வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஐயோ வேண்டாம் தடுப்பூசி’’ – அலறும் மருத்துவர்களும்,அரசியல்வாதிகளும்! சாவித்திரி கண்ணன்

  aramonline.inசாவித்திரி கண்ணன் :இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அதிசயமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களிடமும்,அரசியல்வாதிகளிடமும்,முக்கியஸ்தர்களிடமும் ஒரு பெரும் தயக்கம் நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது! இது,”தங்களை சோதனை எலிகளாக்கிக் கொள்ள அரசியல்வாதிகளும், வி.வி.ஐபிக்களும்,மருத்துவர்களும் தயாராக இல்லை’ என்பதையே காட்டுகிறது!  உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோய்க்கு எதிராக ஒரு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு,அதனால் நன்மை ஏற்படுமென்றால், அதை ஏற்பதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை! ஆனால், நூற்றுக்கணக்கான நாடுகளும், தனியார் அமைப்புகளும் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிலையில் – மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு போவதற்கு முன்பாகவே – அவசர அவசரமாக நம் நாட்டில் தடுப்பூசி திட்டம் முதல் கட்டமாக மூன்று கோடிப் பேருக்கு போடப்படுகிறது என்பது இந்தியாவின் முன்னணி மருத்துவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது! ஏனெனில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தால் தான் ஒரு தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திற்னை அறிய முடியும் என்பது மருத்துவ உலகமே கடைபிடித்து வந்த நடைமுறையாகும்! இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகையில் ஒரு மூன்று கோடி பெரிய விஷயமில்லை என பாஜக அரசு நினைத்ததா தெரியவில்லை!

முதல் கட்டத்தில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,முன்களப் பணியாளர்களான துப்புறவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு போடப்படும் என்று சொல்லப்பட்டாலும்,பெரும்பாலான மருத்துவர்கள் முன்வரவில்லை! அடி நிலை துப்புறவு பணியாளர்களும், செவிலியர்களும் தான் நிர்பந்திக்கப்பட்டனர்! இந்திய மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகளை செலுத்த இந்திய அரசு கட்டளையிட்டுள்ளது!

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும், ‘ஆஸ்ட்ராஜெனகா’ நிறுவனம் இணைந்து, ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன.நம் நாட்டில், இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிரா மாநில புனேயைச் சேர்ந்த, ‘சீரம்’ இந்தியா நிறுவனம் ஏற்றுள்ளது.

ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், ‘கோவாக்சின்’ எனப்படும் தடுப்பூசியை, உருவாக்கி உள்ளது.

இரண்டு தடுப்பூசிகளிலும் லேசான பக்க விளைவுகள் இருப்பது குறித்து நமது சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.கோவிஷீல்டை பொறுத்தவரை, ஊசி போட்ட இடத்தில் வலி, தலைவலி, சோர்வு, தசைநார் வலி, உடல்நலக்குறைவு, காய்ச்சல், குளிர், மூட்டுவலி, மற்றும் குமட்டல் போன்ற சில லேசான விளைவுகள் ஏற்படலாம்.கோவாக்ஸின் விஷயத்தில் சில லேசான பாதகமான விளைவுகள் ஏற்படலாம். ஊசி போட்ட இடத்தில் வலி, தலைவலி, சோர்வு, காய்ச்சல், உடல் வலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல்-மயக்கம், நடுக்கம், வியர்வை, குளிர், இருமல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஆகியவை இதில் அடங்கும்.  என சுகாராத அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 16, 600 பேருக்குத் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு பெயர் பதிவும் நடந்தது.ஆனால், இதில் 3, 126 மருத்துவ பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசிக்கு முன்வந்த மருத்துவர்கள் சிலர் உண்மையிலேயே தடுப்பூசியைத் தான் போட்டுக் கொண்டார்களா? அல்லது வெறும் தண்ணீரை செலுத்திக் கொண்டார்களா? தெரியவில்லை’’ என சுகாதாரப் பணியாளர்கள் கமெண்ட் அடித்ததையும் கேட்க முடிந்தது…!

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் தடுப்பூசியை தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் முதன்முதல் கொரானா தடுப்பூசி போடப்பட்டது. அதை போட்டுக் கொண்டது மணீஸ் என்ற ஒரு எளிய துப்புறவு தொழிலாளி தான்! வாய் கிழிய தொலைகாட்சியில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என பிரச்சாரம் செய்யும் பிரதமரோ, மாநில முதல்வர்களோ இது வரை தடுப்பூசியைப் போட முன்வரவில்லை என்பது கவனத்திற்குரியதாகும்!

”தடுப்பூசி என்பது எண்ணிக்கை இலக்கு சார்ந்த திட்டம் கிடையாது. பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளோம். இன்றும் 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மருத்துவ கல்வி நிறுவனங்களில் தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது…’’ என்று சமாளித்தார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

இதில் தற்போது வரை கிடைத்த தகவல்களின்படி நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 52 பேர், மகாராஷ்டிராவில் 22 பேர் (மகாராஷ்டிராவில் தற்காலிகமாக தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது)தெலுங்கானாவில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல பகுதிகளில் விபரம் தெரிய வரவில்லை!

முன்னதாக, டிசம்பர் 12, 2020 அன்று மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற கோவாக்சின் தடுப்பூசி ஒத்திகையில் தீபக் மராவி என்ற பழங்குடியின தினக்கூலி தொழிலாளி பங்கேற்றார். அவருக்கு முதலில் தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் வாயில் நுரை தள்ளி அவர் இறந்துவிட்டார்! டிசம்பர் 21 ம் தேதி மராவி இறந்த பிறகு, தடுப்பூசி ஒத்திகை நடத்திய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் மற்றும் பாரத் பயோடெக் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை!

உலகின் பல பகுதிகளில் தடுப்பூசி தொடர்பாக ஏற்ப்பட்டுள்ள சில ஆபத்தான நிகழ்வுகளை சற்றே கவனப்படுத்துகிறேன்!

# நார்வே நாட்டில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர்!

# கிரிகோரி மைக்கேல் அமெரிக்கா தென் புளோரிடாவின் மருத்துவர்.  தீவிர தடுப்பூசி ஆதரவாளர். கொரானா தடுப்பூசியை போட்டு கொண்ட சில நாளில் அவரின் இரத்த தட்டு அணுக்களுக்கு எதிராகவே நோய் எதிர்ப்பு உருவாகியது. 3 லட்சம் இருக்க வேண்டிய இரத்த தட்டுகள் 0 ஆனது. அமெரிக்காவின் தலைச்சிறந்த மருத்துவ குழுக்கள் முயன்றும் அவரை காக்க முடியவில்லை.

# அமெரிக்க நிறுவனமான பைசர் – பயோ என் டெக் தயாரித்த தடுப்பூசி பாதுகாப்பானது எனக் கூறி உலக சுகாதார மையமே அவசர கால ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பைசர் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், போர்ச்சுகலில் அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்ட சோனியா ஆக்வெடோ என்ற செவிலியர் உயிரிழந்துள்ளார்.

# ஜனவரி 4ம் தேதி முதல் சுவிசர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில் உயிரிழந்தார். தடுப்பூசி போட்ட பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார்!

துணிச்சல்மிக்க ரஷ்ய விஞ்ஞானியான அலெக்சாண்டர் செர்பானோவ், தன்னையே பரிசோதனைக்கு உட்படுதி செய்து கொண்ட ஆய்வின் முடிவாக கொரானாவிற்கான தடுப்பூசிகள் பலனளிக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம் எனக் கூறியுள்ளார்! உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்காத ஆஸ்டிரா ஜென்காவை இந்திய அரசு அவசரகதியில் மக்களுக்கு போட்டு வருவது தொடர்பாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தன் டிவிட்டர் பதிவில் ‘’இந்திய மக்கள் என்ன பரிசோதனை எலிகளா?’’ என கேட்டுள்ளார்!

பாஜக அரசு தடுப்பூசியை செயல்படுத்தும் வேகத்தை பார்க்கும் போது, ஏதோ சில ஆதாயங்களுக்காக அவசர முடிவெடுக்கப்பட்டுள்ளதோ..என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை!

ஆனால், விருப்பமில்லாதவர்களை தடுப்பூசிக்கு நிர்பந்திக்க சட்டம் இடம் தரவில்லை! ஆகவே தடுப்பூசி தங்களுக்கு வேண்டாம் என முடிவெடுத்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: