புதன், 21 அக்டோபர், 2015

ஜெயலலிதா... கொடநாட்டில் 900 ஏக்கரில்...சிறுதாவூரில் 25.40 ஏக்கரில், பையனூரில் 3 ஏக்கரில், கன்னியாக்குமரியில் 1190 ஏக்கர்...திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர்.....இன்னும் பல பல...

DSC_4486savukkuonline.com :   Flashback : ஜெயலலிதா வேனில் ஏறியதும் சசிகலாவிடம், (MGR)“ஜனங்களை எப்படி கெடுத்து வச்சிருக்கான் பாரு” என்று கூறியதை நேரில்...
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ”
ஜெயலலிதா அதிமுகவின் 44வது தொடக்க நாளையொட்டி, ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.    ஜெயலலிதா என்றாலே ஆணவத்தின் மறுபிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே.  அப்படிப்பட்ட ஜெயலலிதா “உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன்” என்று உருக்கமாக பேசுவது, தேர்தலையொட்டிய அவரது நடிப்பின் தொடர்ச்சியேயன்றி வேறல்ல.

எம்ஜிஆரின் பெயரை, தமிழக மக்களிடமிருந்து மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் வரும் ஜெயலலிதாதான், தற்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்.     எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவு வந்து விடுகிறது.
ஜெயலலிதாவைப் போல எம்ஜிஆரால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒருவருமே இருக்க முடியாது.     எம்ஜிஆரை மனமார வெறுத்துக் கொண்டிருப்பவர்தான் ஜெயலலிதா.     எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே,   எம்ஜிஆருக்கு பதிலாக தன்னை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியவர்தான் ஜெயலலிதா.    அந்த கடிதத்தில்,  “The root cause of everything that is happening here is that the C.M. is terribly jealous of my popularity. He cannot stomach the fact that I have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life.”
“மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்”
மேலும், “MGR himself, who does not want to give me due importance, does not want to induct me into the Cabinet. No one here can really dare to oppose him for without him they are Zeros.”
“எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்”
1.1.1987 நாளிட்ட ‘மக்கள் குரல்’ இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறும்போது, “அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள். சும்மா ஓடுகிற ஓணானை முகத்திலே நுழைய விட்ட கதையாக என் விஷயம் ஆகிவிட்டது இப்போது. இந்த அம்மு அபாயகரமானவள். யாரையும் அவள் தனக்காகப் பயன்படுத்துவாள். எதையும் செய்யத் தயங்கமாட்டாள். மிகவும் கெட்டவள்” என்று சொன்ன கருத்தை “மக்கள் குரல்” ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி  வெளியிட்டிருந்தார்.    எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே, அவரை ஓரங்கட்ட  வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்தவர்தான் ஜெயலலிதா.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், உடனடியாக அவர் பெயரை ஓரங்கட்டும் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா.   எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் கட்சியை கைப்பற்ற திட்டமிட்டபோது, பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜாராம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரை சேர்த்துக் கொண்டு, தனி அணி கட்டினார் ஜெயலலிதா.   அவர்களுக்கான தேவை முடிந்ததும், அவர்களை வசதியாக கழற்றி விட்டார்.
1982ம் ஆண்டு ஜெயலலிதாவை அதிமுகவில் சேர்த்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கினார்  எம்.ஜி.ஆர்.     மாநில சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக்கியதோடு, மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கினார்.    கூடுதலாக ஜெயலலிதாவுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.     ஒரு கட்டத்தில் தன்னை ஓரங்கட்டப் பார்க்கிறார்  என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பிரதானப்படுத்துவதை நிறுத்தினார்.     ஒரு பத்திரிக்கைக்கு ஜெயலலிதா பேட்டியளிக்கையில்,   எம்ஜிஆரின் புகழுக்கு காரணமே தான்தான் என்று கூறினார் ஜெயலலிதா.  இதன் காரணமாகவே, எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், ஜெயலலிதாவுக்கு பதிலாக மஞ்சுளா கதாநாயகி ஆனார்.
இப்படி தன் புகழ் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் அமெரிக்காவுக்கு சிசிக்சைக்காக சென்றிருந்தபொழுது, மாநிலமெங்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட நேர்ந்தது.  அப்போது திரண்ட அந்த கூட்டத்தைப் பார்த்த ஜெயலலிதா, இந்தக் கூட்டம் தனக்காக சேர்ந்த கூட்டம் என்றே நம்பத் தொடங்கினார்.     இதன் காரணமாகவே அவருக்கு முதலமைச்சர் கனவு வளரத் தொடங்கியது.  அந்த முதலமைச்சர் கனவு, தன்னை வளர்த்தெடுத்த எம்ஜிஆரையே ஓரங்கட்டும் அளவுக்கு முற்றியது.
MGR-Jayalalitha-movie
மூத்த பத்திரிக்கையாளர் சோலை, ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார்.     எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த நிலையில், சமாதானப்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தில் இருவருக்கும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.  அந்த சந்திப்பின்போது, கட்சியில் தனக்கு இருக்கும் பொறுப்புக்கு ஏற்ப, தன்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  எம்ஜிஆர் மறுக்கவும், கோபமாக வெளியேறினார் ஜெயலலிதா.   அவர் சென்ற பிறகு, சோலையிடம் எம்ஜிஆர், “எப்படிப் பேசுகிறாள் பார்த்தீர்களா ?” என்று வருத்தப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின், நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக அறிவித்தனர்.   ஜானகி அணி தனியே செயல்பட்டு வந்தது.   இருவரும் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறினர்.   30 ஜனவரி 1988 அன்று அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.     அதற்கு இரண்டு நாட்கள் கழித்துதான் சசிகலா போயஸ் தோட்டத்துக்குள் நிரந்தரமாக குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இரு அணிகளும் தொடர்ந்து சண்டையிட்டதால், தேர்தல் ஆணையம் 21 ஜனவரி 1989 அன்று நடந்த தேர்தலில், இரட்டை இலை  சின்னத்தை முடக்கியது.    ஜானகிக்கு இரட்டைப் புறா சின்னமும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.  ஜானகி அணி முழுக்க தோல்வியைத் தழுவ, ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது.    இரட்டை இலை சின்னம் மற்றும் எம்ஜியார் பெயருக்கு உள்ள புகழ் ஆகியவற்றை முதல் முறையாக உணர்ந்தார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் மீது அளவு கடந்த வெறுப்பு இருந்தாலும், அவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு, ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்துவதில் ஜெயலலிதா தவறியதில்லை.    தற்போதும் 2016 தேர்தலை மனதில் வைத்தே, எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்தியுள்ளார்.
2001 தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதாவோடு உடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்.   பிரச்சார சமயத்தில் திடீரென்று வேனை விட்டு கீழே இறங்கிய ஜெயலலிதா அங்கே கூடியிருந்த வயதான பெண்களிடம் பேசினார்.  அப்போது இரட்டை இலை சின்னத்தை மறவாதீர்கள் என்று கூறினார் ஜெயலலிதா.    அப்போது ஒரு வயதான பெண்மணி, “இது எம்ஜிஆர் சின்னம்தானேம்மா…. எங்களுக்கு தெரியும்.  எங்கள் ஓட்டு எம்ஜிஆர் சின்னத்துக்குத்தான்” என்று கூறியுள்ளார்.   டக்கென்று முகம் சிவந்த ஜெயலலிதா வேனில் ஏறியதும் சசிகலாவிடம், “ஜனங்களை எப்படி கெடுத்து வச்சிருக்கான் பாரு” என்று கூறியதை நேரில் பார்த்தவர் அந்த பத்திரிக்கையாளர்.       இந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது கோபம் எள்ளவர் ஜெயலலிதா.
இன்று எம்ஜிஆரின் புகழ்பாடும் ஜெயலலிதா, தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட எந்த புதிய திட்டத்துக்கும் எம்ஜிஆர் பெயரை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் அம்மா திட்டங்கள்தான்.
அடுத்ததாக ஜெயலலிதா கூறுவது என்னவென்றால், ”
எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காக தான்; தமிழக மக்களுக்காகத் தான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எனது தலைமையிலான அரசு மகத்தான சாதனைகளை மக்களுக்கு அளித்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உயர்வடையச் செய்து வரும் மன நிறைவோடு அ.தி.மு.க. ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்.”
எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை என்று பேசும் ஜெயலலிதாதான் கொடநாட்டில் 900 ஏக்கரில் மாளிகை, சிறுதாவூரில் 25.40 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாக்குமரியில் 1190 ஏக்கர் நிலம், திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் 300 ஏக்கர் நிலம், ஐதரபாத்தில் திராட்சைத் தோட்டம், மைலாப்பூரில் 1407 சதுர அடி கட்டிடத்தோடு கூடிய நிலம், கிண்டி எஸ்டேட்டில் டான்சி நிலம், மற்றும் சசிகலா பெயரில் ஆயிரக்கணக்கான நிலங்கள், ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளார்.   தனக்கென்று யாருமே இல்லை என்று கூறும் ஜெயலலிதா எதற்காக சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாஃபியா ஆட்களை உடன் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.   லஞ்ச ஒழிப்புச் சோதனையின்போது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து 600க்கும் மேற்பட்ட ஜோடி செருப்புகள், நூற்றுக்கணக்கான வாட்சுகள், பல நூற்றுக்கணக்கான பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கண்டுபிடித்தது.  தான் உயிர்வாழ்வதே இந்த இயக்கத்துக்காகத்தான் என்று கூறும் ஜெயலலிதா, யார் அனுப்பியது என்றே தெரியாத 3 லட்சம் டாலர்கள் மதிப்பிலான வரைவோலையை எதற்காக தனது மைலாப்பூர் கனரா வங்கியில் போட்டுக் கொண்டு, அதற்கு வருமான வரி செலுத்தினார் ?   சசிகலாவும், இளவரசியும் எதற்காக இன்னும் ஜெயலலிதாவோடு   வசிக்கிறார்கள் ?
சிறை செல்லும் சீமாட்டி முதல் பாகம்
இதர ஐந்து பாகங்கள் இணைப்பு 
jjsasikalanakeeran
உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறும் ஜெயலலிதா,  பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எப்படி அடாவடி செய்து கைப்பற்றினார் என்பதை நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் விலாவரியாகவே விவாதித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பேச்சு முழுக்க, பொய்யும் புரட்டும் நிறைந்தவையே என்பதற்கு அவரின் இந்த கடிதம் ஒரு சிறந்த உதாரணம்.    தமிழ் மக்களுக்காக உயிர் வாழ்பவர்தான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாராயக்கடைகளை திறந்து வைத்துள்ளார்.   தமிழ் மக்களை குடிகாரர்களாக்கி அழகு பார்க்கிறார்    குடியின் பிடியிலிருந்து தமிழக மக்கள் மீளாதவண்ணம் கவனமாக இருக்கிறார்.
தமிழக மக்களின் மகிழ்ச்சியை தனது லட்சியமாக வைத்திருக்கும் நபர்தான், தொடர்ந்து மூன்று முறை மின்கட்டணங்களை ஏற்றியதோடு, பால் விலை மற்றும் பஸ் கட்டணங்களை உயர்த்தினார்.   ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாள் முதல், தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.    தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை, வம்படியாக மருத்துவமனையாக மாற்றினார்.    அண்ணா நூலகத்தை மாற்ற முயன்று அதில் தோல்வியுற்றதால், அதை தற்போது பராமரிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார்.   தமிழக மக்களின் வளர்ச்சியை நோக்கமாக வைத்திருக்கும் ஜெயலலிதாதான், தமிழகத்தில் ஒரே ஒரு புதிய தொழிற்சாலை கூட கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடங்கப்படாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.   இவர்தான், தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்பதே அறவே இல்லாத நிலையை உருவாக்கியவர்.
மின்வெட்டு காரணத்தால் தமிழகத்தை இருட்டில் அமர்த்தினார் ஜெயலலிதா.    மின்வெட்டில் வாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் தேவைகள் அறிந்து, போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய மின் திட்டங்கள் அனைத்தும் தாமதம் செய்யப்பட்டுள்ளன.  சமீபத்தில் கூட உப்பூர் அனல் மின் நிலையத்துக்கான டெண்டருக்கான கடைசி தேதியை மூன்றாவது முறையாக தள்ளி வைத்திருக்கிறது மின் வாரியம்.     ஒரு நிறுவனம் கூட டெண்டரில் பங்கேற்க வரவில்லை என்பதுதான் இதற்கான காரணம்.    மின் வெட்டுத் திட்டங்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படாமல், நீதிமன்ற வழக்குகளிலும், கோப்புகளிலும் முடங்கிப் போய் கிடக்கிறது.  3 ரூபாய்க்கு மின்சாரம் கிடைக்க வேண்டிய இடத்தில் ரூபாய் 8 முதல் 12 வரை தனியாரிடமிருந்து வாங்கும் அவலச் சூழலுக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உட்கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குழிதோண்டி புதைத்தவர்.   இப்படி தமிழகத்தை பின்னோக்கி திருப்பி அழைத்துச் சென்றவர்தான் இன்று தமிழகத்தின் வளர்ச்சி பற்றி பேசுகிறார்.
நாடே வியந்து பாராட்டும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலம் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீட்டிற்கு வழிவகை செய்து, எண்ணற்ற புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்படுவதற்கும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்ற மன நிறைவோடு இந்த ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம்.
உலக முதலீட்டாளர் மாநாடு எவ்வளவு பெரிய மோசடி என்பது சவுக்கு தளத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.   2 லட்சத்து 42 ஆயிரம் கோடி என்று படோடாபமாக அறிவிப்புகளை வெளியிட்டாலும், இதில் ஆயிரம் கோடி கூட உருப்படியான முதலீடாக வந்து சேரவில்லை.  மேலும், இந்த எண்ணிக்கையே மோசடி  என்று விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.   எண்ணூர் மற்றும் உடன்குடி அனல் மின் நிலைய டெண்டர்களை குறைந்த விலைப்புள்ளிகள் அளித்திருந்ததால் சீனவாச் சேர்ந்த நிறுவனங்களுக்கே வழங்கியிருக்க வேண்டும்.  மாறாக, விதிகளை மீறி சட்ட விரோதமாக பிஎச்இஎல்  நிறுவனத்துக்கு வழங்கியதன் மூலம் 1526 கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததோடு அல்லாமல், நீதிமன்ற வழக்கில் சிக்கி இரண்டு திட்டங்களும் கரையேறாமல் காத்திருக்கின்றன.   தமிழகத்துக்கு தொடர்ந்து வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கும், குஜராத், நொய்டா போன்ற இடங்களுக்கும் தடம் மாறிச் செல்வது குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் இருக்கிறார் ஜெயலலிதா.   நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலை இழந்தனர்.   நோக்கியாவைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தனது விரிவாக்கத்தை குஜராத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுபோல பல்வேறு தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவே தயங்கிய வண்ணம் இருப்பதன் முக்கிய காரணமே, கட்சி நிதி என்ற பெயரில், ஜெயலலிதா வசூலிக்கும் பெருந்தொகைதான்.  இந்த பெருந்தொகைதான், தொழிலதிபர்களை அலறி ஓட வைத்துள்ளது.  இந்த விபரங்களெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரிந்தே நடக்கிறது.    ஆனால், இலவச ஆடு மாடு, மிக்சி கிரைண்டர் மற்றும் விலை குறைந்த இட்லி சப்பாத்தி வழங்குவதன் மூலம், மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என்ற திமிரிலேயே இருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா என்றதும் நினைவுக்கு வருவது என்ன ?  சொத்துக் குவிப்பு வழக்கு,  மகாமகம், சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரான ஆபாச போராட்டம், உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் நிறுத்தியது, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் விஜயன் மீதான தாக்குதல், தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் மீதான தாக்குதல், அமைச்சர் ப.சிதம்பரம் மீது தாக்குதல், நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு, வளர்ப்பு மகன் திருமணம், அதே வளர்ப்பு மகன் மீது ஹெராயின் வழக்கு, செரினா மீது கஞ்சா வழக்கு, ஆடிட்டருக்கு செருப்படி, கருணாநிதி கைது, அதையொட்டி நடந்த பேரணியில் ரவுடிகளை விட்டுத் தாக்குதல், எண்ணிலடங்கா ஊழல் வழக்குகள் …. இவைதானே நம் நினைவுக்கு வருவன ?
அடுத்ததாக ஜெயலலிதா,  “எனது தலைமையிலான அரசு, துறை தோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப்பணிகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்குத் தொண்டாற்றுங்கள். பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய நிர்வாகிகளும், நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்களும், தொண்டர்களும் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள். அ.தி.மு.க.விற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும்.
ஜெயலலிதா மற்றும் நரேந்திர மோடியின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க முடியும்.    நான், எனது, என்னுடைய என்ற வார்த்தை பிரயோகங்கள் அவர்களின் பேச்சுக்களில் அதிகமாக இருக்கும்.     ஜெயலலிதா அரசு மட்டுமல்ல.  அனைத்து அரசுகளும், தேர்ந்தெடுக்கப்படுவது, அனைவரது உழைப்பால்தான்.  தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கொடுக்கப்படும் பொறுப்பு மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் செலவு செய்து, மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப் படுத்துவதே.    மக்கள் வரிப்பணத்தை நிர்வகிக்க வழங்கப்படும் ஒரு அதிகாரம்.  அவ்வளவே.   அதை விடுத்து விட்டு, ஜெயலலிதாவின் தகப்பனால் ஜெயராமோ, அவர்  தாயார் சந்தியாதேவியோ, அல்லது ஜெயலலிதாவோ சம்பாதித்த தொகையில் செலவு செய்வதுபோல, ஜெயலலிதா எப்போது பார்த்தாலும், என் அரசு, நான் என்று பேசுவது அவரது உச்சகட்ட அகந்தையை மட்டுமே காட்டுகிறது.
என்னைத்தவிர, வேறு யாரும் கிடையாது என்ற ஆணவத்தின் உச்சகட்டமே இத்தகைய பேச்சுக்கள்.   நலப்பணிகளை ஆற்றுவதாக கூறும் ஜெயலலிதாதான் ஆண்டுக்கு இரண்டு முறை அரசு செலவில், கொடநாட்டில் அமர்ந்து கொண்டு கோலோச்சுகிறார்.   இவரது வெட்டிச் செலவு இல்லாமல், அடிமைகளும் அதிகாரிகளும், அரசு செலவில் கொடநாடு சென்று மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்.
இப்படி மக்கள் விரோத நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார் ஜெயலலிதா.    முட்டாள் தமிழக மக்கள், பணத்தை வாங்கிக் கொண்டு தன்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார் ஜெயலலிதா.  ஆனால் இதே ஜெயலலிதாவையே பர்கூரில் தோற்கடித்தவர்கள் தமிழக மக்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார் ஜெயலலிதா.
தற்போது ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு சவுக்கடியைத் தருவதற்கு மக்கள் தயாராகியே வருகிறார்கள்.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். 

கருத்துகள் இல்லை: