புதன், 14 ஜனவரி, 2015

12 அமைச்சர்களின் 21 வெளிநாட்டு பயணங்கள் ரத்து! சிக்கனம் சிக்கனம்?

புதுடில்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், 12 மத்திய அமைச்சர்களின், 21 வெளிநாட்டு பயண திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இது, மத்திய அமைச்சர்களின் மொத்த வெளிநாட்டு பயண திட்டங்களில் நான்கில் ஒரு பங்காகும். சிக்கனம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2014 மே, 26ம் தேதி பதவியேற்றது. அது முதல், 'அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, மோடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயண திட்டங்கள் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் விவரம்: கடந்த, 2014 மே, 26 முதல் டிசம்பர் 26ம் தேதி வரை, மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக, 88 திட்ட முன்மொழிவுகள், பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், அமைச்சர்களின் தனிப்பட்ட பயணங்கள் உட்பட, 21 பயண திட்டங்கள் பிரதமர் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறைக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக முதலில் பதவி வகித்த, கோவா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.,யான, ஸ்ரீபத் யசோ நாயக், தனிப்பட்ட விஜயமாக, மாகவ் மற்றும் பாங்காக் செல்ல அனுமதி கேட்டிருந்தார். அது, நிராகரிக்கப்பட்டு உள்ளது. நிராகரிப்பு: இவர், 2014 நவம்பர், 9ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், பேத்தி தொடர்பான நிகழ்ச்சிக்காக, அமெரிக்கா செல்ல திட்டமிட்ட, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவின் பயண திட்டமும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயண திட்டங்கள் குறித்த விஷயத்தில், பிரதமர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பது, தற்போது விதியாக உள்ளது. அதனால், 88 பயண திட்டங்களுக்கு, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தும், அதில், 21 நிராகரிக்கப்பட்டு உள்ளது. முந்தைய மத்திய அரசு, மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயண விஷயத்தில், மிகவும் தாராளம் காட்டியது. ஆனால், கடந்த ஏழு மாதங்களில், மத்திய அமைச்சர்களின், 21 வெளிநாட்டு பயணங்களை பிரதமர் மோடி நிராகரித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நிதின் கட்காரியும் தப்பவில்லை: மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயண திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதில், அதிகம் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீபத் யசோ நாயக் தான். இதுமட்டுமின்றி, பிரதமருக்கு மிகவும் வேண்டியவர்கள், முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் என, நம்பப்படும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, வர்த்தக துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு இந்தியர் விவகாரத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் போன்றவர்களின் சில பயண திட்டங்களும் ரத்தாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Dinamalar.

கருத்துகள் இல்லை: