வெள்ளி, 18 மார்ச், 2022

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் குழு துபாய் பயணம்: தயாராகும் தனி விமானம்!

 மின்னம்பலம் : தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், வரும் மார்ச் 25, 26 தேதிகளில் துபாய்க்குப் பயணம் மேற்கொள்கிறார்.
துபாயில் 192 நாடுகள் பங்கேற்பில் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சி (துபாய் எக்ஸ்போ)யில் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்போ எனப்படும் இந்த தொழில் காட்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு தனி அரங்கை நிறுவியுள்ளது. இந்த வகையில் இந்தியா அமைத்த அரங்கத்தை அண்மையில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.


இந்திய அரங்கத்துக்குள் தமிழக அரசு தனது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகளை அமைத்துள்ளது. மாநில அரசு விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளுக்கான முதலீடுகளை உலகளாவிய நிறுவனங்கள் மூலம் பெற்றிட இந்தத் தொழில் கண்காட்சியில் ஏற்பாடுகள் செய்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக 25, 26 தேதிகளில் துபாய் பயணம் மேற்கொள்கிறார்.

பயணத்தில் அவரோடு துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் செல்கிறார்கள். முதல்வர் பயணம் செய்வதற்காக தனி விமானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தின் தொடர்ச்சியாக அங்கிருந்து லண்டன் செல்லவிருப்பதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அதுபற்றி விசாரித்ததில்
லண்டன் பயணம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.
துபாயில் இருந்து அவர் திரும்பி வந்த சில நாட்களில் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நேற்று மார்ச் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் டெல்லி அறிவாலயத்துக்கு விசிட் அடித்து அங்கே திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: