திங்கள், 18 ஜனவரி, 2021

ரஜினியுடன் அடிக்கடி பேசும் ஸ்டாலின்

ரஜினியுடன் அடிக்கடி பேசும் ஸ்டாலின்
minnambalam.com : ரஜினி மக்கள் மன்றத்தின் நான்கு மாவட்டச் செயலாளர்கள் நேற்று (ஜனவரி 17) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.          அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “நாங்கள் திமுகவில் சேரப் போவது பற்றி தலைமையிடம் எடுத்துச் சொன்னோம். அவர்களும் உங்களுக்கு விருப்பமான இயக்கத்தில் இணைந்து பணியாற்ற எந்தத் தடையும் இல்லை என கூறிவிட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று மின்னம்பலத்தில் மக்கள் மன்றத்தினர் விருப்பப்பட்ட கட்சியில் சேர ரஜினி அனுமதி  என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “பல வருடங்களாக ரஜினி மக்கள் மன்றத்துக்காக செலவு செய்து ரஜினியின் கட்சி மூலம் பதவியை அடையலாம் என பல மாவட்ட செயலாளர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு அரசியலுக்கு வர மாட்டேன் என்ற ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்ததால்... வேறு கட்சிகளில் சேர முடிவெடுத்தனர். இதிலும் சிலர் தலைமைக்கு தொடர்புகொண்டு நாங்கள் வேறு கட்சியில் சேரப் போகிறோம் என்று சொல்ல... உங்கள் விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ரஜினியிடம் ஒப்புதல் பெற்று தலைமை வழியாக பதில் வந்துள்ளது”என்று தெரிவித்திருந்தோம்.

அதன்படியே இன்று ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிவிப்பில், “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாசெக்கள் தொடர்பாக ரஜினியிடம் ஸ்டாலின் முன்கூட்டியே பேசியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

“ரஜினி அரசியலில் ஈடுபடவில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில்... ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து சில மாசெக்கள் திமுகவில் சேர விரும்புகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே, ரஜினியைத் தொடர்புகொண்ட ஸ்டாலின், ‘உங்கள் மன்றத்தில் இருந்து சில மாவட்டச் செயலாளர்கள் எங்கள் கட்சியில் சேர விரும்புகிறார்கள். சேர்த்துக் கொள்ளலாமா...உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை உள்ளதா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி, ‘தாராளமா சேர்த்துக்கங்க’ என்று சொல்லியிருக்கிறார். இருவரும் பரஸ்பரம் உடல் நலம் விசாரித்தபடியே இந்த உரையாடல் சென்றிருக்கிறது.

ஏற்கனவே கிருஷ்ணகிரியில் ரஜினி மன்ற நிர்வாகி திமுகவில் எம்பி சீட் கேட்டபோது அதுபற்றி ரஜினியே ஸ்டாலினிடம், ‘கொடுக்க வேண்டாம்’என்று கூறியதால் அதன்படியே சீட் கொடுக்கவில்லை ஸ்டாலின். அப்போது இருவருக்கும் இருந்த அதே நட்பும் நெருக்கமும் இப்போதும் இருக்கிறது. சொல்லப்போனால் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிவித்த பிறகு ஸ்டாலினும் ரஜினியும் இன்னும் அதிகமாகவே பேசிக் கொள்கிறார்கள்”என்கிறார்கள் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: