திங்கள், 18 ஆகஸ்ட், 2014

இப்போதே நேரில் பார்த்துவிடுங்கள் ! வரலாற்றில் சட்டசபையில் இந்த ரேஞ்சுக்கு துதிபாடும் காட்சி ! மீண்டும் வாராது !

அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் அம்மாவை வானாளவ புகழ்ந்துவிட்டு போகட்டும். அது அவர்களது இயல்பு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டம் தட்டுவது போலப் பேசிச் சீண்டலாமா?“தன் கட்சி சின்னம் எது என்று தெரியாமல் தடவி, தடவி தாரத்தின் துணை கொண்டு தடுமாறி, தடுமாறி ஓட்டுப்போட்ட ஒருவர், அம்மாவை எதிர்த்து நிற்க பலவகையில் கூட்டணி போட்டார். அப்படிப்பட்டவருக்கு ஒன்று சொல்கிறேன். நீங்க என்னிக்கும் தனியா நிக்க மாட்டீங்க, தண்ணியில நிப்பீங்க; இல்லை என்றால், தாரம் சொல்லும் வழியில் தப்பாதான் நிப்பீங்க. மொத்தத்தில் மச்சானுக்காக மப்பேத்தி நிப்பீங்க” (தினத்தந்தி, 6 ஆகஸ்ட் 2014)
ஏதோ தெருமுனை கூட்டம் ஒன்றில் மூன்றாந்தர கட்சிப் பேச்சாளர் பேசிய பேச்சல்ல இது. இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர் செந்தூர் பாண்டியன் அளித்த பதில் இது. இந்த பதிலைக் கேட்டதுமே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பரித்தார்கள்.

நேரடியாகப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை என்றாலும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தை நோக்கி செய்யப்பட்ட சீண்டல். தங்கள் தலைவரை படுமோசமாக தாக்கி அமைச்சர் பேசியதைக் கேட்டதுமே, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமடைந்தனர். தங்களுக்குப் பேச வாய்ப்பு வழங்க வேண்டுமென்று சபாநாயகர் தனபாலை கேட்டார்கள்.

“யாரையும் சுட்டிக் காட்டி பேசவில்லை. அப்படியிருக்க ஆட்சேபணை தெரிவிக்க தேவையில்லை” என்று அமைச்சர் சொன்னார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், தேமுதிகவினருக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை. அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

சீண்டப்பட்டவர்கள் எதிர்பார்த்தபடியே வெளியேறி விட்டார்கள். ஆனாலும் அமைச்சர் தன்னுடைய பதிலை(!) தொடர்ந்தார்.

“அரசியலில் எதிரிகளை, ஓட விடுவது என்பது ஒருவகை. ஓடவிட்டு, ஓடவிட்டே, ஒன்னும் இல்லாமல் செய்வது இன்னொரு வகை. அம்மா ஒருவர்தான் அரசியலில் மட்டித் தலைவர், புட்டித் தலைவர், குட்டித் தலைவர் அனைவரையும் ஓடவிட்டு ஓடவிட்டே மண்ணைக் கவ்வ வைத்தார்”

இந்தப் பதிலால் மக்களுக்கு ஏதாவது பயனுண்டா? அமைச்சரின் பேச்சுக்கும் இந்துசமய அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
சட்டமன்றத்தில் தங்கள் பிரச்சினைகளை விவாதிப்பார்கள், தீர்த்து வைப்பார்கள் என்று நம்பி அவர்கள் வாக்களித்து அனுப்பியவர்கள் இப்படித்தான் ‘டைம்பாஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் எந்த ஒரு பிரச்சினையைப் பேச எழுந்தாலும், யாராவது ஒரு அமைச்சர் எழுந்து சம்பந்தப்பட்ட கட்சித்தலைவரை சீண்டுவது கடந்த சட்டமன்றத் தொடரில் தொடர்கதை ஆகிவிட்டது. இளம் அமைச்சர்கள் மட்டுமின்றி மூத்த அமைச்சர்களும் இந்த ‘நாகரிகத்தை’ தொடர்கிறார்கள் என்பதுதான் அவலம்.

முல்லைப்பெரியாறு குறித்த விவாதம் ஒன்றில் தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் தங்கள் தலைவரை குறித்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கத் தொடங்கினார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமில்லாமல் கட்சித்தலைமையை குளிர்வித்துவிட்டுதான் உரையைத் தொடங்குகிறார்கள். மக்கள் மன்றத்தில் நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதைக் குறித்த கவலை யாருக்குமே இல்லை.

உடனே எழுந்த முன்னாள் முதல்வரும், மூத்த அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் “உங்கள் தலைவரைப் பார்த்து இந்த நாடே சந்தி சிரித்தது” என்றார்.

அமைச்சரின் இந்த ‘பொறுப்பான’ பதிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உறுப்பினருக்கு அனுமதி வழங்கப் படவில்லை. “விவாதம் கூடாது. உட்காருங்கள்” என்று சபாநாயகர் சொல்லிவிட்டார்.

“நகர்ப்புறங்களில் மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவுக்கு, கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் வழங்கவேண்டும்!” என்று கோரிக்கை வைத்தார் திமுக உறுப்பினர் எ.வ.வேலு.

பொறுப்பான அமைச்சர் என்ன பதில் சொல்லவேண்டும்? வழங்க முடியும் அல்லது முடியாது. முடியாது என்றால் ஏன் முடியாது என்று விளக்க வேண்டும். இதுதானே மக்கள் எதிர்பார்ப்பு?

“கருணாநிதியின் மகன் மத்திய மந்திரியாக இருந்தார். அப்போதே மத்திய அரசை கூடுதல் மண்ணெண்ணெய் கேட்டு பெற்றிருக்கலாமே?” என்று பதில் அளிக்கிறார் செல்லூர் ராஜூ. தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே போக, சபாநாயகர் தனபாலுக்கே தாங்க முடியாமல் சில வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார். அமைச்சரின் வார்த்தைகளையே அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் லட்சணத்தில்தான் நம் சட்டமன்றத்தில் விவாதம் நடக்கிறது.

கல்வித்துறை மானியக் கோரிக்கை எவ்வளவு முக்கியமானது. அந்த விவாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற கட்சிகள் குறித்து கவிதை பாடுகிறார் ஆளுங்கட்சி உறுப்பினர் மயிலாப்பூர் ராஜலட்சுமி.

“தைரியம் இருந்தால் தேர்தலில் தனித்து நில்லுங்கள். உங்கள் தலைமையின் தகுதி இந்த தேர்தலில் தெரிந்துவிட்டது. உங்களை யாரும் சீண்டமாட்டார்கள். தொகுதிக்கு ஆயிரம் வாக்குகளையாவது வாங்கிக் காட்டுங்கள்” என்று எதிர்க்கட்சியான தேமுதிகவை பார்த்து சவால் விடுகிறார் அமைச்சர் வைத்தியலிங்கம். இது சட்டமன்றமா அல்லது அதிமுக கட்சி மாநாடா?

சட்டமன்றத்தில் நிகழும் ஆளுங்கட்சியின் அநாகரிகமான சீண்டல்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல நடந்ததுதான் ‘ஓடுகாலி’ விவாதம்.

மவுலிவாக்கம் பதினோரு மாடி கட்டிட விபத்தினைக் குறித்துப் பேச எதிர்கட்சிகள் வாய்ப்பு கேட்டன. அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டபோது திமுக, தேமுதிக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டும் வாய்ப்பு கேட்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து அமைச்சர் வைத்தியலிங்கம் சொன்னார்.

“ஓடுகாலிகள் வெளியே சென்று விட்டார்கள். நீங்கள் அமர்ந்து என் பதிலை கேளுங்கள்”

மறுநாள் ‘ஓடுகாலி’ என்கிற வார்த்தையை நீக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் கேட்டபோது, ‘அது நாகரிகமான வார்த்தைதான் நீக்க வேண்டிய அவசியமில்லை’ என்று பதில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளில் ராக்கிங் செய்வது மாதிரி எதிர்கட்சிகளை சீண்டுவது. அவர்கள் பதில் சொல்ல வாய்ப்பு கேட்டால் வாய்ப்பு மறுக்கப்படுவது. அவர்களாக வெளிநடப்பு செய்தால் தப்பித்தார்கள். இல்லையேல் குண்டுக்கட்டாக வெளியேற்றம்.

“எங்களுக்கு எல்லாம் தரும் தங்களுக்கு (முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு) திருப்பித்தர உயிரை தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. இருப்பினும் மீண்டும் பிறப்பு ஒன்று உண்டு என்றால், நான் புல்லாய் பிறக்க வேண்டும், போயஸ் தோட்டத்தில்;நான் கல்லாய் பிறக்க வேண்டும், அம்மா வீற்றிருக்கும் தலைமைச் செயலகத்தில்; நான் மிதியடியாய் பிறக்க வேண்டும், தாயின் திருப்பாதத்தில்; மொத்தத்தில் கற்பூரமாய் பிறக்க வேண்டும், அம்மா எனும் சன்னிதானத்தில் கலந்துவிட” என்று அமைச்சர் செந்தூர் பாண்டியன் அள்ளி விட்டததைப் போன்ற புகழுரைகளைப் பேசுவதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை (மக்களின் பணம் வீணடிக்கப்பட்டாலும்) ஆனால் மக்கள் மன்றமான சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க இடமின்றி, எதிர்க்கட்சிகளை சீண்டி வெளிநடப்பு/வெளியேற்றம் செய்வது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல

“உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன...” என்று அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், முதல்வர் அண்ணாவை நோக்கிச் சொன்னார் (அண்ணாவுக்கு அப்போது உடல்நலம் சற்று குன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது). ஆவேசப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களை அமைதிப்படுத்திவிட்டு அண்ணா சொன்ன பதில். “நாங்கள் எங்கள் அடிகளை எண்ணித்தான் வைக்கிறோம்”

அந்தப் பொற்காலம் திரும்புமா?

(நன்றி : புதிய தலைமுறை)

கருத்துகள் இல்லை: