வியாழன், 10 மே, 2012

புலிகளின் முன்னாள் அரசியல் தலைவர்கள், சிங்கக் கொடி ஏந்தியபின் தமிழகம் வருகிறார்கள்!


Viruvirupu,
புலிகள் இயக்கத்தால் முன்பு உருவாக்கப்பட்டு, அவர்களது அரசியல் அமைப்பாக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையைன் சிங்கக்கொடியை கையில் எடுத்திருப்பது குறித்து இலங்கை அரசு தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கையின் தேசிய கொடியை ஏந்தியது, எமக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளதற்கான சிக்னல்” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மேடையில் சிங்கக் கொடியை தமது கைகளில் ஏற்தி உயர்த்திப் பிடித்த நிலையில் நின்றிருந்தார்.
முன்பு புலிக்கொடி பறந்த கூட்டங்களில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சுரேஷ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் சிங்கக் கொடியேந்திய தமது தலைவரின் அருகே அணிவகுத்து நின்றிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வருவார் என்று கூறப்படும் சுமந்திரனும், மேடையில் நின்றிருந்தார்.

இதிலுள்ள பெரிய தமாஷ் என்னவென்றால், இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகிய மூவரும், தமிழகத்தில் வசித்து வருபவர்கள். ஓய்வு நேரங்களில் இலங்கை சென்று அரசியல் தலைவர்களாக செயல்பட்டு வருகின்றனர். சிங்கக்கொடி விவகாரம் தமிழகத்தில் அவர்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கான, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அவை முடிவடைந்த பின்னரே தமிழகத்தில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்புவார்கள் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இருந்து நடிகர்கள், பாடகர்கள் இலங்கை செல்வதற்கே போராட்டம் நடத்தும் இன உணர்வு அமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. அப்படியிருக்கையில், தமிழகத்தில் வசிக்கும், ஈழத் தமிழ் தலைவர்கள் இலங்கையின் சிங்கக்கொடியை உயர்த்தி அசைத்துவிட்டு தமிழகம் வரும்போது சிக்கல் ஏற்படலாம் அல்லவா? அதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் டில்லிக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்படும் போதெல்லாம், இலங்கையில் வெளியாகும் தமிழ் ஊடகங்களில் “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு இந்தியா பயணம்” என்று தலைப்புச் செய்திகள் அலறும். அதற்கு சிங்களப் பத்திரிகைகள், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் வீடு திரும்பினர்” என்று தலைப்பு செய்தி வெளியிடலாமே என்று கிண்டல் செய்வது வழக்கம்.
அப்படியான நிலையில், தமிழகத்தில் இவர்களுக்கு எதிர்ப்பு காண்பிக்கப்பட்டால், அது கௌரவப் பிரச்னையாக அல்லவா போய்விடும்!
இவர்கள் அடுத்த வாரம் தமிழகம் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் புலிகளின் அரசியல் கட்சியாக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே சிங்கக் கொடியை தூக்கி ஆட்டிய காட்சி, சமீப காலமாக இலங்கையின் சிங்களப் பகுதிகளில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. சிங்களப் பத்திரிகைகளில் மிக அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தமிழர் தலைவராக, சிங்கக்கொடி ஏந்திய தலைவர் இரா. சம்பந்தன் மாறியிருக்கிறார்.
இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள இலங்கை அரசின் சீனியர் அமைச்சரும், இலங்கை நாடாளுமன்ற சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா, “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எமது தேசியக் கொடியை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ஏந்தியது குறித்து வேறு எவரையும்விட நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: