தொடக்க காலத்தில் வசனங்கள் வழியே கதை சொன்னார்கள். பின்னர் காட்சிகளின் வழி பேசினார்கள். 90 களுக்குப் பிறகு தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் பிரம்மாண்ட சினிமாக்கள் அதிகம் வரத் தொடங்கின. கதையை விட கிராபிக்ஸ் காட்சிகளும், ஒலி அமைப்பு முறையும் அதிகம் பேசப்பட்டன. திரைப்படங்களில் எதார்த்தம், மண்ணுக்கேற்றத் தன்மை, ஊர் அமைப்பு எதுவும் தேவையில்லை. பிரம்மாண்டம் என்ற ஒன்று போதும் என்ற மனநிலையை இளைஞர்களுக்கு உருவாக்கினார்கள்.
அப்படி ஒரு மனநிலையை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஷங்கர். அரசியல்வாதிகளின் ஊழலும், உதிரி தொழிலாளர்களின் அலட்சியமும்தான் நாட்டின் அவலத்திற்கு காரணம் என்பதுதான் இவருடைய படங்களின் சாரம்சமாக இருக்கும். இந்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, பல கோடி ரூபாயைச் செலவழிப்பார். அதற்காக, சினிமா டிக்கெட்டுகளும் பல மடங்கு அதிகமாக விற்கப்படும். என்ன செய்ய? அரசியல்வாதிகளின் ஊழலை ஒழிக்க ஷங்கர் பிரம்மாண்டமாகச் செலவு செய்கிறார். அவ்வளவுதான்.
இப்போது இந்தியன் 2 படபிடிப்பில் இரண்டு பேர் பலியாகியிருக்கிறார்கள். இதற்கு நேரடியாக ஷங்கரை குற்றம் சாட்டமுடியாது. அவர் போன்றோர் உருவாக்கி வைத்திருக்கும பிரம்மாண்டம் என்ற மாய பிம்பம்தான் இருவரின் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது.
இந்தியன் 2 படம் மூலம் ஷங்கர் சொல்ல வரும் செய்தி என்ன? , ஊழல் ஒழிப்பு. ஆம். கோடிக்கணக்கில் பிரம்மாண்டமாகச் செலவு செய்து, ஊழலை ஒழிக்கப் போகிறது இந்தியன் 2. இவர்கள் கோடிக்கணக்கில் உருவாக்கும் இந்த பிரம்மாண்டத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பேயில்லை. நம்புங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக