சனி, 27 நவம்பர், 2021

உதயநிதி பிறந்தநாள்: காத்திருந்து வாழ்த்திய அமைச்சர்கள்!

உதயநிதி பிறந்தநாள்: காத்திருந்து வாழ்த்திய  அமைச்சர்கள்!

மின்னம்பலம் : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் காத்திருந்து உதயநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகளை வழங்கினர்.
தமிழக முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞர் அணி செயலாளரும், திரைப்பட நடிகருமான உதயநிதியின் 44ஆவது பிறந்த நாள் இன்று(நவம்பர் 27) திமுகவினரால் கொண்டாடப்படுகிறது.
தொடர் மழையால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை தவிர்த்து, ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்கும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுமாறு உதயநிதி நேற்று முன் தினம் கேட்டுக்கொண்டார்.


எனினும் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் நேற்று மாலை 6.00 மணியிலிருந்தே சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அப்போது, உதயநிதி வீட்டில் இல்லை.

அவரது குடும்பத்தினர் உதயநிதியை தொடர்புகொண்டு, "கூட்டம் அதிகமாகி வருகிறது. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறார்கள். அதனால் அவர்களை சந்தித்துவிட்டு போய்விடுங்கள்" என்று தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, இரவு சுமார் 7.30 மணியளவில் புதிய இனோவா கிரிஸ்டா டாப் மாடல் காரில் வீட்டுக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின். அறையில் காத்திருந்த அமைச்சர்களிடம் ஆசியும் வாழ்த்துகளும் பெற்றுக்கொண்டார்.

அவர்களிடம், "தப்பா நினைக்காதீங்க, மழை வெள்ளத்துல மக்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. இந்த நேரத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது நல்லா இருக்காது என்றுதான் ஒதுங்கியிருந்தேன். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மக்களுக்கு நிவாரணம், சேலை வேட்டி போர்வைகள் உணவு வழங்கப்போவதாக கேள்விப்பட்டேன். நன்றி" என மகிழ்ச்சியோடு பேசி வெளியே வந்தார் உதயநிதி.

பின்னர் வெளியில் கூடியிருந்தவர்களை பார்த்து, ‘அனைவருக்கும் நன்றி. எல்லோரும் ஊருக்கு போங்கள், அங்கே மக்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்.

உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 234 தொகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், ஆடைகள் வழங்குவது, கோயிலில் உதயநிதி பெயரில் அர்ச்சனை, பூஜை செய்வதுமாக இருந்து வருகிறார்கள் திமுகவினர். உதாரணமாகத் தர்மபுரியில் உள்ள காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்கிறார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். அதேபோல் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை சிட்டியில் உள்ள முக்கியமான கோயில்களில் அபிஷேகம் செய்து பிரசாதம் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார் என்கிறார்கள் வடபழனி கோயில் ஊழியர்கள்.

முதல்வர் ஸ்டாலின், கட் அவுட், ஆடம்பர விழா இருக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மட்டுமல்ல உயர் அதிகாரிகளும் உதயநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தும் நேரடியாகச் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் வருகின்றனர் என உதயநிதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: