சனி, 14 ஜூலை, 2012

அமெரிக்கா: நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை

நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் கதிகலங்கிப் போன நித்தியானந்தா

அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தனது மடத்தின் நிதி மோசடிகள் தொடர்பான வழக்கில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து நித்தியானந்தா தனது கொடைக்கானல் முகாமை ரத்து செய்து விட்டு மதுரைக்கு ஓடி வந்துள்ளார்.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரை பதவியிலிருந்து நீக்குவேன் என்று மதுரை ஆதீனம் வேறு அதிரடியாக பேட்டி அளித்துள்ளதால், பீதியடைந்தே நித்தியானந்தா மதுரைக்கு ஓடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை, பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளன என்று கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டதற்காக நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் நித்தியானந்தாவுக்கும் தண்டனை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை விவரம் ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதனால் நித்தியானந்தா பெரும் பீதியில் உள்ளார். மேலும் மதுரை ஆதீனத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் அதீனத்திடம் கேட்டபோது தண்டனை விதிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் நித்தியானந்தா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதையடுத்து தற்போது தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கொடைக்கானலில் ஒரு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ள நித்தியானந்தா அங்கிருந்து மதுரைக்கு ஓடி வந்துள்ளார்.

மதுரை ஆதீனத்தை சந்தித்த அவர், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

மதுரை ஆதீனம் சமீப காலமாக நித்தியானந்தா மீது அதிருப்தி அடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நித்தியானந்தா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றன.

இப்படியே விட்டால் மதுரை ஆதீனம் அதிரடி முடிவுகளுக்குப் போய் விடலாம் என்ற பயத்தில்தான் மதுரைக்கு நித்தியானந்தா வந்து விட்டதாக தெரிகிறது

கருத்துகள் இல்லை: