ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான ஆதரவை முதல் அமைச்சர்கள்
கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் ஆதரவு தெரிவித்ததைச் சுட்டிக்
காட்டி, அதனை நிறைவேற்றித் தருமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களை
வலியுறுத்தி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள
அறிக்கை வருமாறு:
ஜாதி - தீண்டாமை - இவைகளைச் சட்ட பூர்வமாக
ஒழிக்கும் முயற்சியின் முத்தாய்ப்பான திட்டம்தான் அனைத்து ஜாதியினரும்
(ஆதி திராவிடர் உட்பட) அர்ச்சகராகும்! திட்டமும் - சட்டமும்.
தந்தை பெரியார் தமது 95ஆம் ஆண்டிலும் இறுதியாக போராட்டக் களத்திற்கு ஆயத்தமானார்கள் 1973!
பெரியார் நெஞ்சில் முள் - கலைஞர் ஆதங்கம்!
அய்யா மறைந்தபோது அவர்களுக்கு அரசு
மரியாதை கொடுத்து, அடக்கம் செய்த தி.மு.க. ஆட்சித் தலைவர், கலைஞர் அவர்கள்,
தந்தை பெரியார் அவர்களை நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்தோம் என்று தனது
ஆதங்கத்தை பெரியார் தொண்டர்கள், ஜாதி ஒழிப்பு சிந்தனையாளர்கள் கருத்தோடு
இணைந்து பிரதிபலித் தார்கள். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்,
ஏற்கெனவே நமக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்தி, அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகராக, அர்ச்சகர் பயிற்சியை 69 சதவிகித
இடஒதுக்கீட்டின்படி, சைவ, வைணவக் கோவில்களில் பணிபுரிய நீதியரசர்
ஏ.கே.ராஜன் அவர்களது குழுவின் பரிந்துரைகளைச் செயலாக்க, சட்டத்தை 2006-இல்
இதே நாளில் (22.8.2006) தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பே இன்றி
நிறைவேற்றினார்கள்.
இச்சட்டத்தின்படி பயிற்சி முடித்து 200க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதி மாணவர்களும், பணிக்காக காத்திருக்கும் நிலையில்,
அர்ச்சகர் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அவ்வழக்கு ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கு முன்பாக
உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, புதிதாக பதவிக்கு வந்த
அ.இ.அ.தி.மு.க. அரசு சார்பில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர்
நாங்கள் வெளியில் இதை சமாதானமாகத் தீர்த்துக் கொள் கிறோம்; அதுவரை வழக்கு
விசாரணை நடவடிக்கை களைத் தள்ளி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால், இதுவரை அது எந்த விதமேல் நடவடிக்கை யும் இன்றி, கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே கிடக்கிறது!
முன்பு இன்றைய முதல் அமைச்சர் அவர்கள்
நாங்கள் இதனை செயல்படுத்துவோம் என்று அறிக்கை வாயிலாக மட்டுமின்றி
சட்டமன்றத்திலும் உறுதி கூறியுள்ளார் (9.4.1992).
திருச்சியையடுத்த கம்பரசம்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரி நிறுவிட அஇஅதிமுக ஆட்சியில் இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டதுகூட உண்டு.
திருச்சியையடுத்த கம்பரசம்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரி நிறுவிட அஇஅதிமுக ஆட்சியில் இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டதுகூட உண்டு.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்....
இச்சட்டத்திற்குரிய மூலாதாரமே அதிமுக
ஆட்சித் தலைவராக திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது, தந்தை பெரியார்
அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாடி அரசு விழாவாக
நடத்திய போது இத்திட்டத்தை அறிவித்து, நீதிபதி மகராசன் குழுவையும்
நியமித்து, அவரது பரிந்துரையைப் பெற்றனர்.
உச்சநீதிமன்றத்தில் 1970-இல் ஏற்கெனவே
திமுக கொண்டு வந்த சட்டம் செல்லும் என்றே தீர்ப்பளித்து, ஆகம விதிப்படி
அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும் என்பதை வற்புறுத்தியதன் பேராலேயே
மீண்டும் நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் திமுக ஆட்சி குழு அமைத்து,
சட்டப்படிக்கான அத்துணை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் பூர்த்தி
செய்துள்ளது.
கடந்த 44 ஆண்டுகளாக இம்முயற்சி என்பது,
தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும், ஒரு தொடர் ஓட்டம், தொடர்
முயற்சியாகவே அமைந்துள்ளது.
வேலை வாய்ப்புக்காக அல்ல
வெளியில் பேசித் தீர்த்துக் கொள்ளுவதாக
உச்சநீதி மன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த தமிழக அரசு, இந்து அறநிலையப்
பாதுகாப்புத்துறை மான்யக் கோரிக்கை விவாதம் அண்மையில் நடைபெற்ற போதுகூட
இதுபற்றி மூச்சே விடவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
இச்சட்டம் யாரோ 4 பேர்களுக்கு வேலை
கொடுக்கும் சட்டம் அல்ல; அதை விட ஆழமாக ஜாதி, தீண்டாமை வேரில் சென்று
அவற்றை அகற்றும் சட்டம் என்பதை தமிழக அரசு மனதிற் கொண்டு, உடனடியாக
இதற்குரிய மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, படித்துத் தேர்ச்சி பெற்றுப்
பணிக்குத் தயாராக இருப்பவர்களை கோவில் களில் நியமனம் செய்து ஆண்டுதோறும்
மற்ற கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைபோலவே ஆவன செய்யமுன்வர வேண்டும்.
ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்று திரட்டித் திட்டம் தீட்டுவோம்!
இதற்காக அடுத்து, ஒத்தக் கருத்துள்ள
அனைவரையும் அழைத்து, அரசை வற்புறுத்தும் திட்டங்கள்பற்றி முடிவு செய்ய
திராவிடர் கழகம் ஆயத்தமாகும் என்பதை தமிழக அரசுக்கு, குறிப்பாக முதல்
அமைச்சர் அம்மையார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்
.viduthalai.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக