![]() |
நிலவன் மாணிக்கம் : சாத்தான் குளம் லாக்கப் கொலை!
எடபாடுவின் பித்தலாட்டம் அம்பலம்!
சாத்தான்குளம் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது! இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய சாட்சியமே ஒரு பெண்! மனசாட்சியுள்ள ஒரு பெண்! அதுவும், சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டு மனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு பெண் தலைமைக் காவலர் ரேவதி இந்த விவகாரம் வலுவாக வெளிவந்துள்ளது!.
இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி வருகிறார்... "சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த அனைத்து கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்... நான் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்... என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?" எனக் கேட்கிறார்! அதற்கு உத்தரவாதம் அளித்ததும், அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார்...
"சம்பவம் நடந்தன்னைக்கு எனக்கு நைட் பாரா. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட அனைவரோடு, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆட்களும் இருந்தாங்க. இவங்க அத்தனை பேரும் அந்த பெரியவரையும், அவரோட பையனையும் கண்மூடித்தனமா அடிச்சாங்க...முதல்ல அவங்கள அடிச்சது எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ் ரெண்டு பேருமா, அப்பாவையும் பையனையும் தரையில உக்காரவச்சு, கையில கிடைச்ச லத்தியையெல்லாம் வச்சு அடிச்சுக்கிட்டே இருந்ததோட, ஷூ காலால அவங்க பிறப்புறுப்புலயும், கண்ட இடத்துலயும் மிதிச்சாங்க. ரெண்டு பேரும் வேதனையால கத்துனாங்க. கத்தக் கத்த அவங்களை இவங்க எல்லாருமா அடிச்சாங்க" என்று கூறியிருக்கிறார்.
இப்படி அடித்துக்கொண்டேயிருக்கும்போது இடையிடையே கேப் விட்டு அடித்திருக்கிறார்கள். அப்பாவும் பையனும் அரைமயக்க நிலையில் சோர்ந்திருந்த போது பொறுக்கமாட்டாமல் ரேவதி, "உங்களுக்கு ஏதும் வேண்டுமா அப்பா?" என்று ஜெயராஜை பார்த்து கேட்க, அவர் எதாவது குடிக்கக்கேட்க, காபி வாங்கிவந்து கொடுத்திருக்கிறார். அதை குடிக்கும்போதே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அந்த காபியையும் குடிக்கவிடாமல் தட்டிவிட்டு அவர்களை அடித்துநொறுக்கியிருக்கிறான். அதன்பின் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார் ரேவதி. கொடூர சைக்கோக்களுக்கு மத்தியில் மனிதநேயத்தோடு இருந்திருக்கிறார் ரேவதி!
கொடூரத்தின் அடுத்த கட்டமாக, பென்னிக்ஸை நிர்வாணமாக்கி, டேபிள் மேல் குப்புற படுக்கவைத்து, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸாரையும் வைத்து, கையை, காலை தனித்தனியாகக் கட்டிவைத்து, மூர்க்கத்தனமாக அடித்திருக்கிறார்கள். இதேபோல் ஜெயராஜையும் அடித்திருக்கிறார்கள். அவர்கள் அலறுவதைக்கேட்டு பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் ரேவதி. இதில் அவர்கள் இரண்டாவதாக அடிப்பதற்கு லத்திக்கு பதிலாக இரும்புக்குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த கொடூரம் எப்படியென்பதை போஸ்ட்மார்ட்டம் செய்த இடத்திலிருந்த ஊழியர்கள் சொன்னதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்... அப்பா, பையன் இருவருக்குமே பின்புறத்தில் தோலே இல்லாமல் சதை தான் தெரிந்தது என்றார்கள்... தோலை முழுக்க அடித்தே உரித்திருக்கிறார்கள்... எத்தனை கொடூரம் பாருங்கள்... இருவருக்கும், உடலிலிருந்து நீரும் ரத்தமும் தன்னாலே வழிந்தபடியே இருந்திருக்கிறது.. அப்படியே அடுத்தடுத்து மரணித்திருக்கிறார்கள்...
இவ்வழக்கில் நேரடி சாட்சியமாக இருந்த ரேவதியின் சாட்சியமே வழக்கில் மற்றவர்களின் பொய்களையெல்லாம் அடித்து காலி செய்தது! குறிப்பாக, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, காய்ச்சலால் இருவரும் இறந்தார்கள்... உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்றெல்லாம் விதவிதமாகப் பேசி, இதை மறைக்கப் பார்த்தார்...எடுபிடி எடப்பாடி பொய்யர் என்று நிரூபித்தது ரேவதியின் மனிதாபிமானமிக்க நேரடி சாட்சியம்! இன்னமும் நம்மோடு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு ரேவதியே சாட்சி! ரேவதியே ஆறுதல்! ரேவதிக்கு இத்தருணத்தில் சல்யூட்! எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் மிக மோசமான பல்வேறு சம்பவங்களில் முக்கியமான மூன்று சம்பவங்களாக இந்த சாத்தான்குளம் இரட்டைக்கொலை... தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது... கொடநாட்டில் நடந்த கொலை... கொள்ளை சம்பவங்கள்... ஆகியவற்றை சொல்லலாம்! இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு... அந்த 9 காவலர்களுக்கான தண்டனை மட்டுமல்ல... எடப்பாடி ஒரு பொய்யர் என்பதையும் வெளிப்படுத்தும் தீர்ப்பு! நேரடி சாட்சியம் ரேவதிக்கு பாராட்டுகள்! இவரது மனிதாபிமான சாட்சியத்தை... துணிச்சலான செயலைப் பாராட்டி விருது வழங்கிட வேண்டும்!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக