செவ்வாய், 7 அக்டோபர், 2025

நக்கீரன் கோபால் : பாஜக பாதுகாப்பில் விஜய்.. டெல்லியில் தலைமறைவான தலைவர்கள் -

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj   : சென்னை: "41 பேரை காவு கொடுத்தும், 10 நாட்களாக விஜய், 3 நிமிட வீடியோவில் பேசியதோடு வீட்டிலேயே இருக்கிறார். 
பாஜகவின் பாதுகாப்பில் இருக்கிறார் விஜய். தவெக நிர்வாகிகளை பாஜக பாதுகாப்பாக வைத்துள்ளது" என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக தெரிவித்துள்ளார் நக்கீரன் கோபால்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். 



இந்த சம்பவத்தினை முன்வைத்து விஜய்யை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், நீதிமன்றமும் கடுமையாக விமர்சித்துள்ளது. அதேசமயம், அரசு மீது தவெக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கரூர் சம்பவம் பற்றி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்.
vijay karur Nakkeeran gopal tvk

நக்கீரன் கோபால் பேசுகையில், "தனக்காக வந்த ஒரு கூட்டத்தில் அசம்பாவிதம் நடந்தபிறகு சம்பந்தப்பட்ட நபர் ஓடி விடுகிறார். இனம் பார்க்காமல் செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனே களத்துக்கு வந்து உதவுகிறார்கள். மருத்துவமனைக்கு வேனில் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து இறக்கினார் செந்தில் பாலாஜி. இவர்கள் வரவில்லை என்றால் யாரும் வரவில்லை எனச் சொல்வார்கள். காப்பாற்ற வந்தவர்களைப் போட்டு பிராண்டுகிறார்கள்.

விஜய் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என்பதற்கு அவர் சென்றதே ஒரு உதாரணம். அவர் பயணிகள் விமானத்தில் செல்லமாட்டார். மனித வாடையே இல்லாமல், ஃப்ளைட்டை வாடகைக்கு எடுத்து வருகிறார். காலை 8.45க்கு நாமக்கல்லுக்கு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு அந்த நேரத்துக்கு தான் சென்னையில் வீட்டில் இருந்தே கிளம்புகிறார்.

Also Read
கரூர் கூட்டத்தில் விஜய் ஜனநாயகன் ஷூட்டிங்? அதிர்ச்சி கிளப்பும் நக்கீரன் கோபால்! பிரத்யேக பேட்டி!

திரும்பி வருவதற்கு ஒரு நேரம் முடிவு செய்திருப்பார். அந்த நேரத்தில் செல்ல ஏவியேஷன் அனுமதி பெற்றிருப்பார். ஆனால், அன்றைக்கு திருச்சிக்கு விஜய் போனதுமே அவரது தனி விமானம் பறக்க அனுமதி கிடைத்து விடுகிறது. விஜய் முன்பே அனுமதி கேட்ட நேரத்துக்கு தானே அவரது விமானம் பறக்க முடியும்? இதற்கு பின்னால் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இல்லையா? பாஜக சொல்லித்தான் 3 நாட்களித்து விஜய் வீடியோ வெளியிட்டார்.

தலைவர் பனையூருக்கு சென்று விட்டார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி விட்டார். அவர் கடலுக்கு நடுவே இருப்பதாக சொல்கிறார்கள். தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் தலைமறைவாகி விட்டார். தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டார்கள். அவர்களுக்காக எல்லாரும் வக்காலத்து வாங்குகிறார்கள்.

41 பேரை காவு கொடுத்திருக்கிறோம். 10 நாட்களாக ஒருவர், 3 நிமிட வீடியோவில் பேசியதோடு வீட்டிலேயே இருக்கிறார். திமுக அரசு மீது இன்னும் குற்றம்சாட்டுகிறார்கள். பாஜகவின் பாதுகாப்பில் இருக்கிறார் விஜய். விஜய் அமைதியாக இருக்கிறார். அவரைக் காப்பாற்ற டெல்லியில் இருந்து எம்.பிக்கள் குழுவை அனுப்புகிறது பாஜக" எனத் தெரிவித்துள்ளார் நக்கீரன் கோபால்.

கருத்துகள் இல்லை: