சனி, 30 மார்ச், 2024

கணேசமூர்த்தியின் கடைசி நாட்கள்... முதல்வருக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!

 மின்னம்பலம் -Aara :  ஈரோடு மக்களவை உறுப்பினரும்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  மூத்த தலைவருமான கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்  கொங்கு மண்டலம் மட்டுமல்ல தமிழ்நாடு அரசியல் வட்டாரம் தாண்டி டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
கணேசமூர்த்தியின் சக எம்பிக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் அலைபேசி செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த மார்ச் 24ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை  காலை  சில விஷ மாத்திரைகளை  அதிகமாக உட்கொண்டு  தற்கொலைக்கு முயற்சி செய்த கணேசமூர்த்தி,   நான்கு நாள் மருத்துவ போராட்டத்துக்குப் பிறகு  28ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காலமாகிவிட்டார்.



2024 மக்களவைத் தேர்தலுக்கு  இன்னும் சில நாட்களே இருக்கும்  நிலையில்  கணேசமூர்த்தியின்  இந்த தற்கொலைக்கு பின்னால்…   உட்கட்சிக் காரணங்கள்  இருக்கின்றன என்ற பேச்சு  அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. மதிமுக நிர்வாகிகளே கூட, ‘சீட் கிடைக்காத ஆதங்கத்தில் கணேசமூர்த்தி இருந்தார். அதன் உச்சகட்டமாகத்தான் இப்படி விபரீத முடிவெடுத்துவிட்டார்’ என்று கூறினார்கள்.

ஆனால் உடல் நலம் இல்லாத சூழலிலும்… தனது ஐம்பது வருட நண்பரான கணேசமூர்த்தியின் உடலைப் பார்த்து கதறி அழுத வைகோ, இந்த விமர்சனங்களுக்கு நா தழுதழுக்க பதில் சொன்னார்.

“எம்பி சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் கணேசமூர்த்தி  இந்த விபரீத முடிவெடுத்ததாக சொல்லப்படுவதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை” என்று  கண்ணீர் மல்கக் கூறினார் வைகோ.

பொதுவாக  ஒருவர்  தற்கொலைக்கு  முயற்சி செய்தாலோ அல்லது விபத்தில்  சிக்கினாலோ  அவர்கள் அட்மிட் செய்யப்படும்  மருத்துவமனையில் இருந்து…  சம்பந்தப்பட்டவருடைய வீடு எந்த காவல் நிலைய எல்லைக்குள் இருக்கிறதோ அந்த காவல்  நிலையத்திற்கு தகவல் அனுப்பி விடுவார்கள். இதற்கு  மெடிக்கோ லீகல் கேஸ் (MEDICO LEGAL CASE)  என்று பெயர். அந்த வகையில்  24ஆம் தேதி  மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட  கணேசமூர்த்தி பற்றியும்  அவரது வீடு அமைந்திருக்கக் கூடிய பெரியார் நகரை உள்ளடக்கிய காவல் நிலையத்துக்கு  மருத்துவமனையில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.

இதன் பெயரில்  காவல் நிலைய அதிகாரிகள்  தற்கொலைக்கு என்ன காரணம் என்று  விசாரணை செய்திருக்கிறார்கள். சிட்டிங் எம்.பி.யாக இருக்கக் கூடிய கணேசமூர்த்தியின் தற்கொலை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்  ஆகிவிட்டது. அவர் எம்.பி. என்பதால் மத்திய உளவுத்துறையும் இது சம்பந்தமாக விசாரித்து அறிந்துகொண்டுள்ளது.

இந்த நிலையில்  கணேசமூர்த்தியின் தற்கொலைக்கு என்ன காரணம்  என்று  விசாரணை நடத்தி  அந்த அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்  ஈரோடு காவல் துறையினர்.

இதுபற்றி  காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது… “மார்ச் 24ஆம் தேதி காலை ஈரோடு பெரியார் நகரில் இருக்கும்  தன் வீட்டு  ஹாலில்  செய்தித் தாள்கள் வாசித்துவிட்டு…  வழக்கம் போல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சியினரையும்  கூட்டணி கட்சியினரையும்  கணேசமூர்த்தி  சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.  அன்றைய தேர்தல் பணிகள் பற்றியும் விவாதித்துள்ளார்.   இதற்கிடையே  ஈரோடு திமுக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி போனில் வந்து,   செயல்வீரர்கள் கூட்டம் பற்றி பேசியிருக்கிறார்.

இப்படியாக சில நிமிடங்கள்  தன்னை சந்திக்க வந்திருந்தவர்களோடு உரையாடிவிட்டு காலை 9 மணி அளவில்  வீட்டின் முதல் மாடியில் இருக்கக்கூடிய  தனது அறைக்குள் சென்றார்  கணேச மூர்த்தி. கீழ் தளத்தில் கணேசமூர்த்தியின் மகன் கபிலன் குடும்பத்தோடு வசித்துள்ளார்.

9.30 மணி ஆனதும், ‘தாத்தாவை சாப்பிட  கூப்பிடுப்பா..’ என்று தனது மகனிடம் சொல்லியனுப்பினார் கபிலன். அதன்படியே கணேசமூர்த்தியின் எட்டு வயது பேரன் மேலே சென்று தாத்தாவை அழைக்கச் சென்றுள்ளார்.

திடீரென சில நிமிடங்களில்  கீழே ஓடிவந்த பேரன்,  ’அப்பா…. மேல ரூம்ல   தாத்தா வாந்தி எடுத்துட்டு இருக்காரு.   கீழ விழுகிற மாதிரி இருக்காரு’  என்று பதட்டமாக தெரிவித்துள்ளார்.  இதையடுத்து  மேலே ஓடிய  கபிலன்  தனது தந்தை கணேசமூர்த்தியின் நிலையைப் பார்த்து பயந்து  மீண்டும்  கீழே ஓடி வந்திருக்கிறார்.   அப்போது  வாசலில்  கணேசமூர்த்தியை சந்திப்பதற்காக  சில மதிமுக நிர்வாகிகள் காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விஷயத்தை சொல்லி அவர்களை உடனடியாக முதல் மாடிக்கு அழைத்துச் சென்று  கணேசமூர்த்தியை தாங்கிப் பிடித்து  கீழே கொண்டு வந்திருக்கிறார்கள்.   உடனடியாக கார் மூலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

’விஷ மாத்திரைய சாப்பிட்டிருக்காரு. உடம்பு முழுவதும் விஷம் பரவிடுச்சு.  உடனடியாக கோயம்புத்தூர் கொண்டு போங்க’ என்று சொல்லிவிட்டார்கள்.   இதையடுத்து அன்று மதியம் சுமார் 2 மணி அளவில்  கோவை கே எம் சி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்  கணேசமூர்த்தி.   விஷம் பரவிய ரத்தத்தை அவரது உடலில் இருந்து அகற்றி  புதிதாக இருபது யூனிட் ரத்தத்தை டாக்டர்கள் செலுத்தினார்கள்.  இந்த சிகிச்சை போராட்டம் மூன்று நாட்கள் நடந்து 28 ஆம் தேதி அதிகாலை கணேசமூர்த்தி காலமானார்.

சமீபத்தில் மதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட கணேசமூர்த்திக்கு வரும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில்தான் இருந்துள்ளார்.
ஆனால் அதையும் தாண்டிய மிகப்பெரிய குடும்ப ரீதியான  மன உளைச்சல் அவரை சில மாதங்களாகவே வாட்டியது.

கணேசமூர்த்தியின் மனைவி காலமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது.  இந்த நிலையில்  சில ஆண்டுகளாகவே  கட்சியிலேயே ஒரு பெண் தோழருடன் கணேசமூர்த்திக்கு நட்பு ஏற்பட்டது.  கணேசமூர்த்தி டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் அந்த பெண் தோழரும் டெல்லிக்கு சென்று வந்தார்.

ஒரு கட்டத்தில் இந்த நட்பினை பற்றி மனம் வருந்திய கணேசமூர்த்தியின் மகனும், மகளும் இதை வைகோவிடம் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்தினார்கள். கணேசமூர்த்தியிடம் இதுபற்றி ஒரு வார்த்தை கூட கேட்க விரும்பாத வைகோ, அந்த பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கினார்.

வைகோ தன்னிடம் இதுபற்றி கேட்காவிட்டாலும், விஷயம் வைகோ வரை சென்றுவிட்டதே என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார் கணேசமூர்த்தி.  தன் மகனிடமும் கோபப்பட்டிருக்கிறார். இதனால் கணேசமூர்த்திக்கும் அவரது மகனுக்கும் இடையே அவ்வப்போது வார்த்தைப் போர் நடந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த பெண் நண்பர் தனக்கு சொத்து வாங்குவதற்காக பணம் தேவைப்படுகிறது என்று கணேசமூர்த்தியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்காக கணேசமூர்த்தி தன் சொத்து ஒன்றை விற்க ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த சொத்தினை வாங்க வந்தவர், ‘நாளை பிரச்சினை ஏதும் வராமல் இருக்க… உங்க மகனும் மகளும் கையெழுத்து போடணும்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு கணேசமூர்த்தி, ‘இது நான் சம்பாதிச்ச சொத்து. நான் விற்கிறதுக்கு எதுக்கு அவங்ககிட்ட கையெழுத்து வாங்கணும்’ என்று கேட்டுள்ளார். இது சம்பந்தமாகவும் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த மார்ச் 24 ஆம் தேதிக்கு சில நாட்கள் முன்பு கணேசமூர்த்திக்கு வர வேண்டிய பல லட்சம் ரூபாய் அவரது கைக்கு வந்திருக்கிறது. அதில் சில லட்சங்களை தனக்காக எடுத்து வைத்துக் கொண்டவர் மீதத்தை தனது மகனுக்கும், மகளுக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்.  இது தொடர்பாகவும் அவரது மகனுக்கும் கணேசமூர்த்திக்கும் இடையே  வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது.

மார்ச் 23 ஆம் தேதி இரவு இந்த பிரச்சினை தொடர்பாக மகன் கபிலனுக்கும், கணேசமூர்த்திக்கும் இடையே வார்த்தைப் போர் வெடிக்க சில கசப்பான சம்பவங்களும் நடந்துவிட்டன. இதனால் மிகவும் வேதனை அடைந்த கணேசமூர்த்தி தனது அறைக்கு சென்றுவிட்டார்.

இந்த பின்னணியில்தான் மறுநாள் 24 ஆம் தேதி காலையும் மிக வாட்டமான  முகத்துடன் இருந்த கணேசமூர்த்தி… திடீரென தனது அறைக்கு சென்று தென்னை மரத்துக்கு இடக் கூடிய சல்பாஸ் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொண்டுவிட்டார்” என்பதுதான் மேலிடத்துக்கு ஈரோடு காவல்துறை அனுப்பியிருக்கிற ரிப்போர்ட். முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கும் இது கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

தற்கொலை பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று இதுவரையில் எந்த புகாரும் வரவில்லை என்றும் போலீஸார் நோட் அனுப்பியிருக்கிறார்கள்.

கணேசமூர்த்தியின் தற்கொலைக்கு காரணம் அவரது குடும்ப ரீதியான நிகழ்வுகளேயன்றி, அரசியல் காரணம் இல்லை என்பதுதான் முதல்வருக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட்டின் சாராம்சம்.

கருத்துகள் இல்லை: