வெள்ளி, 11 நவம்பர், 2022

சவுக்கு சங்கர்: 6 மாத சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை; புதிதாக 4 வழக்குகளில் கைது!

vikatan.com  -  சி. அர்ச்சுணன்  :  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர் மீதான சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கும் நிலையில், மேலும் நான்கு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த ஆறு மாதகால சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வரும்வரை, வழக்கு குறித்து எந்தவிதக் கருத்தையும் அவர் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் நீதிபதி விதித்திருக்கிறார். இந்த நிலையில் சவுக்கு சங்கர், 2020, 2021-ம் ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட நான்கு வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் 2020-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 505(1) (b), 504, 505(2), 153, 505(1)(b) ஆகியவற்றின் மொத்தம் மூன்று வழக்குகளும், 2021-ல் அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தின் பிரிவுகள் 5(1)(a), 5(1)(d), 5(2) ஆகியவற்றின்கீழ் ஒரு வழக்கும் பதியப்பட்டிருக்கின்றன.

சவுக்கு சங்கர்
மேலும் இந்தக் கைது குறித்து, கடலூர் மத்திய சிறையிலுள்ள சைபர் க்ரைம் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சவுக்கு சங்கருக்கு வியாழக்கிழமை (நேற்று) கைது அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது பற்றி நேற்று மாலையே அவரின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதையடுத்து நேற்றைய தினமே கைதுசெய்யப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: