டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரோடு பத்திரிகையாளர்களை சந்தித்த தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி,
அங்கு பெண் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க மறுத்தார்!
இதில் கலந்து கொண்ட எந்த ஒரு ஆண் பத்திரிகையாளரும் இதை கண்டித்து வெளிநடப்பு செய்யவில்லை என்பது வெட்க கேடு
tamil.oneindia.com - Nantha Kumar R : டெல்லி: அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டாகி இந்தியா வந்துள்ளார். இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு அவர் நடத்திய பிரஸ்மீட்டில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர்.
இப்போது நம் தலைநகரில் ஆப்கானிஸ்தான் ஆண் - பெண் என்ற பாலின பேதத்தை கடைப்பிடித்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்கள் மதஅடிப்படைவாதிகள். இதனால் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொது இடங்களில் கணவனுடன் சேர்ந்து பெண்கள் செல்லக்கூடாது. ஓட்டல்களில் ஆண்கள் அருகே அமர்ந்து செல்லக்கூடாது.
women-journalists-barred-from-afghanistan-foreign-ministers-delhi-press-conference
ஜிம் செல்லக்கூடாது. பூங்கா செல்லக்கூடாது. உயர்கல்வி பயில கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாது. தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.இதை மீறும் பெண்களுக்கு கடும் தண்டனைகளையும் தாலிபான்கள் வழங்கி வருகின்றன.
தாலிபான்களின் இந்த அடக்குமுறையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் தாலிபான்கள் அதனை கண்டுக்கொள்வது இல்லை. இதனால் பல நாடுகள் இன்னும் தாலிபான்களை அங்கீகரிக்கவில்லை.
ஆனால் நம் நாட்டுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. குறிப்பாக தற்போதைய மத்திய அரசுக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான் நிர்வாகிகளுக்கும் நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி தனது குழுவினருடன் இந்தியா வந்தார். டெல்லியில் வந்து இறங்கினார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர்கான் முட்டாகி இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இருநாடுகள் இடையேயான உறவு, வர்த்தக உறவு, மனிதநேய உதவிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகுஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர்கான் முட்டாகி பத்திரிகையாளர் சந்திப்பை டெல்லியில் நடத்தினார்.
அப்போது அவர், ‛‛இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விரிவான விவாதம் நடத்தினோம். ஆப்கானிஸ்தானை எந்த நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்த அணுகுமுறையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று பாகிஸ்தான் அரசாங்கத்தை எச்சரிக்க விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எந்தவொரு எல்லை தாண்டிய நடவடிக்கையையும் நாங்கள் கண்டிக்கிறோம். ஆப்கானிஸ்தான் மக்களின் பொறுமை மற்றும் தைரியத்தை சவால் செய்யக்கூடாது. அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுவதில் ஆப்கானிஸ்தான் ஒரு சமநிலையான அணுகுமுறையை கொண்டுள்ளது" என்றார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.தாலிபான்கள் இந்தியாவிலும் தங்களின் பாலின பேதத்தை கடைப்பிடிக்கின்றனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தனர் ? என்று பத்திரிகையாளர்கள், சமூக வலைதள பயனாளர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுபற்றி இந்தியா டுடேவின் பத்திரிகையாளர் கீதா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ ஆப்கானிஸ்தான் தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது'' என கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு பல பெண் பத்திரிகையாளர்கள் தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளனர்.
நயானிமா பாசு என்ற பத்திரிகையாளர், ‛‛"இந்திய தலைநகரின் மையப்பகுதியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார். அதில் வேண்டுமென்றே பெண் பத்திரிகையாளர்களையும் விலக்கி வைத்துள்ளார். இதை எப்படி அனுமதிக்க முடியும்? இத்தகைய மூர்க்கத்தனமான புறக்கணிப்பை யார் அங்கீகரித்தார்கள்?''என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ "நமது நாட்டின் சொந்த மண்ணில் விதிமுறை இதுதான் என்று ஆணையிடவும், பெண்களுக்கு எதிரான பாகுபாடு நிறைந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு அவர்கள் யார்?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக