திங்கள், 11 மார்ச், 2024

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குளறு படிகளின் மாநாடு?

May be an image of monument and text
No photo description available.

Subashini Thf :  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடர்பான அண்மைய கால நடவடிக்கைகள் தமிழார்வலர்கள் வருந்தத்தக்க வகையில் தான் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.
தமிழறிஞர் தனிநாயகம் அடிகள், பேரா.வி.ஐ.சுப்பிரமணியன், பேரா. கமில் சுவாலபில் போன்ற உலகத் தமிழறிஞர்களின் பெரும் முயற்சியின் அடிப்படையில் உருவானதுதான்  உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் அதன் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும்.  
1968ஆம் ஆண்டு மாநாட்டின் தொடர்பில் தனிநாயகம் அடிகளாரால் தொகுத்து வெளியிடப்பட்ட Tamil Studies Abroad - A symposium என்ற நூலும் அதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் தமிழ் ஆய்வுகள் எவ்வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகின்றன. அதில் இடம்பெறுகின்ற Tamil Studies Elsewhere என்ற பேராசிரியர் தனிநாயகம் அடிகளின் கட்டுரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எவ்வகை இலக்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒளிவிளக்காய்த் திகழ்கிறது.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ”உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - ஏற்பாட்டுக் குழு” என்று கூறிக்கொண்டு செயல்படுகின்ற இரண்டு அமைப்புகள் தங்களுக்குள் போட்டா-போட்டி போட்டுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தங்கள் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை வாசிக்கப்பட்டால் போதும் என நினைப்போருக்கு இந்த அமைப்பு இப்படிச் சீர்குலைந்து போவது பற்றி பெரிய கவலைகள் ஏதும் இருக்கப்போவதில்லை. ஆனால் ஆழமாக தனிநாயகம் அடிகளும் ஏனைய தமிழறிஞர்களும் எதற்காக இவ்வமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை அறிந்து  செயல்படுவோருக்கு இது மிகுந்த வேதனையைத் தான் தருகின்றது.
இரண்டு  அமைப்புகள் தாங்களே ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு’ அமைப்பின் பொறுப்பாளர்கள் எனக் கூறுகின்றனர். இரண்டு குழுக்களிலுமே ஜனநாயகப் போக்கு இல்லை.
2018ஆம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற மாநாட்டிற்கு நான் சென்றிருந்த போது இதன் உறுப்பினர் பாரத்தை தரமுடியுமா?  இந்த பாரம்பரியமிக்க ஆய்வுக்குழுவில்  நானும் உறுப்பினராக விரும்புகிறேன் எனக் கேட்டேன். ஆனால் இதன் நிர்வாகக் குழுவில் உள்ளோர் ஒருவர் கூட மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டும் அதற்கான வெப் லிங்கையோ அல்லது உறுப்பினர் பாரத்தையோ தரவில்லை.
கடந்த ஆண்டு மாநாடு ஷார்ஜாவில் என்றும் பின்னர் துபாயில் என்றும் ஒரு குழுவினர் செயல்பட்டனர். என்னை கருத்தரங்க கட்டுரைகள் தேர்வுக்குழுவில் இணைந்து செயலாற்ற அழைத்த போது அப்போதும் கேட்டும் கூட உறுப்பினர் பாரம் கிடைக்கவில்லை. ஆயினும் 250 கட்டுரை சுருக்கங்களை வாசித்து அதில் ஆய்வுத்தரமிக்கவற்றை தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். ஆனால் மாநாடு அதன் போக்கில் மாற்றத்தை நிகழ்த்தி மலேசியாவில்  நிகழ்த்தப்பட்டது.
மற்றுமொரு குழு சிங்கையில் நடத்துகின்றோம் என அறிவித்து பின்னர் மற்ற குழுவினர் நடத்திய அதே மாதத்தில் தமிழ்நாட்டிலேயே நிகழ்த்தி முடித்தது.
அதே குழப்பம் இந்த ஆண்டும் தொடர்கின்றது.
தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் எதற்காக இந்த அமைப்பை உருவாக்கினார்?   Tamil Studies Abroad - A symposium  என்ற நூல் குறிப்பிடும் நோக்கங்கள் என்ன? இது எத்தகைய ஆய்வுகளை உள்ளடக்க வேண்டும் என்ற புரிதல் 2 குழுக்களுக்குமே இருக்கின்றதா?
எத்தனை ஆய்வாளர்களை இந்த அமைப்பு இணைத்துக் கொண்டு செயல்படுகின்றது?  மாறிவரும் தமிழ்மக்களின் சூழலுக்கேற்ப அறிவியல், வணிகம், கணினி, இயந்திரத்துறை, புலம்பெயர்வு  போன்ற துறைகளுக்கு எந்த அளவிற்கு இந்த மாநாடு முக்கியத்துவம் அளிக்கின்றது?
இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
எண்ணிக்கையில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது ஒரு அறிவார்ந்த ஆய்வு மாநாட்டிற்கு முக்கியமல்ல. எத்தகைய ஆய்வுத் தரமுள்ள ஆய்வு மலர் வெளியிடப்பட்டது? எத்தகைய கணமான உரைகள் நிகழ்ந்தன? அவை எத்தகைய புதிய ஆய்வுப் பாதைகளை உருவாக்கின என்பது தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுக்குத் தேவையானது.
இந்த 2 குழுக்களின் நிர்வாகத்தினருமே தங்களின் தனிப்பட்ட உரிமை போல இந்த ஆய்வு அமைப்பை வழிநடத்துவதை விட்டு இதன் தொடக்க கால நோக்கத்தை மனதில் கொண்டு ஆய்வுத்திறன் மிக்க புதிய    தலைமைத்துவத்துடன்    இதனை சீரமைக்க வேண்டும். ஜனநாயகத்துடன் ஆய்வாளர்கள் தங்களை உறுப்பினர்களாக்கிக் கொள்ளவும் இந்த அமைப்பு சீரிய முறையில் செயல்பட கருத்துக்களை வழங்க வாய்ப்பளிக்கவும் வேண்டும்!
-க.சுபாஷிணி
11.03.2024

கருத்துகள் இல்லை: