minnambalam : திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒவ்வொரு தேர்தலின் போதும் சலசலப்புக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகும். இந்த வகையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியைக் குவித்த திமுக காங்கிரஸ் கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று (ஜனவரி 18) புதுச்சேரி மாநிலத்தில் அம்மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெறுகிறது. புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிடுவது, அதையடுத்து முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை அறிவிப்பது என்ற திட்டப்படி தான் இந்த கூட்டத்தை நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி திமுகவில் நடக்கும் இந்த மாற்றங்கள் அம்மாநில காங்கிரஸார் மூலம் ராகுல் காந்திக்கு நேரடியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வரும் 23ஆம் தேதி தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். 3 நாட்கள் பயணமாக தமிழகம் வரும் ராகுல் காந்தி அதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தமிழகம், புதுவை அரசியல் தொடர்பாக பேசியுள்ளார்.
அப்போது அவர் திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி கடுமையான புகார்களை சோனியாவிடம் முன் வைத்திருப்பதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
“திமுகவோடு நாம் கூட்டணியில் தொடர்வதாக ஒரு பக்கம் ஸ்டாலின் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டது. இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கூட்டணிக் கட்சித் தலைவரான ஸ்டாலின் இதுகுறித்தோ, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்பியை புதுச்சேரி அரசியலில் முதன்மைப்படுத்துவது குறித்தோ புதுச்சேரி காங்கிரஸிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இத்தனைக்கும் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் நமது முதல்வர் நாராயணசாமி பள்ளிகளின் காலை சிற்றுண்டித் திட்டத்துக்கு திமுக தலைவர் கலைஞர் பெயரையே வைத்தார். இப்படி திமுகவோடு நாம் தோழமையாக இருந்தாலும் திமுக கூட்டணிக் கட்சி என்ற முறையில் இதுவரை சட்டமன்றத் தேர்தல் பற்றி புதுச்சேரி காங்கிரஸிடம் ஆலோசிக்கவில்லை. மத்திய அரசின் துணை நிலை ஆளுநரான கிரண்பேடியை எதிர்த்து காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கும் திமுக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதன் மூலம் பாஜகவின் நெருக்கடிக்கு திமுக பணிந்துவிட்டதோ என்றும் கருத வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் அதிக இடங்கள் கொடுத்தாலும் காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களில் வெற்றிபெற்றதாக திமுக குறை சொல்லுகிறது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக 9 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. இந்த நிலையில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸை புறக்கணித்து திமுக தனித்துப் போட்டியிடுவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது.
இதை நாம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று நான் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலேயே தேர்தல் பிரச்சாரத்தில் கூறினேன். ஆனால் அவர்கள் நம்மோடு ஒத்துழைக்கத் தயாராக இல்லை. எனவே ஸ்டாலினின் அணுகுமுறை குறித்து நாம் முடிவெடுக்க வேண்டும். இதற்கு உங்கள் ஆலோசனை தேவை” என்று சோனியாவிடம் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.
சோனியாவும் விரைவில் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று பதில் அளித்திருக்கிறார். இந்த நிலையில்தான் இன்று (ஜனவரி 18) புதுச்சேரி திமுக கூட்டத்தில் எடுக்கும் முடிவைப் பொறுத்து காங்கிரஸும் தனது ரியாக்ஷனை விரைவில் வெளிப்படுத்தும் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக