வெள்ளி, 6 மார்ச், 2015

ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு10 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

புதுடில்லி: அரியானா முன்னாள் முதல்வரும், வட மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும், 'ஜாட்' இனத்தின் தலைவர்களில் ஒருவருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவர் மகன் அஜய் சவுதாலாவுக்கு, டில்லி, சி.பி.ஐ., கோர்ட், 2013ல் வழங்கிய, 10 ஆண்டு சிறை தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றம், நேற்று உறுதி செய்தது.தீர்ப்பு வழங்கிய நீதிபதி சித்தார்த் மிருதுள், ''சவுதாலாவுக்கு, 80 வயதாகும் நிலையிலும், அவர் மீது கருணை காட்ட முடியாது,'' என உத்தரவிட்டு, 'ஊழல் முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது' என்பதை உறுதி செய்துள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான அரியானா மாநிலத்தில், 2000ம் ஆண்டில், 3,200 ஆசிரியர்கள், மாநில அரசால் நியமிக்கப்பட்டனர்; பணம் பெற்று, தகுதியில்லாத பலருக்கும், பணி வழங்கப்பட்டது. இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும், கல்வித்துறைச் செயலராக இருந்த சஞ்சீவ் குமார் என்பவர், ஊழலை அம்பலப்படுத்தினார்; விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியது. பதிமூன்று ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணை, 2013ல் முடிவுக்கு வந்தது. முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த, முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவர் மகனும், எம்.எல்.ஏ.,வுமான அஜய் சவுதாலா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சீவ் குமார், மற்றொரு அதிகாரி வித்யா தார், சவுதாலாவின் உதவியாளர் என ஐந்து பேருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



வயதாகிவிட்டது: தீர்ப்பு வெளியான உடனே, இந்த வழக்கில் தொடர்புடைய, சவுதாலா, அவர் மகன் உட்பட, 55 பேரும் அப்போது சிறையில் அடைக்கப்பட்டனர். 'எனக்கு, 78 வயதாகிறது; உடல் நலம் சரியில்லை; ஜாமினில் விட வேண்டும்' என, சவுதாலா கோரியதை கோர்ட் நிராகரித்தது. இதற்கிடையே, 'எனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு போதிய ஆதாரங்கள் கிடையாது; அரசியல் காரணங்களுக்காகத் தான் இந்த வழக்கு தொடரப்பட்டது' என, சவுதாலா மற்றும் பிறர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சித்தார்த் மிருதுள், ''குற்றவாளிகள் அனைவருக்கும், மிகவும் சரியாகத் தான் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. வழக்கு விசாரணை முடிவுக்கு வருகிறது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,'' என, அதிரடியாக உத்தரவிட்டார். தண்டனை அனுபவித்து வரும், பிற, 50 குற்றவாளிகளின் தண்டனையை, இரண்டாண்டுகளாகக் குறைத்தும், நீதிபதி நேற்று உத்தரவிட்டார். ஜாமினில் வெளியே இருந்த, அஜய் சவுதாலா மற்றும் பிறர், உடனடியாக சிறையில் ஆஜராக வேண்டும் எனவும், நீதிபதி உத்தரவிட்டார். அஜயின் தந்தை ஓம் பிரகாஷ் சவுதாலா, ஏற்கனவே சிறையில் தான் உள்ளார்.கொடிகட்டி பறக்கும் அரசியல் குடும்பம்: இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா, அரியானா மாநில முன்னாள் முதல்வர். அவரின் தந்தை, தேவி லால், அரியானா முன் னாள் முதல்வராக இருந்தவர்; துணை பிரதமராகவும் இருந்துள்ளார். இவர்கள் குடும்பம், நீண்ட காலமாக அரியானா மற்றும் தேசிய அரசியலில் கொடிகட்டி பறக்கிறது. அஜய் சவுதாலாவின் மகனான துஷ்யந்த் சவுதாலா, ஹிசார் தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.


80 வயதானாலும் வெளியே விடமுடியாது
* 'திஸ் இஸ் தி என்ட் ஆப் த ரோட்' - வழக்கு முடிவுக்கு வருகிறது; மேற்கொண்டு விசாரிக்க ஒன்றுமில்லை.

* திட்டமிட்டு கும்பலாக முறைகேடு செய்தனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்கள் முதுகெலும்பை சில்லிட வைக்கின்றன.

* இந்த நாட்டில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் ஊழலை அப்பட்டமாகக் காட்டும் வகையில் அரியானாவில் ஆசிரியர் நியமன ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் முறையான ஆட்சி நடைபெறவில்லை என்பதை இந்த ஊழல் காட்டுகிறது. * 80 வயதாவதாலும் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாலும் கருணை காட்டுமாறு ஓம் பிரகாஷ் சவுதாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருக்கு கருணையே காட்ட முடியாது. அவர் செய்த குற்றம் அத்தகைய குற்றம். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கியது சரி தான்.
* ஏனெனில் பொறுப்பான மாநில முதல்வர் பதவியில் இருந்த அவர் அந்த பொறுப்பை தவறாகப் பயன்படுத்தி அப்பாவி இளைஞர்கள் வேலை கிடைக்கும் என நம்பியிருந்த இளைஞர்களின் கனவை சிதைத்துள்ளார்.


* இது போன்ற முறைகேடுகள் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்காமல் செய்வதுடன் தகுதியுடைய பல இளைஞர்களுக்கு பல திறமைகளை கொண்டிருந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமலும் செய்துள்ளது. எனவே இதை மேலும் அனுமதிக்க முடியாது.

* இவர்கள் கூட்டாக செய்த ஊழலால் பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. வேலை கிடைக்கும் என நம்பியிருந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த முறைகேட்டால் மன வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

* ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அரசு பணியில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்கள் இந்த முறைகேட்டை பணத்திற்காகவும் மேலிட உத்தரவுக்காகவும் செய்துள்ளனர்.

* இவர்களின் செயல் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் இவர்களுக்கு சாதாரண தண்டனை விதிக்க முடியாது. தண்டனையிலிருந்து தப்ப அனுமதிக்க முடியாது. இவ்வாறு காட்டமாக பல உத்தரவுகளை நீதிபதி சித்தார்த் மிருதுள் பிறப்பித்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை: