![]() |
![]() |
Sarawanan Komathi Nadarasa : 1966 - மொழிப்போராட்ட தியாகி ரதனசார தேரர்!
1966 இல் மொழிப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகியாக அறியப்படுபவர் தம்பராவே ரதனசார தேரர். 1966 ஜனவரி 8 கொண்டு வரப்பட்ட தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை எதிர்த்து அன்றே பேரினவாத சக்திகள் நடத்திய மாபெரும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிக்கு கொள்ளுபிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இறந்தார்.
இந்த நிகழ்வுகளைப் பற்றி விரிவான ஒரு கட்டுரையை தொடங்கினேன். அது ஒரு சிறு நூலாக உருப்பெருமளவுக்கு நீண்டுவிட்டது.
தமிழர்களுக்கு மொழி அந்தஸ்து கிடைக்கக்கூடாது என்று போராடிய அந்தத் “தியாகியை” ஆண்டுதோறும் ஜனவரி 8 அன்று நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
இடதுசாரிக் கட்சிகளின் அழிவு ஆரம்பமான இடம் அந்த சட்டமே. அந்த சட்ட விவாதம் 1966 ஜனவரி 8 ஆரம்பித்து ஜனவரி 11 நள்ளிரவு வரை நீண்டது.
விவாதத்தின் முடிவில் அன்று நள்ளிரவு நடந்த அந்த வாக்கெடுப்பில் இடதுசாரித் தலைவர்கள் அனைவரும் அச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். தமிழ் மொழிக்கு விசேட அந்தஸ்து கொடுக்கப்படுவதற்கு எதிரான தரப்பில் இருந்தார்கள்.
தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் ஒழுங்குவிதிகளுக்கு எதிராக வாக்களித்தவர்களில் முக்கியமான இடதுசாரித் தலைவர்களை அவர்களின் கட்சி அடிப்படையில் இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த 'ஐக்கிய முன்னணி' அங்கத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்த இடதுசாரித் தலைவர்கள்:
1. லங்கா சமசமாஜக் கட்சி (LSSP - Trotskyite):
Dr. N. M. Perera (என். எம். பெரேரா) - கட்சியின் தலைவர்.
Dr. Colvin R. de Silva (கொல்வின் ஆர். டி சில்வா) - பின்னாளில் 1972 அரசியலமைப்பை வடிவமைத்தவர்.
Leslie Goonewardene (லெஸ்லி குணவர்தன)
Vivienne Goonewardene (விவியன் குணவர்தன)
Bernard Soysa (பேர்ணாட் சொய்சா)
Cholmondeley Goonewardene (சொல்மன்டலி குணவர்தன)
2. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CP - Moscow Wing):
Pieter Keuneman (பீட்டர் கெனமன்) - கட்சியின் பொதுச்செயலாளர்.
3. மகாஜன எக்சத் பெரமுன (MEP - Philip Gunawardena பிரிவு அல்லாத ஏனைய இடதுசாரிகள்):
Prins Gunasekara (பிரின்ஸ் குணசேகர) - இவர் தான் தம்பராவே ரதனசார தேரரின் இரத்தம் தோய்ந்த காவியுடையை நாடாளுமன்றத்தில் காண்பித்து உரையாற்றியவர்.
இந்த வாக்கெடுப்பில் ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இடதுசாரி இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவரான பிலிப் குணவர்தன (Philip Gunawardena), டட்லி சேனாநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததால், இந்த ஒழுங்குவிதிகளுக்கு ஆதரவாக வாக்களித்தார். அவரது பெயர் 'ஆதரவளித்தவர்கள்' பட்டியலில் (The Hon. D. P. R. Gunawardena) முதற்பக்கத்திலேயே காணப்படுகிறது.
அதேவேளை, சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவு (Peking Wing) நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் வெளியில் இருந்து இப்போராட்டத்தை விமர்சித்தனர்.
ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த ரோகண விஜேவீர இனவாத எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டார்.
இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளாகக் கருதப்பட்ட தலைவர்கள், அன்று சிங்களப் பேரினவாதக் கோரிக்கைகளுக்குப் பணிந்து சிறுபான்மையினரின் மொழி உரிமைகளுக்கு எதிராக வாக்களித்தனர்"
இக்கட்டுரைக்காக அந்த விவாதங்களைக் கொண்ட ஹன்சார்ட்டுகள் அனைத்தையும் கவனித்தேன். பத்திரிகைகளில் பெரும்பாலான விபரங்கள் இல்லை. ஏனெனில் இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு கடுமையான பத்திகைத் தணிக்கையும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. அன்றைய பல பத்திரிகைகளின் பக்கங்களின் செய்திகள் கருப்பு மையால் மறைக்கப்பட்டு வந்திருந்தது.
"டட்லிகே கட்டே மசாலா வடே"
போன்ற கோஷங்கள் இவ்வூர்வலங்களின் போது தான் வெளியிடப்பட்டன.
1956 ஆண்டின் 70ஆண்டு நிறைவும் 1966 நிகழ்வுகளின் 60 ஆண்டு நினைவும் இவ்வாண்டு நினைவுகொள்ள வேண்டி இருக்கிறது. இதையொட்டி "1956" என்கிற எனது நூல் நிறைவை எட்டிக்கொண்டு இருக்கிறது. இலங்கையை இருண்ட பக்கத்துக்கு கொண்டு சென்ற முக்கிய வரலாற்று நிகழ்வை எவ்வாறு மறப்பது.
வரிவாக பதிவு செய்வோம்!
படங்கள் :
1. தம்பராவே ரதனசார தேரர் (பழைய படத்தை ai மூலம் தெளிவாக்கியது)
2. தம்பராவே ரதனசார தேரர் நினைவாக கொள்ளுபிட்டியில் பிரதமரின் அலரி மாளிகையின் முன் எழுப்பட்டிருந்த நினைவுத்தூபி. மகிந்த ஜனாதிபதியாக அந்த அலரி மாளிகையை பயன்படுத்திய காலத்தில் 2011ஆம் ஆண்டு மகிழ்ந்தவால் புதுபிக்கப்பட்ட தூபி.
3. மேற்படி தமிழ் மொழி சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்தவர்களின் பட்டியலின் முதலாவது பக்கம். மொத்தம் 12 பக்கங்களையும் இங்கே பகிரவில்லை.
4. இச்சம்பவத்தைப் பற்றி பல சிறு நூல்களும், பிரசுரங்களும் வெளிவந்தன. அவற்றில் ஒன்று. “மகா சங்க சங்கிராய” (மகா சங்கத்தினரை ஒழிப்பது) என்கிற நூலின் அட்டைப்படம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக