சனி, 1 ஏப்ரல், 2017

நெடுவாசல் தீர்மானம் : போராட்டத்துக்கு ஆயத்தம்!

நெடுவாசலில் கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் கடந்த திங்கள்கிழமை கையெழுத்தானது. இதில், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஜெம் என்ற கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை மாநில அரசு கொடுத்துவிட்டால் ஜெம் லெபாரட்டரி நிறுவனம் தன் பணியை தொடங்கிவிடும்.

மூன்று தீர்மானங்கள்
இந்நிலையில், நெடுவாசலில் கிராம சபைக் கூட்டத்தில் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. ஊராட்சிப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நெடுவாசல் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை அகற்றி விளைநிலங்களாக மறுசீரமைத்தது 3 மாதங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராம சபையே இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதால் இதற்கு வலு கிடைத்துள்ளது. இது ஒரு ஆக்கபூர்வ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி கிராம சபைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. ஊராட்சி மன்றத் தலைவரைவிட அதிக அதிகாரம் மிகுந்தவை. அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் கோழிப்பண்ணைக்கு எதிரான போராட்டங்களில் கிராம சபையை பயன்படுத்தியே நீதிமன்றத்தில் வெற்றிபெற்றுள்ளனர் மனுதாரர்கள்.
வாக்குறுதி மீறப்பட்டது
நெடுவாசல் போராட்டக் குழு பிரதிநிதிகளில் ஒருவரான மாதவன் அவர்களைத் தொடர்புகொண்டு நாம் பேசினோம். அப்போது அவர், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் நெடுவாசல் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் ஆளும் மாநில அரசு வரை அனைவரும் எங்களுக்கு வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வமான உறுதியை அளித்திருந்தனர். ஆனால் இதற்கு எதிராக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு. எனவே, நாங்கள் போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இன்று காலை எழுபது கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நெடுவாசல் கிராமத்தில் ஒன்றுகூடி கிராம சபைக் கூட்டத்தை நடத்தினார்கள். இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. வடகாடு, நல்லாண்டார் கொல்லை மக்களிடம் தொடர்புகொண்டு இணைந்து போராட கோரிக்கைவைக்கவுள்ளோம். எப்போது போராட்டம் நடத்துவது என்று இன்று மாலையோ இல்லை நாளையோ முடிவு எடுக்கப்படும்’ என்று கூறினார்.  மின்னமாலமா   மின்னமாலமா

கருத்துகள் இல்லை: