புதன், 26 ஏப்ரல், 2023

சிங்கப்பூர்: கஞ்சா வழக்கில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா - கடைசி நேரத்தில் என்ன நடந்தது? -

BBC News தமிழ் :  சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது.
தங்கராஜூ சுப்பையா(46) என்கிற அந்த நபருக்கு சாங்கி சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
பலவீனமாக சாட்சிகள், விசாரணையின் போது மிகக் குறைந்த சட்ட உதவி ஆகியவற்றைக் கொண்டே அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதாக மரண தண்டனைக்கு எதிரான ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


சிறைச்சாலையில் திரண்ட தங்கராஜூ சுப்பையா உறவினர்கள்
ஆனால், எல்லாம் உரிய முறைப்படி நடந்ததாகக் கூறும் சிங்கப்பூர் அரசு அதிகாரிகள், நீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் ஆர்வலர்களை விமர்சிக்கின்றனர்.

தூக்குத்தண்டனை நிறைவேற்றத்தை முன்னிட்டு, சாங்கி நகரின் கிழக்கில் உள்ள சிறைச்சாலையில் தங்கராஜ் சுப்பையாவின் உறவினர்கள் திரண்டிருந்தனர்.

தங்கராஜுவின் வாழ்க்கை, தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

"என் அண்ணனுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கலாம். அது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதனால் தொடர்ந்து போராடுவேன், என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.

"கடைசி வரை அவரை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று குடும்பத்தினர் கூறினர். இது அவர்களுக்கு ஒரு வேதனையான அனுபவம்," என்று பிபிசியிடம் மரண தண்டனைக்கு எதிரான செயல்பாட்டாளர் கிர்ஸ்டன் ஹான் தெரிவித்தார்.

"இந்த வழக்கிலும், தங்கராஜ் சுப்பையாவுக்கு எதிரான ஆதாரங்களிலும் அவர்களுக்கு இன்னும் பல விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன" என்றும் அவர் கூறினார்.


தங்கராஜூ மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை டெலிவரி செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

டெலிவரி செய்யும் போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். மேலும் தங்கராஜுவுக்காக டெலிவரி செய்த நபர் பயன்படுத்திய இரண்டு செல்பேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தாம் இல்லை என்று தங்கராஜு வாதிட்டார். தமது ஒரு செல்பேசி தொலைந்து போய் விட்டதாகவும் போலீஸார் கண்டுபிடித்த மற்றொரு செல்பேசி தன்னுடையது இல்லை என்றும் தங்கராஜு மறுத்தார்.

சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது. அதை விநியோகிக்கும் நபர்களுக்கு குறைவான தண்டனைகள் விதிக்கப்படும்.

2018-ம் ஆண்டு தங்கராஜூ சுப்பையா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.

இந்த வழக்கில் தங்கராஜுவின் கடைசி மேல்முறையீட்டில், கஞ்சா டெலிவரியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தது தங்கராஜு தான் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறினார். இதனால் மென்மையான தண்டனைக்கு தங்கராஜு தகுதியற்றவர் ஆகிறார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

பட மூலாதாரம், Getty Images

மனித உரிமை ஆர்வலர்கள் கவலை

தங்கராஜுவுக்கு மொழிபெயர்ப்பாளருக்கான போதிய அணுகல் வழங்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வழக்கறிஞரைப் பெற முடியாமல் போனதால் தனது கடைசி மேல்முறையீட்டை தங்கராஜுவே வாதிட வேண்டியிருந்தது என்றும் செயல்பாட்டாளர்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

ஆனால், இந்த வழக்கு விசாரணையின்போது தான் தங்கராஜு மொழிபெயர்ப்பாளரைக் கோரினார் என்றும் அதற்கு முன்பாக அவர் அதை கோரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022 ஆம் ஆண்டு அறிவுத்திறன் குறைபாடு உடைய நாகேந்திரன் தர்மலிங்கம் வேறொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார். அந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த சர் ரிச்சர்ட் பிரான்சன், தங்கராஜுவின் வழக்கு "பல நிலைகளில் அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறுகிறார்.

"சிங்கப்பூரின் நற்பெயருக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கும் வழக்கம், ஒரு அழியாத கறையாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற தண்டனையை (மரண தண்டனை) நிறைவேற்றுவது பிரச்னையை மேலும் மோசமாக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ரிச்சர்ட்டின் குற்றச்சாட்டுகளை மறுத்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், அவரது கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் "சிங்கப்பூர் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பை அவர் அவமதிக்கிறார்" என்றும் குற்றம்சாட்டியது.

சிங்கப்பூரை பாதுகாப்பாக்கும் அரசின் பல்நோக்கு அணுகுமுறையில் மரணதண்டனை "ஒரு முக்கிய அங்கம்" என்றும் உள்துறை கூறுகிறது.

சிங்கப்பூர் மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞர் குழுவான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) செய்தித் தொடர்பாளர் கிர்ஸ்டன் ஹான், இந்த விஷயத்தில் அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

"சர்வதேச அரங்கிலும் ஐ.நா.விலும் சிங்கப்பூர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், குடிமக்களின் பெயரால் மக்களைக் கொல்லும் உரிமையைப் பாதுகாப்பது சிறப்பானது என்பதற்காக அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டியதில்லை," என்று அவர் கூறினார்.


மலேசியாவில் மரண தண்டனை இல்லை - தாய்லாந்தில் கஞ்சா விற்க அனுமதி

சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம் என்று வாதிடுகிறது அந்நாட்டு அரசு.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அறிவுசார் குறைபாடு உடையவரும் ஒருவர். ஹெராயின் கடத்தியதாகக் கூறி தூக்கில் போடப்பட்டார்.

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான விதிகளும், மரண தண்டனையும் அதன் அண்டை நாடுகளின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு முரணாக இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மரண தண்டனையே கிடையாது என்று அறிவித்துள்ள மலேசியா, குற்றங்களைத் தடுப்பதற்கான அரணாக அது இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. கஞ்சா வர்த்தகத்தை அங்கீகரித்த உலகின் பல நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. அங்கே, கஞ்சா வர்த்தகம் ஊக்குவிக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை: