ஏ.கே.கான்
டெல்லியில் 4 காமுகர்களால் ஓடும் பஸ்ஸில் மிகக் கொடூரமாக பலாத்காரம்
செய்யப்பட்டு, அதை விட மிகக் கொடுமையாக தாக்கப்பட்டு, குடல் எல்லாம்
வெளியே எடுத்து வீசப்பட்ட நிர்பயா குறித்த பிபிசியின் வீடியோவை மத்திய
அரசு தடை செய்தது ஏன் என்பதே புரியவில்லை.
அந்த பிபிசி வீடியோவை யுடியூபில் நானும் நேற்று பார்த்தேன். மனதை நடுங்க
வைத்துவிட்டது அந்த டாகுமெண்டரி. மத்திய அரசின் உத்தரவையடுத்து இன்று அந்த
வீடியோவை யுடியூப் நீக்கிவிட்டது.
ஆனால், அந்த வீடியோவில் பிபிசி எதையும் தவறாகக் காட்டவில்லை பிபிசி என்பதே
என் கருத்து.
பலியான நிர்பயாவின் தந்தையே தனது மகளின் உண்மையான பெயரைச் சொல்லி, பெயரை
வெளியே சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.. உலகத்துக்கு உண்மையான
பெயர் தெரியட்டும். ஜோதி சிங் என்ற பெண் விட்டுச் சென்ற கேள்விகளுக்கு இந்த
உலகம் என்ன விடைகளைத் தரப் போகிறது என்று முடிகிறது அந்த டாகுமெண்டரி.
மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நிர்பயா தனது கடுமையான உழைப்பால்
மார்க்குகள் பெற்று எம்பிபிஎஸ் சீட் பெறுகிறார். அவரை படிக்க வைக்க தங்களது
கிராமத்தில் இருந்த நிலத்தையும் விற்கின்றனர் நிர்பயாவின் பெற்றோர். மிக
வறுமையான, ஆண் குழந்தைகளை மட்டுமே அரவணைத்து பெண் குழந்தைகளை வெறுத்து
ஒதுக்கும் சமூக சூழலைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிக முற்போக்கான
சிந்தனை கொண்ட, வித்தியாசமான பெற்றோர் இவர்கள்.
எங்கள் மகள் பிறந்தபோது நான் அனைவருக்கும் இனிப்பு கொடுத்தேன். என்ன ஆண்
பிள்ளையா பிறந்துவிட்டது என்று கேலி செய்தனர். எனக்கு ஆணும் பெண்ணும் ஒன்று
தான் என்று பதில் தந்தேன் என்கிறார் நிர்பயாவின் தாயார். இவர்களது சமூகச்
சூழலும் நிதி நிலையும் தான் இறுகிய நிலையில் உள்ளது. ஆனால், இவர்களது
பேட்டியை பார்த்தபோது இந்தப் பெற்றோரின் மிகப் பரந்த மன நிலையும், நியாய-
தர்மங்களை அணுகும் விதமும் பெரிய அளவில் கல்வி கற்றவர்களையே ஒருபடி கீழே
தள்ளும் நிலையில் இருந்தது.
சரியாக, தீர்க்கமாக, உணர்ச்சிவசப்படாமல், அதே நேரத்தில் நடந்த கொடுமையை
இவர்கள் விவரித்த விதம் யாரையும் கலங்கடித்துவிடும்.
ஒரு புயல் மாதிரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது: கலங்க வைத்த பிபிசி
வீடியோ!
எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் ஜோதி சிங் / நிர்பயாவுக்கு பீஸ் கட்ட முடியாத
நிலையில் குடும்பம். இதனால் ஒரு கால் சென்டரில் இரவு 8 மணி முதல் காலை 4
மணி வரை வேலைபார்த்துக் கொண்டே படித்திருக்கிறார் ஜோதி சிங் /நிர்பயா.
இரவில் முழுவதும் பணி. வெறும், 3 அல்லது 4 மணி தூக்கம். மீண்டும் காலையில்
மருத்துவக் கல்லூரி என்று ஓட்டமாய் ஓடியிருக்கிறது நிர்பயாவின் வாழ்க்கை.
அடுத்த 6 மாதம் இன்டர்ன்ஷிப். அதன் பிறகு நமது வாழ்க்கை மாறிவிடும் அம்மா
என்று நிர்பயா கூறியதை அந்தத் தாய் நினைவுகூர்கையில் நாம் உடைந்து
விடுகிறோம்.
இன்டர்ன்ஷிப் தொடங்கிவிட்டால் எனக்கு நேரமே இருக்காது. இதனால் இன்று ஒரு
சினிமாவுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று கிளம்பிச் செல்கிறார்
நிர்பயா. தனது நண்பருடன் சினிமாவுக்குப் போய்விட்டு வீடு திரும்ப
பஸ்சுக்கு காத்திருக்கும்போது வருகிறது யாதவ் டிராவல்ஸ் என்ற தனியார்
பேருந்து.
இருவரையும் பார்த்தவுடன் நிற்கிறது. அதில் ஏறியது தான் விதி.
டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள ரவிதாஸ் கேம்ப் என்ற சேரியைச் சேர்ந்த 5
பேர், அதில் ராம் சிங், முகேஷ் சிங் இருவரும் அண்ணன்- தம்பி. தம்பி தனியார்
பஸ் ஓட்டுபவன். வினய் சர்மா என்ற ஜிம் பயிற்சியாளன். பவன் குப்தா என்ற பழ
வண்டிக்காரன். இவர்கள் தவிர 17 வயதான ஒருவன் (18 வயதுக்கு கீழ் என்பதால்
அடையாளத்தை வெளியிட முடியாது).
இந்த 5 பேரும் பகல் எல்லாம் குடித்துவிட்டு, ஒரு விபச்சார இடத்துக்குச்
சென்றுவிட்டு, மீண்டும் குடித்துவிட்டு பஸ்ஸை எடுத்துள்ளனர். அந்த பஸ்சில்
தான் நிர்பயாவையும் அவரது நண்பரையும் ஏற்றியுள்ளனர்.
உள்ளே ஏறியதும் நீங்கள் இருவரும் நண்பர்களா?, ஆணும் பெண்ணும் நண்பர்களா?
அது நமது கலாச்சாரமா என்று 'கலாச்சார' பாடம் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
நிர்பயாவும் அவரது நண்பரும் எதிர்த்துப் பேச 4 பேரும் சேர்ந்து
தாக்கியுள்ளனர். முகேஷ் சிங் தொடர்ந்து பஸ்ஸை ஓட்டியவாரே இருக்க, இந்த 4
பேரும் இருவரையும் தாக்கி, சீட்களுக்கு இடையில் வைத்து மிதித்துள்ளனர்.
இதற்கிடையே ஒருவர் மாறி ஒருவர் நிர்பயாவை சீரழித்துள்ளனர். இவர்களது
தாக்குதல் வெறும் காமம் சார்ந்த தாக்குதல் மட்டுமல்ல, மிருகங்கள் கூட
செய்யாத தாக்குதல். நிர்பயாவின் பிறப்புறுப்பில் ஒருவன் பெரிய இரும்புக்
கம்பியை செருக, கண்மூடித்தனமான தாக்குதலில் நிர்பயாவின் வயிறு கிழிந்து
குடல் வெளியே வந்திருக்கிறது. அதை 17 வயதான குற்றவாளி ஒரு துணியில் சுற்றி
பஸ்சுக்கு வெளியே வீசியிருக்கிறான்.
இந்த தாக்குதலையும் பலாத்காரத்தையும் ஆரம்பித்து வைத்ததும் அந்தச் சிறுவனே.
இந்த விவரங்களை சிறையில் இருக்கும் முகேஷ் சிங்கிடம் பேட்டி கண்டு
வாங்கியுள்ளது பிபிசி.
இந்த முகேஷ் சிங் விவரங்களை சொல்லியதோடு ஆண்- பெண் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்று பாடம் வேறு எடுக்கிறான். பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்
அமைதியாக இருந்தால் உயிரோடு தப்பிக்கலாம் என்கிறான். நிர்பயா எதிர்த்துப்
போராடியது தவறு என்கிறான்.
இவனாவது பரவாயில்லை, இந்தக் குற்றவாளிகளுக்காக வாதாடும் இரு வழக்கறிஞர்கள்
இந்த பிபிசி டாகுமெண்டரியில் சொல்வது தான் இந்த நாடு எந்த நிலையில்
உள்ளது, பெண்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது, நாம் உலகளவில் மிக வேகமாக
வளர்ந்து வரும் நாடு என்கிறார்களே.. அது உண்மை தானா, இந்தியாவின் உண்மையான
முகம் எது?, ஆண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா என்று
கதற வைக்கிறது.
பூ என்பது நல்ல வாசம் வீசும். அது கோவிலியில் இருந்தால் பூஜிக்கப்படும்,
சாக்கடையில் விழுந்தால் நாற்றமெடுக்கும்... இது தான் நிர்பயா குறித்து ஒரு
வழக்கறிஞரின் கருத்து.
அதாவது ஆண் நண்பரோடு சுற்றும் பெண் என்பவள் இந்த நிலைக்கு ஆளாகியே தீர
வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர்.
இன்னொரு வழக்கறிரோ, குற்றம் செய்ய தூண்டியது நிர்பயா தான். என் மகள்
இப்படி ஆண் நண்பருடன் வெளியே போனால் நான் அவளை எரித்துக் கொன்றிருப்பேன்
என்கிறார்.
இது தான் அவர்கள் சொன்னதில் டீசண்ட் விஷயங்கள். மற்றபடி எல்லாமே சாக்கடை
தான். இதனால் அந்த மனிதர்களின் வார்த்தைகளை எழுதுவதும் சாக்கடையில் கை
வைப்பதற்கு சமம் தான்.
இந்த 5 குற்றவாளிகளில் ராம் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டுவி்ட,
மற்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது இப்போது
அப்பீலில் உள்ளது சுப்ரீம் கோர்ட்டில். சிறுவன் என்று அழைக்கப்படும்
முக்கிய குற்றவாளிக்கு அதிகபட்சமாக 3 வருடம் தான் நமது சட்டத்தால் தண்டனை
தர முடியும். அது தரப்பட்டுள்ளது. அவன் அடுத்த வருடம் டிசம்பரில் வெளியே
வந்துவிடுவான்.
இப்படி நிர்பயா விஷயத்தில் பல விவகாரங்களையும் தொட்டுச் செல்லும் பிபிசி
டாகுமெண்டரி குற்றவாளிகளின் பின்புலம், அவர்களது மிக மோசமாக குடும்பச்
சூழல், வறுமை- வேலையில்லாமை, பல வேலை உணவில்லாத பட்டினி சூழல், சமூகத்தால்
நிராகரிக்கப்பட்ட மன நிலையில் வாழும் வாழ்க்கை என அதையும் வலியோடு
சொல்கிறது.
முக்கிய குற்றவாளியான 17 வயதுக்காரனுக்கு 3, 6 வயதில் தம்பி, தங்கைகள்
உள்ளனர். குடும்பமே பல வேலை பட்டினியில் வாட, நான் டெல்லிக்குப் போய்
சம்பாதித்து அனுப்புகிறேன் என்று சென்றவன் இப்போது சிறையில்....
இன்னொரு குற்றவாளிக்கு 4 வயது மகன், மாமனார்- மாமியார் வீட்டில்
கிராமத்தில் வசிக்கும் அந்தப் பெண், என் புருஷன் ரொம்ப நல்லவர், தப்பாக
கைது செய்துள்ளனர் என்று அழுகிறார்.
ஆனால், இந்த டாகுமெண்டரியின் முக்கிய தீம், இந்த விவகாரத்தை கையில்
எடுத்துப் போராடிய இந்த சமூகம் தான்.
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஒரு போராட்டம்,
தேசிய போராட்டமாக மாறி, நாடு முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என
அனைவரையும் ஒன்று திரட்டியது.
நாள்தோறும் நாடு முழுவதும் போராட்டங்கள் என்று இந்த தேசம் தனது
மனசாட்சியை தட்டி எழுப்பி நின்றது. போலீசாரின் அடி உதைகளைக் கண்டு ஓடாமல்
இரவு பகலாக போராட்டம் நடத்திய மாணவிகள், அவர்களுக்குத் துணையாய்
அமர்ந்திருந்த பெற்றோர்..
இதையெல்லாம் தான் பிபிசி காட்டுகிறது.
''ஒரு புயல் மாதிரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. புயலுக்குப் பின்
நிலவுகிற மனம் கொல்லும் அமைதியில் நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
என் வாழ்க்கையை மீண்டும் நான் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.
என் மகள் பல கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறாள்.. அதற்கு இந்த தேசத்தின்
பதில் என்ன?'' என்ற நிர்பயாவின் தந்தையின் கேள்வியோடு டாகுமென்டரி
முடிகிறது.
இந்தக் கேள்வி ஒவ்வொரு பெண் குழந்தையின் தந்தையின் கேள்வி தான்.
இந்த டாகுமெண்டரியில் நடந்துவிட்ட பெரிய தவறாக குறிப்பிடப்படுவது
நிர்பயாவின் உண்மையான பெயர், அவரது குழந்தைப் பருவ படம் ஆகியவற்றை பிபிசி
வெளியிட்டது தான்.
ஆனால், பெயரை வெளியிடுவதில் தனக்கு ஆட்சேபனையில்லை என்று தந்தையே
சொல்கிறார்.
நிர்பயாவின் 2 வயது படத்தை வெளியிட பெற்றோரிடம் பிபிசி அனுமதி
பெற்றிருக்காவிட்டால் அது தவறு தான்.
ஆனால், இதைத் தவிர இந்த டாகுமெண்டரியை தடை செய்ய எதுவுமே இல்லையே..
இதில் என்ன இருக்கிறது என்றாவது பார்த்துவிட்டுத் தான் தடை செய்தார்களா
என்பது கூட தெரியவில்லை.
நமது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பலர் மீதும் கிரிமினல்
குற்றச்சாட்டுகள், பாலியல் வன்முறை கேஸ்கள் உள்பட, உள்ளன. இதே மாதிரி நம்மை
வைத்தும் ஒரு டாகுமெண்டரி வந்துவிடுமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.
இந்த டாகுமெண்டரிக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி அதை பிபிசி ஒளிபரப்பி,
அது யுடியூபிலும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுவிட்டது. இப்போது
யுடியூபில் இருந்தும் அதை நீக்கியிருக்கலாம்.
ஆனால், கலங்க வைத்த இந்த டாகுமெண்டரியை பார்த்தவர்களின் மனதில் இருந்து அதை
யாரும் நீக்கிவிட முடியாது.
இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று Editors Guild of India அமைப்பு மத்திய
அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கோரிக்கையோடு....
நிர்பயாவுக்கு மீண்டும் என் அஞ்சலி!
//tamil.oneindia.com
//tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக