திங்கள், 2 மார்ச், 2015

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 21- ஜே.கே.வும், தமிழ் சினிமாவும்! இந்த சிங்கத்தோடு பேசவே பயமாக இருக்கிறது .பாலசந்தர்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ என்கிற புத்தகத்தில் ஜெயகாந்தனின் சினிமா அனுபவங்கள் எல்லாம் விவரமாக எழுதப்பட்டுள்ளன. அவருக்கும் சினிமா உலகுக்கும் உள்ள உறவை, அதை விடவும் சிறப்பாகவும் விளக்கமாகவும் நான் எழுதிவிட முடியாது.
இருப்பினும், என் தனி அனுபவங்களில் நான் அறிந்தவற்றை எழுதுவது அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது என்று நம்புகிறேன்.
ஜெயகாந்தன் தமிழ் சினிமாவை மிகக் கடுமையாக விமர்சித் திருக்கிறாரே தவிர, நான் அறிந்தவரை, அது சம்பந்தமான நபர்களை எப்போதும் ஒரு பரிவுடனேயே நடத்தி வந்துள்ளார்.
சேத்துப்பட்டு மெக்னிகல்ஸ் ரோடில் ஜெயகாந்தன் குடியிருந்தார். என் துணைவியார் என் மகன் சிவகுமாரைப் பெற்றெடுக்கும் பொருட்டு எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். அப்போதெல்லாம் என் துன்பமான நேரங்களை எல்லாம், ஜெயகாந்தனுடன் நெருங்கி இருந்த இன்பத்திலேயே கழித்தேன்.

ஜெயகாந்தனின் அந்த வீட்டில் வர வேற்பறையைப் போல் வெளியே சில ஆசனங்கள் போடப்பட்டிருக்கும். ஒரு நாள், ஸ்தூல சரீரம் உள்ளவரும், முழங்கை வரை சட்டை அணிந்தவரு மான ஒருவர் ஜெயகாந்தனின் எதிரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது என் கவனத்தில் பதியவில்லை. ஆனால், உள்ளே எழுந்து சென்ற ஜெயகாந்தன் திரும்பி வந்து அவருக்கு ஏதோ பணம் கொடுத்ததைப் பார்த்தேன்.
அந்த நபர் போன பிறகு, ஜெயகாந் தன் என்னைப் பார்த்து, ‘‘இவர் யார் தெரியுமா..?’’ என்று கேட்டார்.
‘‘தெரியலே ஜே.கே...’’ என்றேன்.
‘‘இவர்தான் தமிழ் சினிமாவின் பழைய வசனகர்த்தா இளங்கோவன்” என்றார்.
இளங்கோவனின் பின்னால், தமிழ் சினிமாவின் கால் நூற்றாண்டு கால வரலாறு இருப்பதெல்லாம் எனக்குப் பின்னால் விவரமாகத் தெரியவந்தது.
சகஸ்ரநாமம் நடத்திய சேவா ஸ்டே ஜில் பங்கேற்ற பலரும் தனிப்பட்ட முறை யில் ஜெயகாந்தனின் நண்பர்களாகி யிருந்தனர். அவர்களில் பலர் தத்தம் திறமையின் காரணமாக அப்படியே சினிமா உலகுக்கு இடம் பெயர்ந்தனர். ஜெயகாந்தனின் புகழைத் தமிழ் சினிமா உலகுக்குக் கொண்டு சென்றவர்கள் பெரும்பாலும் அவர்களே எனலாம்.
சந்திரபாபு, அதன் பின்னர் நாகேஷ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் எல்லாம் ஜெயகாந்தனுக்கு நெருங்கிய நண்பர்களாகயிருந்தனர். ஒருமுறை ஜெயகாந்தனின் பேபி ஆஸ்டின் என்கிற சிறிய காரில், எங்கே செல்வது என்று தெரியாமல் சென்னையில் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தோம். என்னவோ யோசித்த ஜெயகாந்தன், ‘‘சந்திரபாபுவைப் பார்க்கப் போக லாமா?’’ என்று கேட்டார்.
சினிமாக்காரர்களைக் கண்டு வாயைப் பிளக்கக் கூடாது என்கிற அடிப்படை ஞானம் எங்களுக்கு வந்து விட்டிருந்தது. சரி…சரி… என்று ஒப்புக் கொள்வது உசிதமற்றதாகப்பட்டது. ‘‘நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ… அப்படியே செய்யலாம் ஜே.கே!’’ என்று ஜாக்கிரதை யாகப் பதில் சொன்னோம்.
‘‘நீங்க குடிப்பீங்களா…?’’ என்று ஜெயகாந்தன் கேட்டார்.
‘‘இதுவரையில் இல்லை ஜே.கே!’’ என்று நாங்கள் பதில் சொன்னோம்.
‘‘அப்படியானால் வேண் டாம். அங்கே போனால் அவன் குடிக்கச் சொல்லி வற்புறுத்துவான்’’ என்றார் ஜெயகாந்தன். அந்த சந்திரபாபுதான் ஜெயகாந்தனுக்கு ஜே.கே என்று சுருக்கமாக பெயர் வைத்தவர்.
கண்ணதாசனும் ஜெயகாந்தனும் சேர்ந்து, ‘நியாயம் கேட்கிறோம்!’ என்கிற பெயரில் ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டனர். அந்த சமயத் தில், அவர்களோடு சேர்ந்து சில ஸ்டுடியோக்களைச் சுற்றிப் பார்க்க முடிந்தது.
ஜெயகாந்தன் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராகப் பிரகாசிக்க ஆரம் பித்தப் பிறகு, தமிழ் சினிமா ஒரு மரியாதை கலந்த அச்சத்துடன் அவரை அவ்வப்போது கொஞ்சம் தொட்டுப் பார்த்துக்கொண்டது.
கே.பாலசந்தரின் படத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ புத்தகம், காட்சிக்குச் சுவை கூட்ட, அவ்வப்போது காட்டப்பட்டது.
‘புதிய வார்ப்புகள்’ என்கிற அவருடைய தலைப்பை அப்படியே வைத்துக்கொண்டு பாரதிராஜாவின் ஒரு படமும் வந்தது.
சில படங்களில் அவருடைய கதைக் கருக்கள் மிகவும் சமத்காரமாகக் கையாளப்படுவதும் நிகழ்ந்தது.
அப்போதெல்லாம், யாராவது வந்து அவரை ஒரு வழக்குப் போடும்படி வற் புறுத்துவார்கள். ஜெயகாந்தன் அதற்கு எப்போதுமே இரையானதே கிடையாது.
‘‘விடுங்கப்பா… இல்லாதவன் இருக்கிற இடத்திலே எடுத்துக்கிறான்!’’ என்று சொல்லிவிடுவார்.
அவர் மீது மிகவும் மதிப்புக் கொண்ட சில திரையுலக நபர்கள், தாங்கள் எடுத்த படத்தை வந்து பார்க்கும்படி அவரை மரியாதையாக அழைப்பது உண்டு.
‘‘இதோ பாருங்கள்... இந்தப் படம் எனக்குப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்தப் படம் எனக்குப் பிடித்தால், அது ஜனங்களுக்குப் பிடிக்காமல் போய்விடும். எனக்குப் பிடிக்காத படங்களெல்லாம்தான் வசூலை நிறைய அள்ளியிருக்கின்றன. உங்களுக்கும் வசூலாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!’’ என்பது போல அந்த நிகழ்ச்சிகளைச் சமாளித்து விடுவார்.
தமிழ் சினிமாவை அவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கடுமையாகத் தாக்கி அபிப்ராயம் கூறி வந்தாலும், தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஆளுமைகள் எல்லாம் அவ்வப்போது அவருக்குப் புகழாரமே சூட்டி வந்தனர்.
‘‘இந்த சிம்மத்தின் எதிரே பேசு வதற்கே பயமாயிருக்கிறது!’’ என்றார் கே.பாலசந்தர் ஒரு தடவை. ஒரு பிறந்த நாள் விழாவில் பாராட்ட வந்த பாரதிராஜா, ‘‘இமயத்துக்கு யார் தலைப்பாகை கட்ட முடியும்?’’ என்று சொல்லி வியந்தார்.
புதுமுகமாக அறிமுகமாகும் நடிகையருள் சிலரும், தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று சொல்லத் தொடங்கினர்.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
//tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: