Veerakumar - tamil.oneindia.com : சென்னை: சசிகலாவை சுற்றியுள்ள சொந்தங்கள், அவருக்கு தலைவலியாக மாறியுள்ளன. சசிகலாவின் தம்பி திவாகரன் எந்த பக்கம் போகப் போகிறார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரான காலம் முதல், சசிகலாவின் உறவினர்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஜெயலலிதாவால் சுதாகரன் தத்துப் பிள்ளையாக்கப்பட்டு நாடே வியக்க ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் மக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்தது. அடுத்த எம்ஜிஆர் நான்தான் என்று சொல்லும் அளவுக்கு சுதாகரனுக்கு தைரியம் பிறக்க இதுதான் காரணம்.
இப்படி சசிகலா உறவினர்கள் எல்லை மீறி போனதன் காரணமாக, 1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக மிக மோசமாக தோற்றது. பிறகு அவ்வப்போது சில உறவினர்களை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரக்கூடாது என்று உத்தரவிடுவதும், கட்சியில் இருந்து நீக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதும், வாபஸ் பெறுவதும் ஜெயலலிதா வாடிக்கையாக இருந்தது.
சசிகலா அரசியல் திட்டம் இப்போது சசிகலா அரசியலில் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் நேரத்தில், அதே உறவுகள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் ஆகிய இருவருக்கும் இடையேயான பூசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. டிடிவி தினகரன், சசிகலாவின் அக்காள் மகன் ஆகும். திவாகரன் கூடப்பிறந்த சொந்த தம்பி.
திவாகரன் தனிக் கட்சி சசிகலா சிறையில் இருந்த போது, தனியாக ஒரு கட்சியை தொடங்கி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார் திவாகரன். குறிப்பாக, தினகரன் மீது திவாகரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திவாகரன், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக இருந்து வருகிறார் என்று டிடிவி தினகரன் சசிகலாவிடம் கூறியதாக தெரிகிறது.
டிடிவி தினகரனுக்கு சம்மதம் இல்லை இருப்பினும் சசிகலா ரிலீஸான பிறகு, அணிகளை இணைத்து அதிமுகவை பழைய மாதிரி கொண்டு வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக காய் நகர்த்த ஆரம்பித்தார் திவாகரன். சசிகலாவிடம் இதுபற்றி பேசி கிட்டத்தட்ட சமரச மனநிலைக்கு கொண்டும் வந்தாராம். ஆனால், டிடிவி தினகரனுக்கு அதில் சம்மதமில்லை. தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பேட்டிகளை கொடுத்து வந்தார். பதிலுக்கு அமைச்சர்கள் ஆவேசமாக பதிலடி கொடுத்தனர்.
இணைப்புக்கு திவாகரன் ஆதரவு அமைச்சர்களும் கூட, சசிகலாவை விட்டுவிட்டு தினகரனை மட்டுமே டார்கெட் செய்து விமர்சனம் செய்ய, அவர் அணிகள் இணைப்புக்கு குறுக்கே நிற்கிறார் என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். இதையே சசிகலாவிடம் சொல்லி அணிகள் இணைப்புக்கு தினகரன் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட்டு அதிமுக தோல்விக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று தினகரன் விருப்பம். ஆனால் இதன் மூலம் யாருக்கும் பலன் கிடைக்காது, இணைந்து செல்வதுதான் நல்லது என்கிறார் திவாகரன் என கூறப்படுகிறது.
திவாகரன் தனி டீம் இது போன்ற சூழ்நிலையில்தான், சசிகலாவை, பெங்களூர் முதல் சென்னை வரை வழிநெடுகிலும் வரவேற்க நின்ற கூட்டம், தினகரன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது என்று மகிழ்ந்து போன சசிகலா, திவாகரன் பேச்சை இப்போதெல்லாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்கிறார்கள். எனவேதான் அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக சசிகலா நீதிமன்றத்தை அணுகியுள்ளார் சசிகலா.
அதாவது
தினகரன் விருப்பப்படியே சசிகலா நடக்கிறார். எனவே தனது கட்சியை கலைக்க
விருப்பமில்லாத திவாகரன் அதிமுக தலைமையுடன் இணைந்து செல்ல திட்டமிட்டு
இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
வாக்குகள் பிரியுமே
இவ்வாறு திவாகரன் செய்யும்போது, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட சுற்று
வட்டாரங்களில் சசிகலா ஆதரவு வாக்குகள் இரண்டாக பிரியும். சென்னையில்
தங்கியிருக்கும் சசிகலா தஞ்சை மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
அங்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் முயற்சியில்
தினகரன் ஈடுபட்டிருந்தார். ஆனால் திவாகரன் தனி ஆவர்த்தனம் பாடி வருவதால்
பெருமளவுக்கு கூட்டத்தையும் நிர்வாகிகளையும் திரட்ட முடியவில்லை என்று
கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக