Vikatan -. ( உ.பாண்டி ) ": இலங்கைக் கடற்படையிர் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் மெசியாஸ் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியதுடன், அவரது குடும்பத்திற்கு நிதியுதவியை கனிமொழி வழங்கினார். `ஆட்சி மாற்றத்துக்குப் பின் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என கனிமொழி எம்.பி தெரிவித்தார். இலங்கைக் கடற்படையினரால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், நிதியுதவியும் வழங்கினார்.
தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த 2 நாள்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் சாயல்குடி தொடங்கி சத்திரக்குடி வரை பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று காலை தனுஷ்கோடியில் தனது பிரசாரத்தைத் தொடங்கினர். அங்கு நாட்டுப் படகு மீனவர்களைச் சந்தித்து அவர்களதுகுறைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்துக்குச் சென்று கலாமின் சகோதரர் முத்து முகமது மீரான் மரைக்காயரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்களைச் சந்தித்து, அவர்களது குறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த மீனவர்களில் ஒருவரான மெசியாஸ் என்பவரது வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியதுடன், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார். இதேபோல் தாக்குதலில் பலியான மீனவரான மண்டபம் அகதி முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வினின் மனைவி விஜயலட்சுமியை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது விஜயலட்சுமி, `பிறந்த குழந்தையைக் கூட முழுசா தூக்கிக் கொஞ்சக்கூட முடியாம எங்கள அநாதைகளாக்கிட்டு போயிட்டாரே’ என, தனது கணவரை நினைத்து கைக் குழந்தையுடன் கண்ணீர் விட்டு கதறினார். அவரை ஆறுதல்படுத்தி நிதியுதவியை வழங்கினார் கனிமொழி.
முன்னதாக தங்கச்சிமடத்தில் மீனவர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்த கனிமொழி, அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மீனவர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ``இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி வரும் மீனவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல், தாக்குதல் நடத்தி மீனவர்களின் உயிரைப் பறித்துள்ளனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், நம் மீனவர்கள் பலியாகும் சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டபோது மாநில ஆட்சியில் இருந்த தி.மு.க-விடம் கருத்து கேட்கப்படவில்லை. கருத்து சொல்லும் நிலையிலும் நாங்கள் இல்லை. ஆனாலும், இதனை எதிர்த்து தி.மு.க குரல் கொடுத்தது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் இலங்கைக் கடற்படையினர் நம் மீனவர்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தி.மு.க செயலாளர் முத்துராமலிங்கம், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக