Sriram Govind : சோலார் பேனல் மின்சாரத்தில் சிக்கல் என்னவெனில் அதை சுத்தம் செய்ய தண்ணீர் தேவைப்படுவதுதான்.
பாலைவனம், வெட்டவெளியில் பேனல்களை நிறுவுகையில் அதன் மேல் தூசி படியும், தூசி படிந்தால் மின்சாரம் உற்பத்தி ஆகும் அளவு குறையும்.
அதனால் பேனல்கள் மேல் நீரை விட்டு அடித்து சுத்தம் செய்யவேண்டும். இதற்கு தண்ணீர் வீணாகும். அத்துடன் ஏக்கர்கணக்கில் பேனல்களை நிறுவுகையில் இடமும் வீணாகும்.
இதனால் இப்போது அக்ரிவோல்டைக்ஸ் (agrivoltaics) எனும் உத்தியை பயன்படுத்துகிறார்கள்.
சீனாவில் 1 ஜிகாவாட்ஸ் அளவுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்ய கோபி பாலைவனத்தில் ஒரு மிகப்பெரிய சோலார் பார்க் அமைக்கபட்டது.
ஒரு கிகாவாட்ஸ் மின்சாரத்தில் 1 கோடி மின்விளக்குகளை எரியவிடலாம் எனும் அளவு பெரிய புராஜக்ட்.
சோலார் பார்க் அமைக்கவிருக்கும் இடத்தில் முதலில் அருகே இருக்கும் மஞ்சள் நதியில் இருந்து நீரை குழாய்களில் கொண்டுவந்தார்கள்.
அதை வைத்து சொட்டுநீர் பாசன முறையில் அல்பால்பா பயிரிடபட்டது.
அல்பால்பா மாடுகளுக்கான உணவு.
அதன்பின் பாலைவன மணலில் சத்துக்கள் சேர்ந்து விவசாயம் செய்ய தகுதியானதும், அதில் 107 ஏக்கரில் சோலார் பேனல்களை நிறுவினார்கள்.
ஆனால் அவற்றை 3 மிட்டர் உயர தூண்கள் மேல் நிறுவி, சோலார் பேனல்களின் அடியில் கோஜி பெர்ரி எனும் பெர்ரி செடிகளை நட்டார்கள். கோஜி பெர்ரி நிழலில் வளர்க்கூடியது. சோலார் பேனல்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் தண்ணீர் பெர்ரிகளை பயிரிடவும் போதுமானது
சோலார் பேனல்களுக்கு அடியில் இந்த செடிகள் வளர்வதால் அவற்றுக்கு மிககுறைந்த நீரே தேவைப்படுகிறது. ஏனெனில் அவற்றுக்கு ஊற்றபடும் தண்ணீர் ஆவியாவதில்லை. நிழலில் இருப்பதால் வெயிலில் செடிகள் கருகுவதும் இல்லை.
சோலார் பேனல்களுக்கு அடியே இப்படி செய்யும் விவசாயம் சீனா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளில் பிரபலம் அடைந்து வருகிறது., விவசாய நிலங்களில் சும்மா விவசாயம் செய்வதை விட சோலார் பேனல்களுக்கு அடியே விவசாயம் செய்வது நல்ல லாபகரமானது. தண்ணீரின் தேவை வெகுவாக குறைகிறது. ஆனால் எல்லா பயிர்களையும் இப்படி பயிரிட முடியாது. தக்காளி, கீரைகள். லெட்டூஸ், பெர்ரிகள், பீட்ரூட்கள், காரட்கள் ஆகியவற்றை இப்படி பயிரிடுகின்றனர்
பேனல்களுக்கு அடியே செடிகளை வளர்த்து அதனடியில் கோழிகளை விடுபவர்களும் உண்டு. கோழிகளுக்கு சோலார் பேனல் அடியே நல்ல ஓய்வு கிடைக்கும். அங்கே இருக்கும் பூச்சிகளை அவை உண்ணும். அவற்றின் கழிவும் உரமாகும்.
இம்முறையில் செய்யபடும் விவசாயத்தால் தோட்டத்துக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதுடன், விளைச்சலும் பெருகுகிறது. மின்சாரத்தை விற்று காசு பார்க்கவும் செய்கிறார்கள்.
வட இந்தியாவில் ஜோத்பூர், பூஜ், சீதாபூர் மாதிரியான வரண்ட பகுதிகளில் இதை செயல்படுத்தியதும் 41% வரை விளைச்சல் பெருகியது.
இந்த வகையான விவசாயத்துக்கு agrivoltaics என பெயர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக