செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

மாறன் தேவைப்படும் நேரம் இது: வைகோ பேச்சு

தினகரன் : சென்னை: மத்தியில் புதிய கல்விக் கொள்கையை திணிக்கின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கின்றனர். இந்த நேரத்தில் முரசொலி மாறன் தேவைப்படுகிறார். அவரின் மாநில சுயாட்சி தேவைப்படுகிறது என வைகோ புகழாரம் சூட்டினார். மதிமுக பொது செயலாளர் வைகோ எம்பி, காணொலி மூலம் பேசியதாவது: முரசொலி மாறனை பொறுத்தவரை எந்த காலத்திலும் கடிந்து கொண்டதில்லை. கொஞ்சம் கூட முகதாட்சண்யம் இல்லாமல் அவர் பேசி விடுவார் என்று மற்றவர்கள் கூறுவார்கள். ஒரு நாளும் என்னை கடிந்து கொண்டதில்லை. எல்லா நாட்களிலும் அவரிடம் ஆலோசனை பெற்று தான் நாடாளுமன்றத்துக்கு பேச செல்வேன். ஒவ்வொரு கட்டத்திலும் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும் போது எனக்கு அவ்வளவு ஊக்கமும், ஆக்கமும் தந்தார்.
எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தார். அவரை பொறுத்தமட்டில் ஒரு பன்முக ஆற்றல் வாய்ந்தவராக, கலைஞரின் எண்ணங்களை பிரதிபலிப்பவராக இருந்தவர். முரசொலி மாறனின் பிறந்தநாள் விழாவிலே, அவருக்காக பேசும் வாய்ப்பை தந்த, அருமையான சந்தர்ப்பத்தை தந்த முரசொலி மாறன் குடும்பத்திற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முரசொலி மாறன் புகழ் திராவிட இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கும். காரணம் இந்த காலக்கட்டத்தில் மாநிலங்களின் அதிகாரங்களுக்கு வேட்டு வைத்து, அடியோடு குழிதோண்டி புதைக்கக்கூடிய வேலையிலே மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.   
இந்த நேரத்தில் புதிய கல்விக் கொள்கையை திணிக்கின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை வந்து திணிக்கின்றனர். இந்த நேரத்தில், மாறன் தேவைப்படுகிறார். இப்போது முரசொலி மாறன் தேவைப்படுகிறார். அவரின் மாநில சுயாட்சி தேவைப்படுகிறது. அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்கின்ற அருமையான அந்த நூல் தேவைப்படுகிறது. அவரின் கருத்துக்கள் தேவைப்படுகிறது. அவரின் முழக்கங்கள் தேவைப்படுகின்றன. அதைப் படைக்கருவியாக வைத்து கொண்டு, மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் ஒரு திராவிட இயக்கத்தின் ஒரு படைக்கருவி. எதிரிகளின் கோட்டையை உடைத்து நொறுக்கும் ஒரு படைக்கருவி.

சம்மட்டி அடி போல அவருடைய கருத்துக்களை சொல்லியிருப்பார். அவரின் மாநில  சுயாட்சி கொள்கை இன்றைக்கு இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் நிலைநாட்ட வேண்டிய ஒன்று. முரசொலி மாறன் மறையவில்லை. அவரின் நூல்கள், அவர் தந்திருக்கக்கூடிய தத்துவங்கள், அவர் தந்திருக்கும் படைக்கருவிகள் என்றைக்கும் முரசொலி மாறனை நினைவிலே வைத்திருக்கும். நிலையாக வைத்திருக்கும். என்றைக்கும் அவரது புகழ் இருக்கும். திராவிட இயக்கத்தில் முரசொலி மாறனின் புகழ் மொழி என்றைக்கும் அழியாது, அணையாது. அது என்றைக்கும் ஒளி வீசிக்கொண்டே இருக்கும். மறையாது. இவ்வாறு வைகோ பேசினார்.

கருத்துகள் இல்லை: