ஊர்ப்பக்கத்தில் விவசாய நிலம் ஒரு ஏக்கர் வாங்க வேண்டுமானால் பதினைந்து
லட்ச ரூபாயாவது தேவைப்படுகிறது. பாசனத்திற்கு ஓரளவு தண்ணீர் இருந்து
சுமாரான சாலை வசதியோடு இருந்தால் இந்த விலை. அதுவே நல்ல சாலைகள், நல்ல மண்
என்றால் முப்பது லட்சத்தைக் கூடத் தொடுகிறது. தண்ணீர் இல்லாத வறக்காடு
என்றாலும் கூட ஏழு அல்லது எட்டு லட்சத்துக்கு விலை சொல்கிறார்களாம்.
அதற்கும் குறைவாக வாய்ப்பே இல்லை. தண்ணீர் இல்லாத காடுகளை வாங்கி என்ன
செய்வது? ஜேசிபியை விட்டு நிரவி சுற்றிலும் வண்ணக் கொடிகளைக் கட்டி ‘மிகச்
குறைந்த விலையில் சைட் விற்பனைக்கு’என்ற பேனர் வைக்கலாம். ஆனால்
வறக்காடுகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யலாம்
என்று நினைத்தால் அதை விட பைத்தியகாரத்தனம் வேறு இருக்க முடியாது. ஆயிரம்
அடிகளைத் தொட்டால் கூட ‘வெறும் காத்துதான் வருது’ என்கிறார்கள். இன்னும்
கொஞ்சம் தோண்டினால் பெட்ரோல் கிடைத்தால் கூட கிடைக்கலாம் ஆனால் தண்ணீர்
கிடைக்க வாய்ப்பில்லை.
சத்தியமங்கலத்தைச் சுற்றிய பகுதிகளில் ஆழ்துளைக் குழாய் தோண்டினால் தண்ணீர்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அங்குதான் பவானி ஆறு பாய்கிறது. இந்த ஆறு
காலங்காலமாக நிலத்துக்கடியில் இறங்கிய நீரை நாம் மோட்டார் வைத்து
உறிஞ்சலாம்தான். ஆனால் அதற்கும் பெரிய அடி கொடுத்திருக்கிறார்கள்,
பெருமுதலைகள். அந்த ஊரைச் சுற்றிலும் பெரிய பெரிய காகித ஆலைகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டிருக்கிறது. பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பாக
தோட்டங்காடுகள் இவ்வளவு விலையில் விற்கவில்லை அல்லவா? அதனால் இந்த முதலைகள்
ஏக்கர் கணக்கில் வளைத்துப் போட்டுவிட்டார்கள். அந்த நிலங்களில் காகித ஆலை
செயல்படத் தொடங்கியதும் ஆலையைச் சுற்றிலும் இருக்கும் தங்கள் இடத்தில்
ஆயிரம் அடிகளுக்கு போர்வெல்லை இறக்கியிருக்கிறார்கள். தண்ணீர்
எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். காகித ஆலைக் கழிவு நீரை
நிலத்துக்குள் இறக்குவதற்காகத்தான் இந்தக் குழிகள்.
ஆலையின் கழிவு மொத்தத்தையும் இந்த ஆழ்துளைக் குழாய்களில் நேரடியாக
இறக்கிவிடுகிறார்கள். பூமாதேவியின் ரத்தத்தில் கசப்பு ஏற்றுகிறார்கள்.
ஒன்று அல்லது இரண்டு ஆலை என்றால் பரவாயில்லை- சுற்றுப்புறத்தில் இருக்கும்
கிட்டத்தட்ட அத்தனை ஆலைகளுமே இதைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும்
கோடிக்கணக்கான லிட்டர் அசுத்த நீர் புவிக்குள் இறங்கிக் கொண்டேயிருக்கிறது.
மாவட்ட நிர்வாகத்திலிருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரைக்கும்
நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள் போலிருக்கிறது. அள்ளி வீசாமல் இவ்வளவு
பெரிய அக்கிரமத்தை நிகழ்த்த முடியுமா? bones பொறுக்குபவர்கள் தெரிந்தோ
தெரியாமலோ கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.
சுற்றியிருக்கும் தோட்டங்காட்டுக்காரர்கள் ஆற்று நீரில் பாசனம் செய்தால்
பிரச்சினையில்லை. ஒருவேளை தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆழ்துளை தோண்டினால்
அவ்வளவுதான். காகிதப்புண்ணியவான்கள் இறக்கிய கசப்பு நீர்தான் போர்வெல்லில்
வருகிறது. குடிக்க முடியாவிட்டாலும் கூடத் தொலைகிறது- விவசாயத்திற்கும்
ஆவதில்லை. கொடுமை.
இவர்கள் துளையிட்டு பூமிக்குள் ஊற்றும் நச்சு நீர் அதே இடத்தில் நிற்கவா
போகிறது? புவிக்கடியில் இருக்கும் பாறையிடுக்குகளின் வழியாக பல
கிலோமீட்டர்கள் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புவிக்கடியில் எந்த இடத்தில்
நீர் இருந்தாலும் அதோடு கலந்து நாசமாக்குகிறது. சுற்றுவட்டாரத்தில் எந்த
இடத்தில் துளையிட்டு தண்ணீரை வெளியே எடுத்தாலும் இந்தக் கசப்புதான்
நாக்கில் ஊறுகிறது. அக்கிரமம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஓ.ஆறுமுகசாமி என்றொரு வள்ளல் இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய்
கல்வித்தொகையை அள்ளி வீசுகிறார். அவருடைய தொழில் என்னவென்று விசாரித்தால்
ஆற்றில் மணல் எடுக்கிறார். சத்தியமங்கலத்துக்கு அருகில் சாரதா பேப்பர் மில்
என்றொரு மிகப்பெரிய ஆலையை வைத்திருக்கிறார். அவருடைய ஆலையிலும் கூட
நிலத்துக்குள்தான் கழிவு நீரை இறக்குவதாகச் சொல்கிறார்கள். இது உண்மையான
குற்றச்சாட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள்
அப்படித்தான் சொல்கிறார்கள். பேப்பர் மில், மணல் எடுப்பது தவிர வேறு
என்னென்ன தொழில்களை நடத்துகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு
தொழில்களும் போதாதா- பூமியைச் சீரழிக்க? பூமியை நாசக்கேடாக்கி அதில் பல
நூறு கோடிகளைச் சம்பாதித்து மாணவர்களுக்கு கோடிகளை அள்ளி வீசுகிறார்.
அவரிடம் கைநீட்டி பணம் வாங்கிவிட்டு எப்படி பேசத் தோன்றும்? கொங்குநாட்டில்
அவரைப் பற்றி கேட்டுப் பாருங்கள். ‘அவர் எப்படியோ சம்பாதிச்சுட்டு
போகட்டும்....அள்ளிக்கொடுக்க மனசு வேணுமில்ல’ என்கிறார்கள். அத்தனை
செல்வாக்கு அவருக்கு. அவர் கொடுப்பதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால்
சற்றேனும் பூமி பற்றிய அக்கறை இருக்க வேண்டுமல்லவா? காலகாலத்துக்கும் இந்த
நிலத்தை மலடாக்கிவிட்டு இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு பணம் கொடுத்து என்ன
பிரையோஜனம்?
சரி விடுங்கள். பெரிய இடத்து விவகாரம்.
நிலத்தின் விலை இவ்வளவு அதிகமாக என்பதால் விவசாயம் கொடிகட்டுகிறது என்று
நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பெரும்பாலான இடங்களில் விவசாயம் செத்துக்
கொண்டிருக்கிறது. வாழைக்காயில் எடை வருவதில்லை. வெங்காயம் பாதியிலேயே
கருகிப் போகிறது. பூச்செடி வைத்தால் அதிலும் பெரிய விளைச்சல் இல்லை.
கத்தரிக்காயில் நோய் விழுகிறது. கிட்டத்தட்ட எல்லா பயிர்களுமே
இப்படித்தான். ஜீவனத்தை நடத்த வேண்டும் என்பதற்காக இழுத்துப் பிடித்துக்
கொண்டிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்களும் தொழிலதிபர்களும்
நிலத்துக்காக பல லட்சம் கொடுப்பதாக ஆசை காட்டினால் ‘இந்த வேளாணமையைக்
கட்டிக் கொண்டு மாரடிப்பதைவிட நிலத்தைக் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும்
செய்து கொள்ளலாம்’ என்று நினைப்பவர்கள்தான் அதிகம். படுவேகமாக விவசாயத்தைக்
கொன்று வருகிறோம்.
எனக்குத் தெரிந்து எந்த விவசாயியும் தனது அடுத்த தலைமுறை இந்தத் தொழிலுக்கு
வர வேண்டும் என்று நினைப்பதில்லை. அது எவ்வளவு பெரிய மிராஸ்தாராக
இருந்தாலும் சரி- வருங்காலத்தில் விவசாயம் செய்வது சுலபமான காரியமில்லை
என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். நீர் குறைந்து கொண்டே வருகிறது. சூழல்
நாசக்கேடாகிக் கொண்டிருக்கிறது. விளைச்சல் ஒவ்வொரு வருடமும் அடி வாங்கிக்
கொண்டிருக்கிறது. அவ்வப்போது இதுவரை அறிமுகமேயில்லாத புழுக்களும், நோயும்
வந்து பயிர்களைத் தாக்குகின்றன. அப்படியே கொஞ்சநஞ்சம் விளைந்தாலும் விலை
கிடைப்பதில்லை. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் விவசாயிக்கு அடிதான். எப்படி
இந்தத் தொழில் பிழைக்கும்?
உழவுக்கு வந்தனை செய்யாவிட்டாலும் தொலைகிறது- நம்மவர்கள் வளர்ச்சி,
வருமானம், தொழில்மயம் என்ற வெவ்வேறு பெயர்களில் அடித்துத் துவைக்கிறார்கள்.
நிலத்தை மிக வேகமாக மலடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக விவசாயம்
செழித்த நிலங்கள் இப்பொழுது தரிசாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த பதினைந்து
வருடங்களில் இந்த மலடாக்கலின் வேகம் பன்மடங்காக இருக்கிறது. அரசாங்கமும்
ஆட்சியாளர்களும் இதைப்பற்றியெல்லாம் எவ்வளவு தூரம் கவனத்தில் கொள்கிறார்கள்
என்று தெரியவில்லை.
மோடியின் அரசு செல்வி.உமாபாரதியை நீர்வளத்துறை அமைச்சராக நியமித்தவுடன்
சந்தோஷமாக இருந்தது. நீர்வளத்துக்கென்று தனி அமைச்சர். ஆனால் அந்த
அம்மையார் காசியைத் தாண்டி கீழே வர மாட்டார் போலிருக்கிறது. கங்கையும்
காசியும் அவசியம்தான். ஆனால் அவற்றைத் தவிர்த்து கோடிக்கணக்கான ஏக்கர்
நிலங்கள் நீருக்காக ஏங்கிக் கிடக்கின்றன. லட்சக்கணக்கான ஏரிகள் காணாமல்
போய்க் கொண்டிருக்கின்றன. பல லட்சம் விவசாயிகள் வேறு தொழிலைப் பற்றி
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலத்தடி நீர் சுத்தமாகக் காலியாகிக்
கொண்டிருக்கிறது. காய்ந்து கிடக்கும் தரிசு நிலங்களுக்கு ஏதாவது திட்டத்தை
அறிவிப்பார் என்றால் காணாமல் போய்விட்ட சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்போம் என
அறிவித்திருக்கிறார். கண்டுபிடிக்கட்டும். அப்படிக் கண்டுபிடித்த பிறகாவது
அந்த சரஸ்வதி தேவி எங்களை ஆள்பவர்களுக்கு புத்தியைக் கொடுக்கட்டும். nisaptham.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக