புதன், 20 ஆகஸ்ட், 2014

கனிமொழி, ராசாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது !

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம்  தொடர்புடைய அன்னிய செலாவணி மோசடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை அடுத்து முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 2ஜி ஸ்பெக்டர்ம் ஒதுக்கீட்டின் மூலம் ரூ.200 கோடியை கலைஞர் டிவி பெற்றது தொடர்பாக அதன் பங்குதாரராக இருந்த திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது குறித்த வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரும், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் சாட்சியாக சேர்க்கப்பட்டு அவரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தயாளு அம்மாள், கனிமொழி, ராசாவுக்கு ஜாமீன் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவி ரூ. 200 கோடி பெற்றது தொடர்பாக தயாளு அம்மாள், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்த குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஜாமீன் கோரி தயாளு அம்மாள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இன்று காலை உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரிய கனிமொழி மற்றும் ஆ.ராசாவின் மனுக்கள் மீது இன்று மதியம் விசாரணை நடந்தது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ராசா, கனிமொழி மற்றும் 15 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கிடைத்துள்ளதால் கைதாகும் அபாயத்தில் இருந்து ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் தப்பியுள்ளனர். 2ஜி  வழக்கில் கைதான ஆ.ராசாவும் கனிமொழியைப் போன்று ஜாமீனில் தான் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: