செவ்வாய், 3 மார்ச், 2015

காஷ்மீர் முதல்வர் உரை : வா ரே வா.. கொன்னுட்டீங்க பாய் !

முப்தி கொடுத்த அடிக்கு முன்னாடி ஒரு கட்டிப்பிடிம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததற்கு பாகிஸ்தான், போராளி அமைப்புகள், ஹுரியத் ஆகியோர்தான் காரணம்… அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாம் அமைதியாக தேர்தலை நடத்தியே இருக்க முடியாது. நான் இதை பிரதமரிடம் தெளிவாக கூறிவிட்டேன் என்பதை இங்கே அதிகார பூர்வமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.”
நேற்று மாலை ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முப்தி முகமது சயீத், ஆற்றிய உரை இது. முப்தி இதைப் பேசும்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த துணை முதல்வரான பாஜக வின் நிர்மல் சிங், மூச்சு கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை முதல்வர் முப்தி வெளியிடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு முகமெல்லாம் பெருமை பொங்க 56 இஞ்ச் மார்பழகன் சூப்பர்மேன் மோடியும், 55 இஞ்ச் அஞ்சா நெஞ்சன் அமித் ஷா வும், பதவியேற்பு விழா மேடையில் முப்தி முகமது சயீதை கட்டித் தழுவினார்கள். ஜோக்கடித்து மகிழ்ந்தார்கள்.

அத்வானி, ஜோஷி இரண்டு பேரையும் வரவழைத்து பதவியேற்பு விழா மேடையில் ஒரு குரங்கு குல்லாயை மாட்டி உட்கார வைத்திருந்தார் மோடி; வேறெந்த உயர்ந்த நோக்கமும் இல்லை. ஏற்கெனவே பா.ஜ.க.வின் திண்ணையில் உட்கார வைத்து கஞ்சி ஊற்றப்படும் அந்தக் கிழடுகளுக்கு, மொய்யை திரும்பச் செய்கிறார் மோடி, அவ்வளவுதான்.
அல்லல் பட்டு ஆற்றாது அழுத அத்வானியின் கண்ணீரைத் துடைத்து, அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில், மோடிக்கு ஆழமாக ஆப்பு வைத்து விட்டார் முப்தி பாய். மோடியை சும்மா அடித்தாலும் பரவாயில்லை. “இந்த மேட்டரை நான் பிரதமரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன்” என்று சொல்லி அடித்திருக்கிறார்.
போனமாசம் கேஜ்ரிவால் ஆப்பு. இந்த மாசம் முப்தி ஆப்பு. இன்னும் எத்தனை ஆப்புகள் மோடியின் மீது இறங்கினால் அத்வானியின் ஆன்மா சாந்தியடையுமோ, அது நமக்குத் தெரியாது.
அத்வானி கதை இருக்கட்டும். 56 இஞ்ச் மார்புள்ள பிரதமரால் வழிநடத்தப்படும் பாரத தேசத்தை, பாரத மண்ணில் நின்று கொண்டே ஒரு முசல்மான் இவ்வளவு கேவலமாகப் பேசுவதைக் கேட்டு அங்கே கூடியிருந்த எழுச்சி பெற்ற ஹிந்துக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அனைவரும் எஸ்கேப்.
‘அடுத்த 6 வருசத்துக்கு அதிகாரத்தில் அமர்ந்து ஆட்டையப் போடலாம்’ என்று இதமான கனவில் மிதந்து கொண்டிருந்த காக்கி அரை டவுசர்களின் முகத்தில், சுளீர் என்று ஐஸ் வாட்டரை அடித்து விட்டார் பாய்.
“காஷ்மீர் மக்களுக்கு நன்றி சொல்லவில்லை, தேர்தல் கமிசனுக்கு நன்றி சொல்லவில்லை, போலீசுக்கும் ராணுவத்துக்கும் நன்றி சொல்லவில்லை. பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் நன்றி சொல்கிறாரே முதல்வர் இது அடுக்குமா? ஓபனிங்கே சரியில்லையே இந்த கூட்டணி நீடிக்குமா?” என்று பலவாறாக நோண்டுகிறார்கள் மீடியாக்காரர்கள்.
காங்கிரசின் குலாம் நபி ஆசாத் மடக்குகிறார். டிவிட்டரில் ஓமர் அப்துல்லா பா.ஜ.க.வை கலாய்க்கிறார். ஜம்மு பாந்தர்ஸ் கட்சி “மோடியின் பதில் என்ன” என்று உறுமுகிறது. “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே, அதென்னாச்சு, இதென்னாச்சு” என்று கூகிளில் புகுந்து தேடியெடுத்து தேதிவாரியாக பா.ஜ.க. வினர் பேசியதையெல்லாம் எடுத்துப் போட்டு, என்.ஆர்.ஐ ஹிந்துக்கள் டார்ச்சரை தொடங்குகிறார்கள். “அதெல்லாம் சும்மனாச்சிக்கும் சொன்னதுப்பா” என்று தனித்தனியே அவர்களை ஆஃப் பண்ணலாமென்றால், அதுக்குள் விசயம் அனுமார் வாலில் வைத்த தீ மாதிரி இணையம் முழுவதும் பற்றி எரிகிறது.
இதற்கிடையில், பிரதமர் வடிவேலுவின் நிலைமை புரியாமல், ஜம்முவில் பஜ்ரங் தள் அரைக்கிராக்குகள் முப்திக்கு கொடும்பாவி கொளுத்தி, சவால் விட்டு சண்டைக்கு கூப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ சீட் கிடைக்காத அதிருப்தி ஹிந்துக்கள், கொடும்பாவிகளுக்கு மண்ணெண்ணெய சப்ளை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் டி.வி.காரர்கள் தீவிரவாதியை விரட்டும் விஜயகாந்த் போல பா.ஜ.க.வினரை தேடித்தேடி துரத்துகிறார்கள். இருந்த போதிலும், யாராலும் ஒரு ஆளைக்கூடப் பிடிக்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு பயங்கரமான தலைமறைவு இயக்கம், என்பது மீடியாக்காரர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
முப்தி பேசிமுடித்த அடுத்த 4 மணி நேரத்துக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் “சுவிட்சுடு ஆஃப்”. இந்த இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீரில் தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன், “தேர்தலை நடத்தியது நாங்கள், நன்றி பாகிஸ்தானுக்கா? “முதல்வர் இப்படி பேசியிருப்பது எங்களுக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று அறிக்கை விட்டு விட்டது.
இதற்கு மேல் ஒரு ஆளும் கட்சி எப்படி வலிக்காத மாதிரி நடிக்க முடியும்? ஒரு அறிக்கையை ரெடி பண்ணி விட்டார்கள். “தேர்தல் வெற்றிகரமாக நடந்ததற்கு தேர்தல் கமிசனுக்கும், ராணுவத்துக்கும் இந்திய அரசியல் சட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் நன்றி சொல்கிறோம்” என்று அறிக்கை விட்டார் பா.ஜ.க செயலர் ஸ்ரீகாந்த் சர்மா.
“அது நீங்க சொல்றது. அவரு சொன்னதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க, அதைச்சொல்லுங்க” என்று திரும்பத் திரும்ப கேட்டுப் பார்த்து விட்டார்கள் மீடியாக்காரர்கள். “நாங்க என்ன சொல்றோம்னா” என்று தொடங்கி “இதுதான் அந்த இன்னொரு வாழைப்பழம்” என்று முடிக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
ஆனானப்பட்ட டைம்ஸ் நௌ அப்பாடக்கர்கள், பா.ஜ.க.வினரின் தொண்டை வரை மைக்கை திணித்து நோண்டிப் பார்த்து விட்டார்கள். முடியவில்லையே. முப்தி முகமதுக்கு எதிராகவோ, ஹூரியத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராகவோ ஒரே ஒரு வார்த்தையைக் கூட பா.ஜ.க.வினரின் வாயிலிருந்து மட்டுமல்ல வயிற்றிலிருந்து கூட வரவழைக்க முடியவில்லை.
“ஹூரியத், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆகியோருடன் பேசக்கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலை. ‘அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமரிடம் சொல்லி விட்டேன்’ என்கிறார் முப்தி. பேசுவீர்களா, மாட்டீர்களா? உங்கள் நிலை என்ன? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று பா.ஜ.க. தலைவர்களைக் கேட்கிறார்கள் நிருபர்கள்.
முப்தி கொடுத்த அடிக்கு முன்னாடி ஒரு கட்டிப்பிடி
“சமாதானம், முன்னேற்றம், நல்லாட்சி இதுதான் எங்கள் நிலை – ஆமென்” என்று தமிழ் சினிமா பாதிரியாரைப் போல சாந்த சொரூபியாக பதிலளிக்கிறார்கள் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்கள்.
“காஷ்மீர் பிரச்சினை நாட்டின் உயிராதாரமான பிரச்சினை ” என்றும், “நேரு துரோகம் செய்து விட்டார்” என்றும், “சியாமா பிரசாத் முகர்ஜி கொலை செய்யப்பட்டு விட்டார்” என்றும், “காஷ்மீரை மீட்காமல் ஓயமாட்டோம்” என்றும் பாரதிய ஜனதாவினர் தொண்டை நரம்பு புடைக்க கத்தி வருவதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது- பா.ஜ.க.வின் மூலமுதல் கொள்கைகளில் ஒன்று என்பதும் எல்லோருக்கும் தெரியும். மொத்தத்தில் பா.ஜ.க.வின் பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு தேச வெறி அரசியலுக்கு ஏவுதளமே காஷ்மீர்தான்.
பல ஆயிரம் உயிர்களையும் பல இலட்சம் கோடி மக்கள் பணத்தையும் அழித்தும், அங்கே ஒரு அங்குலம் வெற்றியைக் கூட சாதிக்க முடியவில்லை. இனிமேலும் சாதிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அயோத்தி முதல் காஷ்மீர் வரை அனைத்துமே தமது பாசிச அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுக் கொள்வதற்கு இவர்கள் பயன்படுத்தும் துருப்பு சீட்டுகள். அவ்வளவே. அதனால்தான் இவர்கள் பதுங்குகிறார்கள், பம்முகிறார்கள்.
இந்த விசயத்தில் பாரதிய ஜனதாவினர் பாசிஸ்டு நரிகள் என்றால், முப்தி முகமது சயீதோ ஒரு கிழட்டுப் போக்கிரி. “பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து விட்ட துரோகி” என்று காஷ்மீர் மக்கள் தன்னை ஏசுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். தீவிரவாத அமைப்புகளோ, ஹுரியத்தோ தன்னைக் குற்றம் சாட்ட முடியாத வண்ணம் தப்பிக்க வேண்டுமானால், தன்னை இந்து மதவெறியர்கள் தாக்குவதற்கு வழி செய்து கொள்ள வேண்டும் என்பதே முப்தியின் திட்டம். அது நிறைவேறிவிட்டது.
காஷ்மீர் மக்கள் தன் மீது காறி உமிழாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறார் முப்தி. டில்லியிலிருந்து காஷ்மீருக்கு மோடியை வரவழைத்தார்; மேடையில் நடு சென்டராக உட்கார வைத்தார்; அப்புறம் பொறுமையாக தொண்டை வரை காறி, மோடியின் முகத்தில் துப்பியிருக்கிறார். முப்தி உமிழ்ந்த எச்சில் மோடியின் முகத்தில் இன்னும் வழிந்து கொண்டுதான் இருக்கிறது.
துடைத்துக் கொள்ளலாம்தான். துடைத்துக் கொண்டால், மறுகணமே பார்ப்பவர்கள் “முப்தி துப்பிய எச்சிலுக்கு உங்கள் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்புவார்களே! அதனால்தான் முப்தி முகமது தனது மூஞ்சியில் துப்பியதே தெரியாதவர் போல பாவ்லா பண்ணுகிறார்.
“ஏண்டா, உனக்கெல்லாம் வெக்கமே கெடயாதா?“ என்றொரு வசனத்தை அடிக்கடி கேட்டிருப்பீர்களே, அதை சந்தானத்தின் குரலில் கேட்டுக் கொள்ளவும். அதுதான் இந்தக் கட்டுரையின் கடைசி வரி.
பின்குறிப்பு:
முப்தி முகமது சயீதின் மகள் மெகபூபா முப்தியை பேட்டி கண்டார் என்.டி.டிவி யின் பர்க்கா தத். மெகபூபாவின் வாயிலிருந்து ஒரு சின்ன வருத்தத்தை வரவழைத்து பிரச்சினையை சுமுகமாக முடிக்கும் தரகு வேலையாகவே இருந்தது பர்க்காவின் முயற்சி. ஆனால் மெகபூபா மசியவில்லை. “முப்தி சொன்னது நூற்றுக்கு நூறு சரி” என்றே வாதிட்டார். மொத்தத்தில் மோடியை இன்னொரு மூத்திர சந்தில் கொண்டு போய் அடித்த கதையாகி விட்டது பேட்டி.
இதற்கிடையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தேசபக்த எதிர்க்கட்சிகள் பொங்குகிறார்கள். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளும் சேம் சைட் கோல் அடிக்கிறார்கள். எல்லோரும் பிரதமரை பதில் சொல்லச் சொல்கிறார்கள். எழுந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். “நான் பிரதமர் மோடியிடம் பேசிவிட்டுத்தான் பதில் அளிக்கிறேன். முப்தி தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து” என்றார். அவரு சொன்னது அவரோடு கருத்துங்கிறதுதான் மோடி சொன்ன கருத்தாம். இது மோடியிடம் ஏற்கெனவே ஊமைக்காயம் பட்ட ராஜ்நாத் சிங், மோடியின் அல்லையில் குத்தியிருக்கும் உள்குத்து.வினவு.com

கருத்துகள் இல்லை: