செவ்வாய், 12 அக்டோபர், 2010

சர்வாதிகாரிகளிடம் மன்னிப்புக் கோர மாட்டேன் சரத்


வாழ்நாள் முழுதும் சிறைவாசம் அனுபவித்தாலும் சர்வாதிகாரிகளுக்கு மத்தியில் தலைகுனிய மாட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலம் முழுவதும் சிறையில் இருப்பேனே தவிர யாரிடமும் மன்னிப்புக் கோர மாட்டேன் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வௌ்ளைக் கொடி வழக்கு தொடர்பில் நீதிமன்றிற்கு சரத் பொன்சேகா இன்று அழைத்து வரப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை சுட்டுக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளரின் விடுத்த உத்திரவினை அடுத்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கட்டளைக்கமைய படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்ததாக கூறப்படும் விடயம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா இன்று காலை 10.00 மணியளவில் நீதிமன்றத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
இதன் போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா சிறைச்சாலையிலேயே தனது வாழ்க்கையை கழிக்க நேரிட்டாலும், உயிர் பிரிந்தாலும், ஒருபோதும் மன்னிப்பு கோர மாட்டேன் என கூறினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்ஸூம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இன்றைய வழக்கு விசாரணையின் போது சரத்பொன்சேக்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெட்ரிகா ஜன்ஸிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், நாளை காலை 10.30 மணியளவில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: