ஞாயிறு, 6 நவம்பர், 2022

கோயில் மக்களுக்கானதல்ல மக்கள் கோயிலடிமைகள்... ஸ்ரீ முன்னேஸ்வர மகாத்மியம் .. ஸ்ரீ லங்கா

 Dhinakaran Chelliah  :  கோயில் மக்களுக்கானதல்ல மக்கள் கோயிலடிமைகள்
கோயில்கள் மக்களுக்காக எழுப்பப் பட்டவை அல்ல, அது மன்னர்களுக்காக மன்னரின் நலன் சார்ந்து எழுப்பப் பட்டவை என்பதை ஆகம நூல்களை வாசிக்கிறவர்கள் அறியும் உண்மை ஆகும்.
மன்னனுக்கு எதிராக பொதுமக்கள் புரட்சியோ,போராட்டமோ,கிளர்ச்சியோ செய்யாமல் அடிமைகளாக வாழ்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட உபாயம்தான் “கோயில்கள்”.
அதனால்தான் ஐரோப்பா போல் அல்லாமல்,நம் மண்ணில் மன்னர்களுக்கு எதிராக ஒரு போதும் புரட்சி வெடித்ததில்லை.
மேலுள்ள கருத்தை வலியுறுத்தும் நூல்களில் ஒன்றுதான் “ஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்” எனும் தல புராண நூல். முன்னேஸ்வரம் என்பது ஶ்ரீலங்காவிலுள்ள முக்கியமான சிவஸ்தலம் ஆகும்.
மன்னர்களின் ஆட்சி காலங்களில்,
கோயில்களைச் சார்ந்தே பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் அதைச் சுற்றியே அமைந்திருந்தது.
இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக
“ஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்” எனும் ஸ்தல புராண நூலைக் குறிப்பிடலாம். சோழ மன்னனான குளக்கோட்டு மகாராஜா(சோழ கங்க தேவன்) ஆட்சி செய்த கலியுகம் 512 ஆம் ஆண்டில் முன்னேஸ்வரம் கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாகவும் சோழ நாட்டிலிருந்து பல்வேறு சாதியரை முன்னேஸ்வர கோயிற் பகுதியில் 66 கிராமங்களில் குடியேற்றம் செய்த தகவல்களையும் இந்த நூலில் உள்ள “குளக்கோட்டு மகாராசன் வழிபாட்டுப்படலம்” தெரிவிக்கிறது. இன்றைய காலெண்டர் படி 2021 என்பது கலியுக 5122 ஆம் ஆண்டு ஆகும்.  

முன்னேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமாக நிலங்களையும் அதில்  66 கிராமங்களை உருவாக்கி முன்னேஸ்வர கோயிலுக்கு அந்த கிராமவாசிகள் செய்ய வேண்டியவற்றை கட்டளைகளாக ஆணை பிறப்பித்த விசயங்களை இந்த நூல் மூலம் அறிய முடிகிறது.
மதுராவிலிருந்து(வட இந்திய) சந்திர குலத்திலதமாகிய தனியுண்ணாப் பூபாலனென்னும் நீதிநிறைந்த உத்தம சுகுணோத்துங்க மகாராசனை அழைத்து வந்து, முன்னேஸ்வர மகாநகரில் அரசுபுரியும்படி முடிசூட்டிச் சகல நீதிகளையும்
போதித்து நல்வாழ்வடைந்திருக்கச் செய்தார் என்றும் குறிப்பிடுகிறது.
குளக்கோட்டு மகாராஜா முடிசூட்டிய
சுகுணோத்துங்கன் அறிவித்த கட்டளைகளில் பல்வேறு சாதியின் பெயர்களும் அவர்களின் தொழில் முறைகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.அந்தத் தொழிலில் அவர்கள் ஈட்டும் பொருட்களை புன்னேஸ்வர கோயில் காரியங்களுக்காக எப்படி அவர்கள் செலுத்த வேண்டும் என்ற குறிப்பையும் இந்நூல் குறிப்பிடுகிறது.
இனி அந்த கட்டளைகளைப் பார்ப்போம்;
“நித்திய நைமித்திகங்கள் சிறப்பாக நடந்து வரும் பொருட்டு, நியமித்திருக்கும் தொழும்பாளர்களோடு(அடியார்), இன்னும் வேண்டிய பணிவிடை செய்தற்காகச் சோழ தேசத்தை யடைந்து, மதுரை, தொண்டை மண்டலம், காரைக்கால், திருச்சிராப்பள்ளி, கூடலூர் மருங்கூர் முதலானவூர்களிலிருந்து, பிராமணர்,சைவர், செட்டி, வேளாளர், வீரமுட்டி சங்கமர், தாதர், கொல்லர் கன்னார், தட்டார், சிற்பர், தச்சர்,யாழ்ப்பாடி, எண்ணைவாணியர், அகம்படியார், முல்லைமடப்பளியார், சங்குமடப்பளியார், சருகும்டப்பளியார்,கைக்கோளர், சேணியர், இலைவாணியர், விறகுவெட்டி, தூதர், நாவிதர், வண்ணார், திமிலர்,வலைஞர், வருண குலத்தார், குயவர், மறவர், பள்ளர், சாணார், கத்திக்காரர், பறையர், ஆகியோரை ஆராய்ந்தெடுத்தழைத்துக்கொண்டு வந்து, குடி யிருக்க நிலங்களைக் கொடுத்துக் குடியிருத்தி, அவ்வவர்க்கு வேண்டிய நிபந்தனைகளும் ஏற்படுத்தி, நீர்குறைவில்லாத நெல் விளை நிலங்களையும் வேண்டியவாறு கொடுத்து, மிக்க சிவ பக்தியுடையவராய்ப் பெருவாழ்வடைந்திருந்தார்.
கோடிக்கணக்கான பொன்னைச் சொரிந்து திருப்பணிசெய்து, திருக்கோவிலைக் கட்டுவதிலும் அதற் கேற்ற நிபந்தனைகளை அமைத்தலிலும் பார்க்க, திருக்கோவிலில் நித்திய நைமித்திகத்தை விதிப்படி செய்தலே சிறந்த புண்ணியமாகும்.
ஆதலால் தினந்தோறும் திருக்கோவிலிலெவ்விடத்தும் பதினோராயிரந் திருவிளக்கேற்றுங்கள். சோதிஸ்வரூபராகிய சிவபெருமானும் அம்மையாரும் எழுந்தருளியிருக்கும் உள் மண்டபத்திற்குப் பசுநெய்யினால் ஆயிரம் நெய்விளக் கேற்றுங்கள். பன்னீரிலே புனுகு முதலிய வாசனைத் திரவியங்களைக் கலந்து எவ்விடத்துந் தெளியுங்கள்.இடை யிடையே தசாங்கதூப கலசங்களையிடுங்கள். திவ்விய கணேசர் என்னும் நல்ல விநாயகருக்கு வெள்ளிக்கிண்ணத்தில் ஆறு தளிகையும், சுந்தரஷண்முகர்க்குப் பொற் கிண்ணத்தில் பன்னிருதளிகையும், பைரவர் வீரபத்திரர் ஆகியோர்க்குப் பஞ்சலோக கிண்ணங்களில் நூற்றிருபத்தெட்டுத் தளிகையும், பிடியமுதுக்காக முன்னூற்றறுபது கிண்ணத்தளிகையும் வையுங்கள். முன்னைநாதப் பெருமானுக்கும் வடிவழகி யம்மையாருக்கும் செஞ்சம்பா அரிசியைக் குற்றமற ஆராய்ந் தெடுத்து அமுதுசெய்து நவரத்தினகசித தங்கக் கிண்ணங்களில் அழகுபெறவைத்து, அறுசுவைக் கறிவர்க்கங்களும், பசுப்பால் கலந்த குழம்பும், பணிகாரவகைகளும், கற்கண்டும்,வெல்லமும் சர்க்கரையும், கிழங்குவகைகளும், தேனும், கனிவர்க்கங்களும் புத்துருக்கு நெய்யும், இளநீர் முதலிய பானீயவர்க்கங்களும் ஆகியவைகளைச் சன்னிதானத்தில் வைத்து, ''எம்பெருமானே! கருணைகூர்ந்து திருவமுது செய்தருளல்வேண்டுமென்று பிரார்த்தித்து, விண்ணப்பித்து நிவேதித்து, அர்த்தமண்டபத்தில் நின்று விதிப்படி சோட சோபசார பூசைபுரிந்து, மஹாமண்டபமத்தியிலுள்ள அன்னப்பாவாடை மேடையில் வாழை இலைகளைப் பரப்பிச் சம்பா அன்னஞ்சொரிந்து இருபத்தேழுபிடி உண்டை சுற்றிலும் வைத்து, இனிய கறிவர்க்கம் பால் சர்க்கரை தேன் நெய்
இவைகளைப் பரப்பிச் சமர்ப்பித்துப் பூசை செய்யுங்கள். விதித்தவற்றில் ஒன்றையுங் குறையாதீர்கள். காலத்தைக் கைவிடாதீர்கள்; கூறியதை மறவாதீர்கள். என்று வேண்டிக் கொண்டு இவ்விதமே தினந்தோறும் திரிகாலங்களிலும் பூசை நடத்தல் வேண்டுமென்று நிபந்தனை செய்து நீங்கள் யாவரும் மேலே சொல்லிய விதிகளில் அற்பமேனுந் தவறு வீர்களாகில் சௌரவாதி நரகத்தில் வீழ்வீர்கள்.
சந்திரகுல திலபூபதியாகிய தனியுண்ணாப் பூபால மகாராசன் சூரியகுலரத்தின தர்மதயாளுவாகிய குளக் கோட்டுமகாராசாவின் கட்டளைப்படி முன்னேஸ்வமாயைத் தைச் சேர்ந்த பூமிகளை அறுபத்தாறு கிராமங்களாக்கி
ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இடுகுறிப்பெயர் காரணப் பெயர்களைவைத்து; சுத்தவேளாளரிலும் அகம்படிவேளாளரிலும் பன்னிருவரைத் தெரிந்து, அவர்களுள் முதலாவதாயுள்ளவருக்கு, 'சந்திரசேகர முதலிப்பட்டங்கட்டி' என்றும், இரண்டாவதாயுள்ளவருக்கு 'பட்டங்கட்டிக் கோறாளை' என்றும், ஏனையோருக்கு 'அத்துக் கோறாளை' யென்றும் பட்டங்கள் சூட்டி, இவர்களில் முன்னிருவரையும் முன் னேஸ்வரத்திலிருக்கும்படி நியமித்து, கபடாமுதலிய உத்தி யோகங்களை அவர்களிடத்தில் ஒப்புவித்து, உட்பிரகாரம் இரண்டாம் பிரகாரம் ஆதியவைகளில் சுவாமி எழுந்தருளப் பண்ணல் அவர்கள் மரபினரே செய்யவேண்டுமென்று நியமித்தார்.
மற்றப் பதின்மரையும், பம்பளையிலும், பகலப்பிராமண தளுவையிலும், கொக்காவிலிலும், தம்பகலிலும்,
மாயவனாற்றின் அக்கரையிலுள்ள சுருவெலயிலும், பள்ளமையிலும், சுதகம்பவையிலும், மண்டலானையிலும், மினிக்குளத்திலும், உகம்பிட்டியிலும், வசிக்குமாறு கட்டளையிட்டு, கிராமங்களினால் கோவிலுக்கு வரவேண்டிய பத்துக்கிரண்டுவீத ஆதாயத்தையும், மீசுவலி கெற்களையும் அறவிடவும், வேளாண்மை நடத்தவும், உற்சவ காலங்களில் வேண்டிய மரம் கம்பு, நெல் பழவகை குருத்து இலைவகை முதலானவைகளை கொண்டுவந்து கொடுக்கும்படி கிராமஜனங்களை ஏவி நடத்த வும், அவர்களுக்கு நியமித்த ஆலயப்பணிகளை நடத்துவிக்கவும் நியமித்தார்.
அகம்படி வேளாளரிற் சிலரை எலிவெட்டி, காக்காப்பள்ளி, மானாவாரி, கரவெட்டி, கணங்கட்டி, இஹலபிராமண தளுவை, மூங்கில்வெட்டுவன், விலத்தவை, மண்டலானை, வீர கொம்பந்தளுவை, பிரப்பங்குளி, ஒல்லித்தளுவை, மருகங் குளம், தித்தக்கடை, என்னுமூர்களிற் குடியிருக்கும்படி நியமித்து, அவர்களை விசேஷ காலங்களில் பூவகைகள் மாவிலை தென்னம்பூ முதலியவைகளைக் கொடுத்தல், சுவாமி எழுந் தருளப்பண்ணல், சங்கூதல், நெற்குத்தல், திருவிளக்கு தட்டு முட்டு விளக்கல், திருவிளக்கிடுதல், சேவகப்பண்ணை, சந்தன மரைத்தல், கோவில் வெளிமண்டபம், உட்பிரகாரம், இரண் டாம்பிரகாரம் ஆகியவற்றிற்குத் திருவலகிடுதல், திருமெழுக் கிடுதல், தேர்கட்டல், பந்தரமைத்தல் ஆதியவற்றிற்கு நியமித்தார்.
வீரமுட்டிப் பண்டாரங்களை, முன்னேஸ்வரத்தில் பண்டாரியாமூலை என்னும் இடத்தில் வசிக்கச்செய்து, கோவில் நித்திய பூசாபாத்திரங்கள் விளக்கவும் தூபதீபமேற்றவும் புஷ்பமெடுக்கவும் தேவார திருவாசகம் ஒதவும் விதிப்படி விபூதியமைத்துக்கொடுக்கவும் நியமித்தார்.
சிற்பாசாரிகளை முன்னேஸ்வரத்திற்குத் தக்ஷிண பாகத் தில் குடியிருக்கும்படி நியமித்து திருக்கோவிற்றிருப்பணிகளில் உண்டாகும் பழுதுகளைச்செப்பனிடுமாறு நியமித்தார்.
கொல்லரை, கரவெட்டியிற் சில பகுதியிலும் வங்கா தனையிலும் குடியிருக்கும்படி நியமித்து, வாகனம் தேர் முதலியவைகளுக்கு வேண்டிய இரும்புவேலைகளையும், அதிர் வெடிக்கட்டை, தீவர்த்தி, ஆயக்கால், கத்திரி, கோடரி,மண் வெட்டி முதலிய இரும்புவேலைகளையுஞ் செய்துகொடுக்கும் படி நியமித்தார்.
தச்சரை, வங்காதனியில் குடியிருக்கும்படி நியமித்து, திருக்கோவிலுக்கு வேண்டிய மரவேலைகளையும், தேர் வாக னம் முதலியவைகளையுஞ் செய்துகொடுக்கும்படி நியமித்தார்.
கன்னாதை, பாலாகுளத்திலும் சலாபத்திலும் குடியிருத்தி, பூசாபாத்திரங்கள் விளக்குகள் முதலியவைகளைப் பழுது பார்த்துக்கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
மேளகாரரையும் தேவதாசிகளையும் முன்னேஸ்வரத்திலும் சலாபத்திலும் சலாபத்திற் சில பகுதிகளிலும் குடியிருத்தி, ஆண்களைத் திருக்கோவிலில் வாத்தியகோஷஞ் செய்யவும், தாசிகளை நடனமிடவும் ஆலத்தியெடுக்கவும் கட்டளையிட்டு, இவர்களுக்கு மற்றைய ஊர்களில் சர்வமானியமாக நிலங்களையும் கொடுத்தார்.
குயவரை, வடகால மூலையென்ற ஊரிலும் முன்னேஸ் வரத்திலும் குடியிருத்தி திருப்பணிக்கு வேண்டிய செங்கல், ஓடு, மண்கலாம் முதலியவைகளை வேண்டியவரை செய்து கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
சுண்ணவாணியரை, மரவெளியிற் குடியிருத்தி, உற்சவ காலங்களில் மண்டபம் முதலியவைகளுக்கு வெள்ளையடித் துச் செப்பனிடும்படியும் திருப்பணிக்கு வேண்டிய சுண்ணாம்பு கொடுக்கும்படியும் கட்டளையிட்டார்.
கைக்கோளரை, முன்னேஸ்வரத்திலும் சலாபத்திலும் குடியிருக்கச்செய்து, திருவிழாவிற்குக் கொடிச்சீலை, நூல், கயிறு, பரிவட்டம், முதன்மையான குருக்கள்மாருக்கு உடை உத்தரீயம் கும்பவஸ்திரம் சிற்றாடை முதலியவைகளை நெய்து கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
கோடாரிக்காரரை, பஹலகமம் பொன்னாங்காணி ஆகிய இவ்வூர்களில் குடியிருத்தி, இலுப்பை புன்னை எள்ளு ஆமணக்கு தேங்காய் முதலானவைகளிலிருந்து எண்ணையூற்றிக் கொடுக்கும்படியும், விறகுவெட்டிக் கொடுக்கும்படியும் நியமித்தார்.
திமிலரை, திமிலையிற்குடியிருத்தி, மாயவனாற்றினக்கரைச் சனங்களைக் கூலியின்றி இக்கரைக்குக் கொண்டுவரவும், இக்கரையிலிருந்து அக்கரைக்குக்கொண்டு போகவும்,தேரிழுக்க வடம் முதலியவற்றைத் திரித்துக்கொடுக்கவும், தேர் இழுக்கவுங் கட்டளையிட்டார்.
சாணாரை "மணக்குளம்" என்னும் ஊரிற் குடியிருக்கும் படி ஏற்படுத்தி தீவர்த்தி, ஆலவட்டம் முதலியவைகளைத் திருவிழாக் காலங்களில் பிடிக்கவும், தோரணங்கள் கட்டவும் இளநீர், எரிதுரும்பு, திருவலகு, தாம்புக்கயிறு, கிடுகு, குருத்து, தென்னம்பூ முதலியவைகளைக் கொடுக்கவும் கட்டளையிட்டார்,கருப்பட்டிக்காரரை, இனி கொடவெளியென்னு மூரில் குடியிருத்தி, திருப்பணிக்கு வேண்டிய கருப்பட்டி கடகம் பெட்டி முதலானவைகளைக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
சங்கூதியை, காக்காப்பள்ளியிலும், இலுப்பதனியிலும், சியம்பளாகஸ்வெளியிலும், கருக்குளியிலும், திகாம்வெளியிலும் குடியிருத்தி, கோவில் நித்திய நைமித்திகங்களில் சங்கூதும்படி கட்டளையிட்டார்.
மாலைகட்டியை, முன்னேஸ்வரத்திலும் திமிலையிலும் குடியிருக்கச்செய்து, நித்திய நைமித்திகங்களில் மாலைகட்டும் படி கட்டளையிட்டார்.
வண்ணாரை நால்வகையாகப் பிரித்து, முங்கந்தளுவையிலும் செம்புக்கட்டியிலும் குடியிருத்தி, கோவிலுக்கு நித்திய பரிவட்டங்கள் போடவும் பாவாடை விரிக்கவும் பந்தஞ் சுற்றவும் வெள்ளைகட்டவும் திருவிளக்கிற்குத் திரிமுதலியன கொடுக்கவும் கட்டளையிட்டார்.
பறையரை, வீரபாண்டியன் என்னுமூரில் குடியிருக்கும் படி நியமித்து, உற்சவ காலங்களில் மேளஞ் சேவிக்கவும், கோவிலில்வரும் விசேஷதினங்களைப் பறைசாற்றி ஊரவர்களுக்கு அறிவிக்கவும் கட்டளையிட்டார்.
******************
இந்த நூலில் மன்னனின் கட்டளைகளைப் பற்றி ஈழ நண்பரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் கூறினார், “அப்போ சாமியை யார் கும்பிட வேண்டும் என்ற கட்டளையை யாருக்கும் பிறப்பிக்க வில்லை போலும் என்றார்.”
இந்த நூலைப் படிக்கும் போது மக்களுக்காகவே கோயில் என்ற எண்ணம் மாறி, கோயிலுக்காகவே மக்கள் சுரண்டப் பட்டனர் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க இயலாது.அதே நேரத்தில் மக்களின் உழைப்பும் மன்னனின் செல்வங்களும் கோயில் காரியங்களால் வீணடிக்கப் பட்ட உண்மையையும் அறிய முடிகிறது.
கோயில் என்பதே மன்னனை பூஜிக்கும் இடம் என்று குறிப்பிடும் காமிகாகமம் போன்ற ஆகமங்கள் கூறும் உண்மையுனை மறந்துவிடக் கூடாது.மன்னன் எழுப்பிய கோயில்களில் பாமரனுக்கான இடம் ஏதும் இருந்ததில்லை.இந்நூலைப் படிக்கிறவர்கள் இந்த உண்மைகளை எளிதிற் உணர இயலும்.
“ஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்” நூலானது
பிர்மஶ்ரீ மு.சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்டு கொழும்பு வீரகேசரியால் 1949 ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை: