை கோரி வழங்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


 கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடியுரிமை பெற உரிமை இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (14.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,

“இந்த மனு பொதுப்படையாக உள்ளது. இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் இருப்போர் விவரம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை: