புதன், 3 ஜூலை, 2024

தமிழ் நூல்களை புறக்கணித்து சைவ நூல்களை மட்டுமே பதிப்பித்த ஆறுமுக நாவலர் எப்படி தமிழ் தாத்தா ஆவார்?


பொ வேல்சாமி
: “தமிழ்த் தாத்தா” -  உ.வே.சாவா ? ஆறுமுகநாவலரா ?
நண்பர்களே…
அண்மைக் காலங்களில் YOUTUBE இல் பல்வேறு வகையான நபர்கள்   எவ்விதமான ஆதாரங்களுமின்றி பல தலைப்புகளில் உளறி வருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு ஆதாரமின்றி அபத்தமாகப் பேசுவதைக் கேட்கவும் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒன்றிரண்டு  செய்திகளைப் பாருங்கள்.
1. ஒருசில நபர்கள் “தமிழ்த் தாத்தா” என்று உ.வே.சாமிநாத அய்யரைக் குறிப்பிடுவதை நக்கலடிக்கின்றனர். வரலாறு தெரியாத ஒருசில பாமரர்களும் ( இந்த பாமரர்கள் வெள்ளையும் சொள்ளையும் போட்டு படித்தவர்கள் போல இருப்பார்கள் ) ரசிப்பார்கள்.  

1860 இல்   உ.வே.சாவுக்கு 6 வயது இருக்கும்போது,
 அதாவது  சைவ வெள்ளாரான ஆறுமுக நாவலருக்கு “தமிழ்த் தாத்தா” ஆகும் அற்புதமான வாய்ப்புக் கிடைத்தது.
1860 இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவருடைய தந்தையார் பொன்னுசாமி தேவரின் ஆதரவில் ஆறுமுகநாவலர் வெளியிட்ட,
 “திருக்கோவையார்” என்ற நூலில் ஒரு ஆச்சரியமான விளம்பரம் வெளியாகி உள்ளது.
அந்த விளம்பரத்தில் ஆறுமுகநாவலர் தொல்காப்பிய உரைகள்,
 சீவகசிந்தாமணி, மணிமேகலை, புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, இன்று தமிழ்ச் சமூகம் இழந்துவிட்ட அரியநூலாகிய வளையாபதி உள்பட, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல் போன்ற சங்க நூல்களை வெளியிடப்போவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தார்.

 ( அந்தக் காலக்கட்டத்தில் சங்க காலத்து நூல்களான இவைகளைப் பற்றி பெரும்பாலோருக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.வே.சாவுக்கு ஆறு வயதாகும் போது  ஆறுமுகநாவலரால் விளம்பரம் செய்யப்பட்ட அந்த நூல்களை அவர் வெளியிட்டு இருந்தால் இன்று அவர்தான் “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கப்பட்டிருப்பார்.

 “இலக்கணக் கொத்து” என்ற நூலை எழுதிய சுவாமி தேசிகர் சங்க இலக்கியங்களை தரமான தமிழ் நூல்களாகக் கருதாமல்,
 சைவ நூல்களை மட்டும் தரமான தமிழ் நூல்களாகக் கருதியதைப் போன்று,
 ஆறுமுகநாவலரும் அவரைச் சார்ந்தவர்களும் அந்தக் காலத்தில் கருத்துக்களைக் கொண்டிருந்ததால்,
 “மதம்” சாராத இந்த சங்க நூல்களை வெளியிட போவதாக அறிவித்தும் வெளியிடாமல் புறக்கணித்து விட்டனர்.

இதே போன்ற ஒரு புறக்கணிப்பு மனோபாவத்தை சைவத்தை முதன்மையாகக் கருதும் திருவாவடுதுறை  ஆதீனத்தால் உருவாக்கப்பட்ட மாணவரான உ.வே.சாமிநாத அய்யரும் புறக்கணித்திருந்து வெளியிடாமல் இருந்திருந்தால்,
 சங்க இலக்கியங்களைப் பற்றியும் அதனால் அறியப்பட்ட தமிழின் வரலாறு என்பது சமஸ்கிருதத்திற்கு ஈடானது என்றும் அதற்கும் மேலானதும் என்றும் இன்று நாம் கொண்டாட முடியுமா ?

இத்தகைய பழமையான ஒரு அரிய பாரம்பரியத்தை நமக்கு உருவாக்கிக் கொடுத்த உ.வே.சாமிநாத அய்யரை “தமிழ்த் தாத்தா” என்று நாம் ஏன் சொல்லக்கூடாது..
( உ.வே.சாமிநாத அய்யரை விமர்சிக்கவே கூடாதா என்பதல்ல இதன் பொருள்.
அவர் செய்த பணிகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து,
இவரைப் போன்ற மற்றவர்களும் தமிழுக்கான இத்தகைய பணிகளை செய்திருந்தால் அவரகளுடன் இவரை ஒப்பிட்டு நிறை குறைகளை விமர்சிக்கலாம்.

அதைவிட்டுவிட்டு அவர் சாதி என்ன? மதம் என்ன? என்று அவதூறுகள் பேசுவது விமர்சனம் ஆகாது.)

2.தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்க் கல்வி வரன்முறையாக நிறுவனரீதியாகக் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு மன்னர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்ததாகவும் பொய்மையான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

உண்மையில் மாமன்னன் இராஜராஜன் காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் வடமொழியைக் கற்பிக்கும் கல்லூரிகளும் அதற்கான ஆசிரியர்களும் அதில் பயிலும் மாணவர்களும் அதற்கான பாடத்திட்டங்களும் இதற்காக செலவிடப்பட்ட தொகையும்  என்ன என்பதைப் பற்றிய கல்வெட்டுகள்தான் நிறைய கிடைக்கின்றன.

அத்துடன் இந்த நிறுவனங்கள் எல்லா வரலாற்றுக் காலங்களிலும் எல்லாவிதமான அரசர்களாலும் போற்றி பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளதையும்,
 ( சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், இஸ்லாமியர்கள், மராட்டியர்கள் ) பல்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அதே சமயத்தில் தமிழ்க் கல்வியை எந்த அரசு நிறுவனமும் போற்றி பாதுகாத்து வந்ததாகத் தகவல்கள் இல்லை.

( இந்தச்  செய்தியைப் பற்றி கூறும்போது ஏன் சில அரசர்கள் புலவருக்குப் பரிசளிக்கவில்லையா ? என்று கேட்டுக் குழப்புவார்கள்,
 நாம் கேட்பது வேறு.  
 வடமொழியைக் கற்பித்ததுபோன்று தமிழையையும் கற்பித்த கல்வி நிறுவனங்கள் கி.பி.1800 க்கு முன்பு வரையில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பொய்யர்களான இவர்களால் ஆதாரப்பூர்வமாகக் காட்டமுடியுமா ? )
இப்பொழுது நான் எழுதியுள்ள செய்திகளுக்கான ஆதாரங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
இந்த ஆதாரங்களை கவனமாகப் பார்த்து இந்தச் செய்திகளை சீர்தூக்குங்கள்.

அதைவிட்டு எவனோ ஒருவன் வாய்புளித்ததோ மாங்கா புளித்ததோ என்று உளறுவதை ஏற்காதீர்கள்.

எத்தகைய செய்திகளை எவர் சொன்னாலும் அதற்கான முறையான சான்றுகளை அவர்களிடமிருந்து கேளுங்கள். அந்தச் சான்றுகளின் அடிப்படையில் அவர்கள் கூறும் செய்திகளை ஆராய்ந்து சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவர்களைப் 

 

May be an image of textMay be an image of ticket stub and text

May be an illustration of text

May be an image of text

 

புறக்கணியுங்கள்.May be an image of text

May be an image of text

May be an image of textMay be an illustration of ticket stub, map and text May be an image of textMay be an image of ticket stub and textMay be an image of ticket stub and text

1 கருத்து:

வலிதாங்கி சொன்னது…

ஆதாரங்களுடன் நீங்கள் ஆராய்ந்து சொன்ன உண்மைகள் பலரும் அறியத்தக்கவை.

சோழர்கள் உட்படத் தமிழகத்தை ஆண்ட அரச குலத்தவர்க்கு[பாண்டியர் விதிவிலக்கு] வீரம் இருந்த அளவுக்குத் தமிழ் மீது பற்று இருந்ததில்லை என்பது கசப்பான உண்மை.