hirunews.lk இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இணையான பயங்கரவாத தாக்குதலுக்கு... ? இந்திய புலனாய்வு அமைப்பு சந்தேகம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவில் நடத்த திட்டம் இருந்ததா என்பது குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நியுஸ் ரிவிட்டின் (newsriveting) என்ற செய்தித்தளம் பிரசுரித்துள்ளது.
தமிழகத்தின் கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிற்றூந்து குண்டுவெடிப்பு தொடர்பில் முதற்கட்ட விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு ஆரம்பித்துள்ளது.
இதன்போது, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் முக்கிய சதிகாரர் உள்ளிட்ட சில பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த ஜாஷ்மி முபின் என்பவர் முயன்றமை தமிழக காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அக்டோபர் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சிற்றூந்து குண்டுவெடிப்பில் ஜஷ்மி முபின் கொல்லப்பட்டார்.
இந்த சிற்றூந்து வெடிப்பு சம்பவம் தற்கொலைத் தாக்குதலா அல்லது தற்செயலான எரிவாயு கொள்கலன் வெடிப்பா? என்பது தொடர்பில் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈஸ்வரன் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 25 வயதுடைய ஜமீஷா முபின் என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று (25) தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ் மற்றும் ஃபரோஸ் இஸ்மாயில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உக்கடம் கோயம்புத்தூரின்ல் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியாகும்.
1996 கோவை குண்டுவெடிப்பில் 56 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், மாநில பாஜக தலைவர் கே அண்ணாமலை செவ்வாயன்று கோயம்புத்தூர் சிற்றூந்து வெடிப்பு 'ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை குண்டுத் தாக்குதலின்' ஒரு கட்டம் என்றும், இது, மாநில அரசு மற்றும் மாநில காவல்துறையின் முழு தோல்வி என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இந்த பிரச்சினையை கையாள்வதில் மாநில காவல்துறையின் அணுகுமுறையில் உள்ள சில முக்கியமான குறைபாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக