வெள்ளி, 10 ஜனவரி, 2025

அமெரிக்காவில் காட்டுத்தீ... 1,30,000 பேர் வெளியேற்றம்- பலர் உயிரிழப்பு

 tamil.samayam.com - மகேஷ் பாபு : : லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 5க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
Los Angeles Fire
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகள் தீக்கு இரையாகி வருகின்றன. 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போதைய சூழலில் 27 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 1,30,000க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ

காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லேண்ட்மார்க்குகள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன. பாரிஸ் ஹில்டன் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரின் வீடுகள் தீயில் எரிந்துவிட்டன. குறிப்பாக 1979ஆம் ஆண்டு முதல் தாங்கள் வசித்து வந்த வீடு தீயில் கருகிவிட்டதாக நடிகர் பில்லி கிரிஸ்டல் வேதனை தெரிவித்துள்ளார். பாரிஸ் ஹில்டன் கூறுகையில் எனது வேதனையை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.

பிரபலங்கள் அதிர்ச்சி

மலிபுவில் உள்ள கடற்கரையோர வீடு எரிந்து நாசமானதை பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார். பலரும் உருக்கமாக தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் காரென் பாஸ், இந்த தீவிபத்து மிகப்பெரிய ஒன்று. பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பேரிடர் அறிவிப்பு

தற்போது 7,500 தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் காட்டுத்தீயை மிகப்பெரிய பேரிடராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உடனடியாக தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் யுனிஃபைடு பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிப்பு

தற்போது 4,13,000 பயனாளர்கள் மின்சாரமின்றி தவித்து வருவதாக தெற்கு கலிஃபோர்னியா எடிசன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 1,35,000 பயனாளர்கள் மின்சாரமின்றி தவிப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீர் மற்றும் ஆற்றல் துறை கூறியுள்ளது. இந்த சூழலில் தீயை அணைக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: