புதன், 20 ஆகஸ்ட், 2014

மைத்திரேயனுக்கு மந்திரிபதவிக்கு ஆசை ! ஜெயாவை மட்டும் காப்பாத்தினால் போதும் சசி ,இளவரசன் ,சுதாகரனுக்கு ஆப்பு ? புல் டீடெயில் !

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த மைத்ரேயன் திடீரென கட்சிப் பொறுப்புகள் அனைத்திலும் இருந்து ஒட்டுமொத்தமாக கழற்றிவிடப்பட்டிருப்பது குறித்து பல புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவில் மருத்துவர் அணி, ராஜ்யசபா குழுத் தலைவர் என்றெல்லாம் பதவி வகித்து வந்தவர் மைத்ரேயன். பாரதிய ஜனதாவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் என்றாலும் அவர் நம்பகமானவர் என்பதால் கூடுதல் முக்கியத்துவத்தை ஜெயலலிதா கொடுத்திருந்தார். லோக்சபா துணை சபாநாயகராக தம்பிதுரை தேர்வு செய்யப்பட்ட நிலையில் இனி நாடாளுமன்றத்தில் தனது குரல்மட்டுமே எதிரொலிக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த மைத்ரேயனுக்கு திடீர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது அதிமுக மேலிடம். இதற்கு காரணமாக சொல்லப்படுவது மைத்ரேயன் நடத்திய தனி லாபிகள்தானாம். மைத்ரேயனுக்கு அப்படி என்ன செய்தார் மைத்ரேயன்? சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா- அதிமுக இடையேயான கூட்டணிக்கு தான் உத்திரவாதம் கொடுப்பதாகவும் தமக்கும் தம்பிதுரையைப் போல மத்திய அரசில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் மைத்ரேயன். அத்துடன் பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை மட்டும் காப்பாற்றிவிட்டு சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தண்டனை கிடைத்தால் பரவாயில்லை என்றும் ரவிசங்கர் பிரசாத்திடம் மைத்ரேயன் கூறியிருக்கிறார். ரவிசங்கர் பிரசாத்தை சந்திக்கும் போது தமக்கு ஆதரவாளர்கள் என காட்டிக் கொள்ள 2 எம்.பிக்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் மைத்ரேயன். மைத்ரேயன் அழைத்துச் சென்ற எம்.பிக்களில் ஒருவர் சசிகலாவின் நம்பிக்கைக்குரியவர். இவர் சசி தரப்பிடம் விஷயத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டார். இந்த விவகாரம் ஜெயலலிதாவின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட மைத்ரேயன் டெல்லியில் நடத்திய சந்திப்புகள் பற்றிய ரகசிய விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. மைத்ரேயன் நடத்திய பல சந்திப்புகள் மத்திய அரசில் தமக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்கான லாபியாகவே இருந்ததாம். இதனைத் தொடர்ந்தே மைத்ரேயனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறதாம் அதிமுக மேலிடம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: