வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!

இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!
minnambalam.com : இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!" : தந்திரம் பெற்றபின் முதன்முறையாக இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.  உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்த சவுகத் அலியின் மகள் ஷப்னம். பட்டதாரியான ஷப்னம், படிக்காத கூலித் தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.   இவர்கள் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி ஷப்னத்தின் ஒட்டு மொத்தக் குடும்பமும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது.அடையாளம் தெரியாத சிலர், ஷப்னத்தின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொன்று குவித்துவிட்டுச் சென்றதாக ஷப்னம் போலீஸாரிடம் கூறினார். ஆனால் போலீஸாரின் விசாரணையில், இந்தக் கொலையில், ஷப்னம் மற்றும் அவரின் காதலன் சலீமும் ஈடுபட்டது தெரியவந்தது.

குடும்பத்தினர் அனைவருக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அனைவரும் உறங்கிய பிறகு, சலீமை வரவழைத்து பெற்றோர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரையும் கழுத்தறுத்துக் கொன்றுகுவித்துள்ளார். தனது வீட்டிலிருந்த 10 மாதக் குழந்தையைகூட ஷப்னம் விட்டுவைக்கவில்லை.

இந்த வழக்கில் 2010 ஜூலை 14 அன்று மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. 2010ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல் முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அவர்களது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் ஷப்னம் தூக்கிலிடும் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே பெண்களைத் தூக்கிலிடும் அறை ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த அறை இதுவரை பயன்படுத்தப்பட்டதே இல்லை. அது மதுரா சிறையில் 1870ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சிறைக்கூடத்தில் 1998 ஏப்ரல் 6ஆம் தேதி லக்னோவைச் சேர்ந்த ராம்ஸ்ரீ என்பவரை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவருக்குக் குழந்தை பிறந்ததால், தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சிறைக்கூடத்துக்கு, நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட்ட பவான் ஜல்லாத் கடந்த சில நாட்களாக வந்து, சிறைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சிறைத்துறைக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து மதுரா சிறைக்கூட காவல் கண்காணிப்பாளர் ஹைலேந்திர குமார் கூறுகையில், “ஷப்னத்தை தூக்கிலிடும் தேதி இறுதி செய்யப்படவில்லை. ஆனால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு தூக்கு தண்டனைக்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதும் அவர் தூக்கிலிடப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

கருத்துகள் இல்லை: