புதன், 4 மார்ச், 2015

சாந்தி (70 எம்.எம். ஏ/சி) சிவாஜியின் படங்களால் உசந்து பிரபுவின் படங்களால் சாயம் கழன்று இப்போ...

அம்மா அங்கே சிவாஜி படம் (ஜஸ்டிஸ் கோபிநாத் அல்லது பைலட் பிரேம்நாத் என நினைக்கிறேன்) பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இடுப்பு வலி வந்ததாம். மறுநாள் காலை நான் பிறந்தேன். ஒருவேளை தியேட்டரிலேயே பிறந்திருந்தால் சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார்கள். வாத்யார் ரசிகரான அப்பாவுக்கு அசிங்கமாகியிருக்கும். ‘ஏர் கண்டிஷன்’ என்றொரு நவீன வசதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதையே தமிழர்கள் முதன்முதலாக சாந்தி தியேட்டர் மூலமாகதான் அறிந்தார்கள். ‘குளுகுளு வசதி செய்யப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தப் படுமாம். சென்னையின் முதல் ஏர்கண்டிஷண்ட் தியேட்டரான சாந்தி 1961ல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி கட்டிய இந்த அரங்கை, சிவாஜி ஆசையாக கேட்டு வாங்கிக் கொண்டதாக சொல்வார்கள் (காசுக்குதான்). அப்படியல்ல, உமாபதி காண்ட்ராக்டர் மட்டும்தான் என்று சொல்வோரும் உண்டு. எப்படியிருப்பினும் இதற்கு நன்றிக்கடனாக பிற்பாடு நடிகர் திலகம் உமாபதிக்கு நடித்து கொடுத்த ‘ராஜ ராஜ சோழன்’ படுமோசமாக தோல்வியடைந்து, உமாபதியை மேற்கொண்டு நஷ்டத்துக்கு உள்ளாக்கியது என்பதெல்லாம் இப்போது தேவையில்லாத சமாச்சாரம்.


திறக்கப்பட்ட காலத்தில் நகரின் பெரிய தியேட்டரும் சாந்திதான். சுமார் 1200+ இருக்கைகள். பால்கனியில் மட்டுமே நானுத்தி சொச்சம் சீட்டு. இவ்வளவு பெரிய தியேட்டரை கட்டிவிட்டு கூட்டம் வராமல் ஆரம்பத்தில் சில நாட்களுக்கு அவதிப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கு டப்பிங் படம், இந்திப்படம் என்றுதான் காலத்தை ஓட்டினார்களாம். ‘அய்யோ, அந்த தியேட்டரா? உள்ளே போனா ஊட்டி மாதிரி பயங்கரமா குளுருமாமே? ஸ்வெட்டர் போட்டுக்கிட்டுதான் போவணுமாம்’ என்று மக்கள் அனாவசியமாக அச்சமடைந்திருக்கிறார்கள் (பின்னாளில் குளுகுளு ஏற்பாட்டில் ‘அலங்கார்’ சாதனை படைத்தது. இன்றும் காசினோ காஷ்மீர் மாதிரி ஜில்லிட்டு கிடக்கிறது)

அப்போது பீம்சிங் இயக்கத்தில் ‘பாவமன்னிப்பு’ நடித்திருந்தார் சிவாஜி. நட்சத்திர நடிகர்களின் படங்களை எல்லாம் ‘சித்ரா’வில்தான் திரையிடுவார்கள். சின்ன தியேட்டர் என்பதால் நூறு நாள் ஓட்டி கணக்கு காட்ட வசதியாக இருக்கும்.

சிவாஜியே சொந்தமாக தியேட்டர் கட்டியிருக்கிறார், அதில் பாவமன்னிப்பை வெளியிட்டே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். அவ்வளவு பெரிய தியேட்டரில் வெளியிட்டுவிட்டு நூறு நாள் ஓடாவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்று ஏவிஎம் நிறுவனம் அச்சப்பட்டிருக்கிறது. சிவாஜியின் வற்புறுத்தலின் பேரில் இங்கு திரையிடப்பட்ட ‘பாவமன்னிப்பு’ வெற்றிகரமாக வெள்ளிவிழா ஓடி சாதனை படைத்தது.

அதையடுத்து கிட்டத்தட்ட நூறு சிவாஜி படங்கள் இங்கே திரையிடப்பட்டிருக்கின்றன. பாவமன்னிப்பு, திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல் மரியாதை ஆகிய படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட சிவாஜி படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடியிருக்கிறது.

சென்னையின் பெரிய தியேட்டர் சிவாஜியின் கையில் இருந்ததாலும், அவர் நடித்த எந்த படம் திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதாலும் எம்.ஜி.ஆரை ஒப்பிடுகையில் வசூல்ரீதியாக சிவாஜியே சென்னையின் மன்னனாக இருந்திருக்கிறார். அதுவுமின்றி சிவாஜி கெடாவெட்டு கணக்கில் வருடத்துக்கு ஏழெட்டு படங்கள் நடித்துத் தள்ளிக்கொண்டே இருப்பார் என்பதால், சாந்தி தியேட்டருக்கு வேறு நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யும் வாய்ப்பு குறைவு. எம்.ஜி.ஆருக்கு சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா மாதிரி சுமார் அரங்குகள்தான் மாட்டும். ஏசி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் என்கிற வாத்யார் ரசிகர்களின் ஆசை ரொம்ப நாள் கழித்து உலகம் சுற்றும் வாலிபனில்தான் தேவிபாரடைஸ் மூலமாக நிறைவேறியது. எனக்குத் தெரிந்து இன்றுவரை சாந்தி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் எதுவும் திரையிடப்பட்டதாக தெரியவில்லை. சிவாஜி தெலுங்கு, மலையாளத்தில் நடித்த படங்களைகூட அடமாக இங்கே திரையிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர்களை பரவசப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அந்த காலத்தில் சாந்தி தியேட்டரில் நைட்ஷோ விடும் நேரத்தை கணக்கில் வைத்து, படம் பார்த்து வருபவர்களின் வசதிக்காக ஸ்பெஷலாக பிராட்வேயிலிருந்து தாம்பரத்துக்கு 18ஏ பேருந்தினை அதிகாலை வேளையில் விட்டிருந்தது போக்குவரத்துக் கழகம். தினமலரில் பணியாற்றும்போது வீட்டுக்கு போக இந்த பேருந்து பல நாட்கள் எனக்கு பயன்பட்டிருக்கிறது.

சிவாஜிக்கு வயதானபிறகு பிரபு நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்பட்டன. இவரது பெரும்பாலான படங்கள் ‘டப்பா’தான் என்பதால் தியேட்டரின் மவுசே குறைய ஆரம்பித்தது. ‘சின்னத்தம்பி’ விதிவிலக்காக இருநூற்றி ஐம்பது நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ‘மன்னன்’ படத்தில் கவுண்டமணியும், ரஜினியும் சேர்ந்து ‘சின்னத்தம்பி’ படம் பார்ப்பது இந்த தியேட்டரில்தான்.

பிரபுவின் நூறாவது படமான ‘ராஜகுமாரன்’ பயங்கர ஃப்ளாப். ஆனாலும் ஓனர் படம் என்பதால் ஆளே இல்லாத டீக்கடையில் நூறு நாட்களுக்கு ஈ ஓட்டி நஷ்டப்பட்டது சாந்தி தியேட்டர். கடைசியாக இனிய திலகம் விக்ரம் பிரபு நடித்த அத்தனை படங்களையுமே நூறு நாட்களுக்கு மேலாக (அரிமா நம்பி கூட என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) ஓட்டியது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்கனியை மட்டும் தனியாகப் பிரித்து ‘சாய்சாந்தி’ என்று தனி அரங்காக ஆக்கினார்கள்.

ஆண்பாவம், நீதிக்கு தண்டனை, வெற்றிவிழா, மன்னன், சந்திரமுகி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் இங்கே அபாரவெற்றி பெற்றவை. இந்திப் படமான ‘சங்கம்’ வெள்ளிவிழா கண்டதும் இங்கேதான். பாகவதரின் ‘ஹரிதாஸ்’ சாதனையை (பிராட்வே தியேட்டர்) உடைக்க வேண்டும் என்பதற்காகவே, ‘சந்திரமுகி’யை 888 நாட்கள் ஓட்டி கணக்கு காட்டினார்கள்.

எல்லா சென்னைவாசிகளையும் போலவே சாந்தி திரையரங்கோடு எனக்கும் உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எத்தனை படங்கள் இங்கு பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கே இல்லை. நண்பர்களோடு சேர்ந்து படங்கள் பார்த்த அற்புதமான தருணங்கள் எல்லாம் இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு காட்சி தொடங்குவதற்கு முன்பாக இன்றும் கவுண்டர் அருகே ஒயிட் & ஒயிட்டில் கம்பீரமாக வந்து நிற்கும் அந்த தியேட்டர் மேனேஜரை மறக்கவே முடியாது. இப்போது கலைஞரின் வயது ஆகிறது அவருக்கு. பெண்கள் பாதுகாப்பாக படம் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் அக்கறை காட்டுவார்.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்க்க க்யூவில் நிற்கும்போது கையில் லத்தியோடு கூட்டத்தை ஒழுங்குபடுத்த அங்கும், அவர் இங்குமாக அலையும் காட்சி ஓர் ஓவியம் மாதிரி மனசுக்குள் பதிந்திருக்கிறது. இவரது கேரக்டரைதான் ‘அமர்க்களம்’ படத்தில் சரண், வினுசக்ரவர்த்திக்கு கொடுத்திருப்பார்.

தியேட்டரை இடித்துவிட்டு மால் கட்டுகிறோம் என்று அதிகாரபூர்வமாக சிவாஜி குடும்பத்தார் அறிவித்து விட்டார்கள். புதிதாக கட்டப்படும் மாலில் சாந்தி என்கிற பெயரிலேயே சில ஸ்க்ரீன்கள் இருக்கும் என்று ஆறுதல் அளிக்கிறார்கள். இருந்தாலும் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ ஓடிய ஒரிஜினல் சாந்தி மாதிரி வருமா 

கருத்துகள் இல்லை: