திங்கள், 15 ஆகஸ்ட், 2022

கடலூர் இளைஞர் ராஜேஷ் மரணம்.... காவல்துறையினர் தீவிர விசாரணை!

youth incident cuddalore district police investigation

நக்கீரன் : கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செவ்வேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது விவசாயக் கூலி தொழிலாளி ராஜேஷ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பிரேமலதா என்பவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொளார் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது விஜயலட்சுமி சபிதா, என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ராஜேஷ்.


இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேஷ், வேப்பூர் பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் அங்கு வேறு ஒருபெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும்,
இதனால் இரண்டாவது மனைவி விஜயலட்சுமி சபிதா, ராஜேஷ், ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு விஜயலட்சுமி சபிதா தாய் வீடான தொளாருக்கு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சல் காரணமாக, ராஜேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து தற்கொலை செய்துக் கொண்ட ராஜேஷு உடலை அவரது உறவினர்கள், நேற்று மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து  உடலை எறிவூட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விஜயலட்சுமி சபிதாவின் தந்தை சுப்பிரமணியன் திட்டக்குடி காவல் நிலையத்தில் ராஜேஷ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், செவ்வேரி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயானத்தில் ராஜேஷ் உடலை எரியூட்டுவதற்கு தீ வைக்க உறவினர்கள் முற்பட்டனர். இதைக் கண்ட காவல்துறையினர் ராஜேஷ் உடலை ஏறியூட்டாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், ராஜேஷ் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திட்டக்குடி காவல்துறை டி.எஸ்.பி. காவியா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பிறகு, ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திட்டக்குடி காவல்துறையினர், ராஜேஷ் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

கருத்துகள் இல்லை: