செவ்வாய், 7 ஏப்ரல், 2026

டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது.

 KR Athiyaman : அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு பெரும் தவறுகளையும், மீறல்களையும், குற்றங்களையும் புரிந்தவர், புரிந்து வருபவர் தான். மாற்றுக் கருத்தில்லை. 
ஆனால் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது. 
வெனிசுலா அதிபர் மடேரோவை நள்ளிரவில் கடத்தி வந்து, அமெரிக்காவில் வீட்டுச் சிறையில் வைத்துள்ளார். இது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு முரணானது, அநீதியானது என்பதெல்லாம் உண்மை தான். 


ஆனால் கடந்த 20 வருடங்களாக பெரும் பெருளாதார சீரழிவில் சிக்கி, 80% பொருளாதார சுருக்கத்தை (ஆம், 2013ஐ ஒப்பிடும் போது ஜி.டி.பி அளவு மைனஸ் 80%ஆக சுருங்கி விட்டது) எதிர்கொண்டுள்ள வெனிசுலாவிற்கு இதன் மூலம் விடிவு காலம் பிறந்துள்ளது.  
                                                                                                     உலகிலேயே மிக அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலா, தவறான பொருளாதார கொள்கைகளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்ததனால், அதன் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை அடைந்து, தற்போது பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை எதிர் கொண்டுள்ளது !! நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் சவுதி அரேபியாவை விட அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட இந்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளினால். அனைத்து தனியார் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையங்களையும் அரசுடைமையாக்கி, பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தையும் நாட்டை விட்டு துரத்தி, அரசு பொதுத் துறை நிறுவனமான PDVSAவின் ஏகபோகத்தின் கீழ் பெட்ரோலிய துறையை கொண்டு வந்ததால் ஏற்பட்ட சீரழிவு இது. அதீத ஊழல்கள், மெத்தனம், ஒழுங்கின்மை, 10 பேர் செய்ய வேண்டிய வேலையை 100 பேரை வைத்து செய்து பெரும் நஷ்டத்தை உருவாக்குதல், அரத பழசான தொழில்நுட்பம், புதிய, நவீன தொழில்நுட்பங்களை கொள்முதல் செய்ய, உருவாக்க போதிய மூலதனம் மற்றும் செயல் திறன் அற்ற extreme inefficiency, obsolete and rusting machinery, etc – இவை தான் காரணங்கள். 
மிக அதிக அன்னிய மற்றும் உள்நாட்டு கடன் சுமை, வருடத்திற்கு 617% விலைவாசி உயர்வு (இது 2019இல் 65,000%ஆக இருந்தது. ஆம் !!), நாட்டில் பெரும்பான்மையினர் (சுமார் 95%) வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டு, அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயரும் அவலம். (வறுமை அளவு 2007இல் 27.5%ஆக இருந்தது). லிபரல் ஜனனாயக அடிப்படையிலான சந்தை பொருளாதார கொள்கைகளை ஆரம்பம் முதல் கடைபிடித்திருந்தால், இன்னேரம் மிகப் பணக்கார நாடாக வெனிசுலா உருவெடுத்து, வறுமையே இல்லாத நாடாக மாறியிருக்கும். அத்தனை எண்ணெய் வளம் அங்கு கொட்டிக் கிடக்கிறது. 
                                                                                              அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தான் இதற்கு காரணம் என்று இடதுசாரிகள் சாதிப்பார்கள். இல்லை, அது ஒரு 20% காரணம் தான். 80% காரணம் தவறான பொருளாதார கொள்கைகள் தாம். மேலும் இந்த பொருளாதார தடைகள் 2015இல் தான் முதன் முதலாக விதிக்கப்பட்டது. அதற்கு பல காலம் முன்பே வெனிசுலா சீரழியத் தொடங்கி விட்டது. 
                                                                                                               கடந்த ஜனவரி முதல் வாரத்தில் வெனிசுலாவின் நீண்ட கால அதிபரான மடேரோவை அமெரிக்க கமாண்டோகள் கடத்தி சென்ற பின், அடுத்த அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் (முன்னாள் துணை அதிபர்) பதவி ஏற்றார். இவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், வெனிசூலாவின் பொருளாதார கொள்கைகளை சீர்திருத்த சம்மதிக்க வைத்தார். பன்னாட்டு பெட்ரோலிய (மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த) நிறுவனங்கள் வெனிசூலாவில் மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கும் மசோதாவை வெனிசூலா நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. மிக முக்கியமாக, இனி எதிர்காலத்தில் ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள், வழக்குகளை வெனிசூலா நீதிமன்றங்களுக்கு பதிலாக சர்வதேச நீதிமன்றங்கள் (international arbitration) விசாரணை செய்யும். சட்டத்தை மாற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் கட்டமைக்கும் ஆலைகளை திடீரென வெனிசுலா அரசு நாட்டுடைமை ஆக்குவதை தடுக்க இந்த சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மடேரோ அதிபராக இருந்த வரை இத்தகைய சீர்திருத்தம் சாத்தியமாகவில்லை. சோசியலிஸ்டான அவர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெனிசூலாவின் பொருளாதார அழிவை அதிகரிக்கச் செய்தவர். 
                                                                                                          இதைத் தொடர்ந்து தற்போது வெனிசூலாவின் பெட்ரோலிய துறையில் அமெரிக்க மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளன. வெனிசூலா பெட்ரோலிய துறையை மேம்படுத்தி, உற்பத்தியை பெருக்க சுமார் 100 பில்லியன் டாலர் தேவைப்படும். (10,000 கோடி டாலர்). அதற்கு வழி பிறந்துள்ளது. அடுத்த சில வருடங்களில் இதன் மூலம் வெனிசூலா பொருளாதாரம் சீரடைந்து, விலைவாசி உயர்வு மற்றும் கடன் சுமை வெகுவாக குறைந்து. அன்னிய செலாவணி இருப்பு போதுமான அளவு உயர்ந்து, வேலை வாய்ப்புகள் பெருகி, வறுமை வெகுவாக குறையும். 
                                                                                               வெனிசூலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா ‘கைபற்றி’ விடும் என்பவர்களுக்கு : எண்ணெயை எடுக்க முதலில் தொழில்நுட்பம், மூலதனம், செயல் திறன் தேவை. அதை பன்னாட்டு நிறுவனன்களினால் மட்டும் தான் அளிக்க முடியும். அவை எடுக்கும் எண்ணெய்க்கு ராயல்டி வரி கட்ட வேண்டும்.  வருமான வரி உள்ளிட்ட இதர வரிகளையும் செலுத்த வேண்டும். சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதே முறை தான். இதன் மூலம் வெனிசூலா உருப்பட்டு விடும். Just wait and see.

கருத்துகள் இல்லை: