ஞாயிறு, 12 டிசம்பர், 2021

மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி ராஜேந்தர் வழக்கு ..

போகாத ஊருக்கு வழி கேட்கும் டி.ஆர் குடும்பம்!

மின்னம்பலம் : மாநாடு சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர்.
 யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.


இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், நவம்பர் 24ஆம் தேதி மாலை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால் சிலம்பரசன் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது படத்தின் சாட்டிலைட் உரிமை, அதற்கான விலை திட்டமிட்ட அடிப்படை விலையைவிட குறைவாகக் கேட்கப்படுவதால் பைனான்சியருக்கு கடனை திருப்பிக்கொடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டது.
அதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டதாக சுரேஷ் காமாட்சி தரப்பில் கூறப்பட்டது. திட்டமிட்டபடி படம் வெளியாக வேண்டும் என்பதில் சிலம்பரசன் உறுதி காட்டியதால் உஷா ராஜேந்தர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி உதவியை நாடினார். அவரது முயற்சியில் பைனான்சியர் உக்கம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வெளீயிட்டுக்குத் தேவை 6 கோடி ரூபாய். தொலைக்காட்சி உரிமை 5 கோடி ரூபாய்க்கு கலைஞர் தொலைக்காட்சி வாங்கிகொள்ள தயாராக இருந்ததுடன் அதற்கான காசோலையும் வழங்கிய நிலையில், கூடுதலாகத் தேவைப்படும் ஒரு கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் தேவைப்பட்டது. அதற்கான உத்திரவாதத்தை உஷா, ராஜேந்தர் இருவரும் பைனான்சியர் உக்கம் சந்துக்கு வழங்கினார்கள். அதன்பின் படம் அறிவிக்கப்பட்ட அடிப்படையில் வெளியானது. தொலைக்காட்சி உரிமையை எட்டு கோடி ரூபாய்க்கு விஜய் தொலைக்காட்சி வாங்கியது. இதனால் உக்கம்சந்த்துக்கு உத்தரவாதம் கொடுத்த உஷா, ராஜேந்தர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். மாநாடு படம் அதன் எதிர்பார்ப்புக்கு மீறிய வணிகரீதியான வசூலை ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்பந்தமாக டி.ராஜேந்தர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக்கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் பேரில் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலக வியாபார வட்டாரத்தில் விசாரித்தபோது பிரச்சினைகளை முடித்து படத்தை வெளியிட கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன், உஷா ராஜேந்தர் ஆகியோர் பணம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அனைத்து பிரச்சினைகளையும் சுரேஷ் காமாட்சி எதிர்கொண்டார். டி.ராஜேந்தர் குடும்பம் கொடுத்த உத்தரவாதத்தை ரத்து செய்து கொடுத்த பின்னர் அந்த உரிமைக்குச் சொந்தம் கொண்டாடுவது தவறானது என்கின்றனர் திரைத் துறையினர்.

-இராமானுஜ

கருத்துகள் இல்லை: