செவ்வாய், 8 மார்ச், 2022

தமிழ்நாட்டுக்கென தனி கல்விக் கொள்கை: அமைச்சர் பொன்முடி

 மின்னம்பலம் : தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, தமிழ்நாட்டுக்கென தனி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் மற்றும் கணித தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் கருத்தரங்கு சென்னை லயோலா கல்லூரியில் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். தமிழகத்தில், உலகளவில் உயர்ந்த கல்வி தரம் கொண்டுவரப்படும். 

அதற்காக தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை கொண்டு வருவதற்காக முதல்வர் புதிய குழுவை அமைத்துள்ளார். நம்முடைய கலாச்சாரம், பண்பாடு, வளர்ச்சி, விவசாயம் இவைகளுக்கேற்ப நம்முடைய கல்வி திட்டம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து முதல்வர் தமிழ்நாட்டிற்கென கல்விக் கொள்கை கொண்டு வர முடிவு செய்திருக்கிறார். விரைவில் அது கொண்டுவரப்படும்.

அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளது என்று நேற்று அறிவிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பல்துறை பேராசிரியர்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் என்று 90 பேர் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பிற உயர்கல்வி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இவை வளருகின்ற தலைமுறைகளுக்கு ஏற்ப அமையும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். மாநில பாடத்திட்டத்தை தாண்டி ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் வினாத்தாள் அமைக்கப்படுகிறது. இது தமிழ்நாடு மாநில கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கஷ்டமாக உள்ளது.

2016, 2017 ஆம் ஆண்டில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 12.14 சதவிகிதம் பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வானார்கள். ஆனால், நீட் தேர்வு வந்தபிறகு 1.7 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவ படிப்புக்கு தேர்வாகினர்.

நீட் குளறுபடி, மொழி ஆதிக்கம் ஆகியவற்றால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பாடத்திட்டம் என்று கூறி மாநிலத்தின் கல்வி உரிமையை பறிக்கின்றனர். அதனால்தான்,தமிழகம் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது” என்று கூறினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: