ஞாயிறு, 17 ஜனவரி, 2021

புதுச்சேரியில் வருங்கால முதல்வர் ஜெகத்ரட்சகன்தான் என்ற செய்திகள் காட்டுத் தீயாக பரவியுள்ளது.

minnambalam :புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறது திமுக தலைமை. அதற்கான பிரம்மாண்டமான செயல் வீரகள் கூட்டம் நாளை (ஜனவரி 18) புதுச்சேரியில் கூடுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்து முதல்வரானார் நாராயணசாமி. அவர் மீது சொந்தக் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் முதல்வர் நாராயணசாமி மீது கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.     இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த புதுச்சேரி திமுக நிர்வாகிகள், “காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்களால் பிளவுபட்டு கிடக்கிறது. காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால், அது திமுகவையும் கடுமையாக பாதிக்கும்”என்று கூறியுள்ளனர். இதையடுத்துதான் திமுக புதுச்சேரியில் தனித்தே போட்டியிடுவது என்றும்,வன்னியர் சமுதாயப் பிரமுகரான அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகனை புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்தார் ஸ்டாலின்.

ஜெகத்ரட்சகனை அழைத்த ஸ்டாலின், “ நீங்கள்தான் புதுச்சேரி திமுகவின் முதல்வர் வேட்பாளர் புதுச்சேரி சென்று தேர்தல் வேலைகளைப் பாருங்கள் என்றுஅனுப்பி வைத்துள்ளார். அதன்படியே நாங்கள் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம்” என்று நம்மிடம் கூறினார் புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.வான சிவா.

நாளை ஜனவரி 18ஆம் தேதி, காலை 10.00 மணிக்குமேல், ஜெகத்ரட்சகன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாகக் கடலூர் சாலை வழியாக மரப்பாலம் அருக்கில் உள்ள சுகன்யா திருமண மண்டபத்துக்கு வருகிறார்கள் திமுக செயல் வீரர்கள். ஊர்வலத்தில் 5 ஆயிரம் மோட்டார் பைக்குகள், பத்தாயிரம் பேர் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்துவருகிறார்கள் மாநில பொறுப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமாரும், எம்.எல்.ஏ.சிவாவும்.

ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன்களுக்கு டீசல், பெட்ரோல் நிரப்பிக்கொள்ள டோக்கன்களும் வழங்கிவரும் திமுக பிரமுகர்கள், கூட்டத்தில் கலந்துகொள்ளும் செயல் வீரர்களுக்கு கோழி பிரியாணிக்கும் தயார் செய்துவருவதாகச் சொல்கிறார் மாணவர் அணி மணிமாறன்.

புதுச்சேரி முழுவதும் நகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் வருங்கால முதல்வர் ஜெகத்ரட்சகன்தான் என்ற செய்திகள் காட்டுத் தீயாக பரவியுள்ளது.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: