tamil.samayam.com -எழிலரசன்.டி : தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ச்சியாக பிரச்னை நிலவி வருகிறது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட நிலையில்,
பொறுத்து பொறுத்து பார்த்து உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது தமிழக அரசு. இவ்வழக்கில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அத்துடன், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
அதில் ஒன்று துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் மசோதா. இதன்மூலம் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து தமிழக அரசின் வசம் வந்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்தை எதிர்த்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். தனது மனுவில், பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு எதிராக இந்த சட்டப் பிரிவுகள் உள்ளதால், சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.
மேலும், துணை வேந்தர்களை நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றால், அது சட்டமன்றத்திற்கா, அமைச்சரவைக்காக அல்லது மாநில அரசின் நிர்வாகத் தலைவராக உள்ள ஆளுநருக்கா என்பது குறித்து தெளிவுபடுத்தல் இல்லை என்று சுட்டிக்காட்டினார். இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தேர்வுக் குழு அமைக்கவோ, துணை வேந்தர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு, மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு பதில் மனு
இவ்வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரான வெங்கடாசலபதி பாஜகவின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அவர் அரசியல் உள் நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மாநில அரசுக்கு துணைவேந்தர் நியமன அதிகாரம் : இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்!
அதனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதி முன்பு முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி, மனுதாக்கல் விவகாரத்தை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி வாய்மொழி உத்தரவு வழங்கி உள்ளார்.
மனுவை நிராகரிக்க அடுக்கப்பட்ட காரணங்கள்
ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததால், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அனுமதிக்கத்தக்கது அல்ல. ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் தேதி சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி வரை காத்திருந்து விடுமுறை கால அமர்வில் இந்த மனு தாக்கல் செய்ய எந்த அவசரமும் இல்லை.
இந்த வழக்கை அவசர வழக்காக தாக்கல் செய்ய எந்த காரணமும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. 9 சட்டங்களை எதிர்த்து ஒரே வழக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவில்லை. ஆகவே, விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை
இவ்வழக்கில் பல்கலைக் கழக துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கிய சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக