செவ்வாய், 14 ஜூன், 2022

சரத் பவார் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்?

 மின்னம்பலம் : ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளுங்கட்சிக் கூட்டணி, எதிர்க்கட்சிக் கூட்டணி இரண்டிலும் சந்திப்புகள், ஆலோசனைகள் வேகமெடுத்துள்ளன.
இன்று (ஜூன் 15) மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில்... எதிர்க்கட்சித் தலைவர்களின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக மூத்த அரசியல்வாதியும், தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.



குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே கடந்த வியாழக் கிழமை சரத் பவாரை சந்தித்துப் பேசினார். மல்லிகார்ஜுன கார்கே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் ஸ்டாலினுடம் பேசினார். நேற்று ( ஜூன் 14) ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தலைவரான சஞ்சய் சிங்கும் சரத் பவாரிடம் பேசியிருக்கிறார். மல்லிகார்ஜுன கார்கே மம்தா பானர்ஜியுடனும் பேசியிருக்கிறார். இந்தப் பின்னணியில் இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் கூடுகிறது.

சரத் பவார் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக பல கூட்டணிகள், பல கூட்டணி அரசுகளை மராட்டியத்தியிலும், மத்தியிலும் உருவாக்கியவர்.

-வேந்தன்


கருத்துகள் இல்லை: