![]() |
![]() |
ந. சரவணன் : மதிய உணவிற்கு அருகில் உணவகம் இருக்கிறதா என்று அலுவலக தோழர் ஒருவரிடம் கேட்க விபரம் கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் அவர் கூறிய உணவகம் இன்று விடுமுறை. அருகிலிருந்தவர்களிடம் வேறு உணவகம் இருக்கிறதா என கேட்க, இன்னும் சற்று முன்னே செல்லுங்கள் இடப்புற ஒழுங்கையில் உணவகங்கள் இருக்கிறது என்றார் ஒருவர்.
சென்று பார்த்தால், சுமாரான முகப்பு தோற்றத்துடன் KMS மெஸ் என இருந்தது. சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு பின்புறம் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் மேன்சன்களாக இருப்பதால் அநேக மெஸ் இருக்கிறது. சென்னை வந்த ஒரு வாரத்தில் பல்வேறு மெஸ்களில் சாப்பிட்டு மெஸ் இப்படிதான் இருக்கும் எனும் அனுமானம் இருந்தது. திருச்சி அனுபவமும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் மெஸ் அனுபவமும் இருந்ததால் கற்பனையில் இப்படித்தான் இருக்கும் சமாளித்துக்கொள்ளலாம் என்று சென்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்கியதும் நெய் பருப்பு வேண்டுமா என கேட்டு அதற்கும் தனியாக டோக்கன் கொடுத்தார் ஒருவர். ஒரு இடம் காலியாக இருக்க அங்கு அமரப்போகையில், காத்திருங்கள் அனைவரும் எழுந்த பின் அமரலாம் என்றார். பசி அதிகமாக இருந்தது. டோக்கன் வாங்கியாயிற்று என அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன்.
சரி ஒரு வரிசையே காலியாகி அனைவரும் சென்ற பின்னும் அனுமதிக்கவில்லை. பொறுமை தாங்கவில்லை சற்று எரிச்சலாக இருந்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால் நடக்கும் ஓவ்வோன்றும் ஆச்சர்யப்பட வைத்தது.
முதலில் ஒருவர் வந்தார் தண்ணீர் டம்ளர்கிளை மட்டும் எடுத்துச்சென்றார். அடுத்து ஒருவர் மோர் கார குழம்பு, பாயாச கிண்ணங்களை எடுத்து சென்றார். அடுத்து ஒருவர் வந்து இலைகளை எடுத்தார். ஒவ்வொன்றும் தனித்தனியாக நடந்தது. திகைப்பாக இருந்தது. வேலையாட்களின் நேர்த்தி ஒழுங்கு, லாவகம் என அசத்திக்கொண்டிருந்தார்கள்.அரைவயிறு நிரம்பியதுபோலிருந்தது. அடுத்து ஒருவர் வந்து மேசைகளை துடைத்துச்சென்றார்.
சரி அமரலாம் என்று சென்றால், அடுத்த பந்தியில் சாப்பிடும் ஒருவர் டோக்கனில் மேசை இலக்கம் இருக்கிறது அதுபடி அமர வேண்டும் என்றார். திகைப்பு இன்னும் அதிகமானது. ஒவ்வொரு மேசைக்கும் ஒரு ஆள் சென்றுவர போதுமான இடைவெளி.
உணவகமா அல்லது விசேச நிகழ்வு விருந்து பந்தியா என யோசனை செய்தவாறே நாம் மட்டும் தான் இருக்கிறோம் சாப்பாடு போடுவார்களா என்று யோசிக்கையில், ஏற்கனவே டோக்கன் வாங்கியவர்கள் ஒவ்வொருவராக வந்து அவரவர் இடத்தில் அமர்ந்துக்கொண்டனர்.
இப்போது இலை வைக்கப்படுகிறது, ஒரே அளவுள்ள சுத்தமான அழகான பெரிய இலைகள். பார்க்கவே அழகாக இருந்தது. அடுத்து தண்ணீர் டம்ளர், பிறகு ஒருவர் தண்ணீர் ஊற்றி செல்கிறார் பின் தொடர்பவர் அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார். இருவருக்குமிடையில் பேச்சுவார்த்தையோ முக பாவனைகளோ இல்லை. ஆனால் சிறிய நேர இடைவெளி கூட இல்லாமல் அடுத்தவர் தொடர்ந்தார்.
அடுத்து பொரியல், கூட்டு சாப்பாடு என ஒன்றன்பின் ஒன்றாக இலைகளில் வைப்பதில் அவ்வளவு நேர்த்தி, சிந்தவில்லை, சிதரவில்லை பதட்டமில்லை, கூச்சலில்லை இது உணவகம் தானா என வேடிக்கை பார்த்ததிலேயே சாப்பிட்ட திருப்தி. அடுத்து கார குழம்பு, மோர், ரசம் ஒவ்வொன்றும் அது தேவைப்படும் இடைவெளியில் பரிமாறப்பட்டது.
அளவு சாப்பாடு தான் போதுமானதாகவே இருக்கிறது. அதை இலையில் வைக்கும் விதம் எந்த இடத்திலும் அவர்கள் கையாளும் தன்மையில் முகம் சுளிக்க வாய்ப்பே கொடுக்கவில்லை.
ஏதேனும் பற்றாக்குறை என கேட்டால் உடனே எந்த இடைஞ்சலுமின்றி பரிமாறுகிறார்கள்.
உணவக நிர்வாகத்தினரோ, மேனேஜர் போல இருந்தவரோ யாருமே வேலையாட்களை அதட்டவில்லை, சாம்பார் ஊத்து, தண்ணீர் வை அப்பளம் மறந்திட்டியா வேடிக்கை பார்க்காத லைன கவனி, அண்ணனுக்கு என்ன வேனும் கேளு இப்படி எந்த சத்தமும் இல்லை, இடையில் அழைப்பேசி ஒலித்ததால் நமக்குத்தான் ஒருவித அநாகரீகமாக நடக்கிறோம் என்ற உணர்வு வந்து விட்டது.
பெரிய பெரிய உணவகங்களின் விலையை விட எவ்வளவோ மேல்.
இப்படி ஒரு உணவகம், சாப்பிடுகிறவர்களுக்கான மரியாதை, ஊழியர்களுக்கான சுதந்திரம், உணவக அமைப்பு, சுகாதாரம், கவனிப்பு, சாப்பாடு தரம், ருசி இது எல்லாவற்றிற்கும் சேர்த்து அளவு சாப்பாடு 85 ரூபாய் தான்.
ஒருமுறை கர்நாடக ஸ்கான் டெம்பிளுக்கு நண்பர்களுடன் பெரும் ஆரவாரத்துடன் சென்று வழிநெடுகிலும் சத்தமாக பேசிக்கொண்டே சென்றோம். கோயில் அமைப்பு, பண வசூல், மார்கெட்டிங் தந்திரம் இதுப்பற்றிய்ல்லாம் கிண்லடித்தபயே இருந்தோம். நுழைவாயில் கடந்து சிறிய ஒரு அடி பரப்பளவில் உள்ள டைல்சில் கால் வைத்து முன்னதாக நகர்ந்ததும் நாம் அதற்கு நகர வேண்டும். ஒரு பத்து டைல்ஸ் தாண்டியபோது எங்களையறியாமல் நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு எல்லோரையும் போல் அமைதியாக ஒலித்துக்கொண்டிருக்கும் இசையில் மூழ்கி பக்தி மயமாகி விட்டிருந்தோம். அது இயல்பாக நடநுதிருந்தது. சூழல் அப்படி மாற்றிவிட்டிருந்தது.
கோயில் என்பதால் புனித தன்மைக்காக இதை கூறவில்லை. அந்த இடம் எமை அறியாமலேயே மாற்றி விட்டது என்பதற்காக மட்டுமே.அதை நினைவு படுத்தியது KMS மெஸ்.
நன்றி.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக